![Image result for சேரன்மகாதேவி அம்மைநாதர் கோவில்](https://img1.dinamalar.com/Kovilimages/T_500_1050.jpg)
சேரன்மகாதேவி அம்மைநாதர் கோவில் திருநெல்வேலி மாவட்டம் சேரன்மகாதேவியிலுள்ள சிவாலயமாகும். இச்சிவாலயம் நவகைலாயங்களில் இரண்டாவதாக சந்திரனுக்குரியத் தலமாகக் கருதப்படுகிறது.
தலச் சிறப்புகள் :
உரோமச முனிவர் தாமிரபரணி தென்கரையை அடைந்து, அங்கு ஆலமரத்தடியில் சிவலிங்கத்தை வைத்து வழிபாடு செய்த போது, சிவபெருமான் முனிவருக்குக் காட்சி கொடுத்ததாக கூறப்படுகிறது.
கோவில் மணிமண்டபத் தூணில் லிங்க பூஜை செய்யும் உரோமச முனிவர் திருவுருவம் செதுக்கப்பட்டுள்ளது. சகோதரிகள் இருவர் நெல் குத்தி, அரிசி புடைக்கும் சிற்பம் காட்சி வடக்கு ஒரத்தூணில் உள்ளது.
கோவில் கல்வெட்டுகளில் சேரன்மகாதேவி என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த கல்வெட்டுகள் பாண்டியர் காலத்துக் கல்வெட்டுகள்.
இக்கோவிலை நந்தனார் தரிசித்ததற்கு அடையாளமாக இவரது சிற்பம் கொடிமரத்திற்கு கீழேயுள்ள பீடத்தில் இருக்கிறது. இவர் இங்கிருந்து சுவாமியை வணங்கியபடி இருக்க, நந்தி சற்று விலகியிருக்கிறது. கொடிமரம் அருகில் நின்று விலகிய நந்தியையும், சிவனையும் தரிசிக்கலாம் என்பது விசேஷம்.
தலப்பெருமை :
சிவதரிசனம் பெற விரும்பிய உரோமச முனிவர், அகத்தியரின் ஆலோசனைப்படி தாமிரபரணி நதியில் ஒன்பது மலர்களை இட்டார். அதில் இரண்டாவது மலர் இத்தலத்தில் கரை ஒதுங்கியது. இங்கு, உரோமசர் லிங்க பிரதிஷ்டை செய்து சிவனை வழிபட்டார். பிற்காலத்தில், அந்த லிங்கம் ஒரு அரசமரத்தின் கீழ் இருந்தது. இப்பகுதியில் வசித்த சகோதரிகளான சிவபக்தைகள் இருவர், நெல் குத்தி, அரிசி வியாபாரம் செய்து வந்தனர். தினமும் இத்தல லிங்கத்திற்கு பூஜை செய்து வணங்கிய பின்பே, தங்கள் வேலையை துவங்குவர். இந்த லிங்கம், கோவிலில் இல்லாமல், மரத்தடியில் யாராலும் கவனிக்கப்படாமலேயே இருக்கிறதே என்று ஆதங்கப்பட்டு சிவனுக்கு கோவில் கட்ட நினைத்தனர். ஆனால் அவர்களிடம் போதிய வருமானம் இல்லை.
அவர்கள் தங்களது உழைப்பின் மூலம் கிடைக்கும் பணத்தை சேர்க்க ஆரம்பித்தனர். அவர்களது பக்தியை கண்டு மகிழ்ந்த சிவன், ஒருசமயம் அடியார் வடிவில் அப்பெண்களின் வீட்டிற்கு சென்றார். அவரை வரவேற்ற சகோதரிகள் உபசரித்து, உணவு பரிமாறினர். அப்போது வீட்டில் விளக்கு எரியவில்லை. அதை சுட்டிக்காட்டி மங்களம் இல்லாத இவ்வீட்டில் நான் சாப்பிடமாட்டேன் என்று எழுந்தார். சகோதரிகள் பதறிப்போய் அவசரத்தில் விளக்கை தேடினர். விளக்கு தென்படாததால் சமையலுக்கு வைத்திருந்த தேங்காயை உடைத்து அதில் நெய்விட்டு, விளக்கேற்றினர். மகிழ்ந்த சிவனடியார் சாப்பிட்டுவிட்டு, சுயரூபத்தில் காட்சி தந்தார். அதன்பின்பு அவர்களது இல்லத்தில் செல்வம் பெருகியது. அதைக் கொண்டு இங்கு கோவில் எழுப்பினர்.
பிராத்தனை :
அரிசி வியாபாரம் செழிக்க, இங்கு வந்து அரிசி தானம், அன்னதானம் செய்கின்றனர்.
திருமண தோஷம் உள்ளவர்கள், மாதுளம் பழச்சாறு அபிஷேகம் செய்து, அம்பாள் சன்னதி முன்பு தட்டில் அரிசியை பரப்பி, அதன் மத்தியில் உடைத்த தேங்காயில் நெய் விட்டு தீபம் ஏற்றுகின்றனர்.
சுவாமி, அம்பாளுக்கு அபிஷேகம் செய்தும், வஸ்திரம் அணிவித்தும், நேர்த்திக்கடன் நிறைவேற்றலாம்.
திருவிழா :
இக்கோவிலில் ஐப்பசி மாதத்தில் திருக்கல்யாண உற்சவம் மற்றும் திருவாதிரைத் திருநாளும், சிவராத்திரி விழாவும் சிறப்பாக நடைபெறுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக