Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

புதன், 22 ஜனவரி, 2020

சிவபுராணம்..! பகுதி 13


  தாட்சாயிணி தேவி தன் பதியிடம் செல்ல முற்பட்ட போது பிரஜாபதியான தட்சன் தன் மருமகனாகிய எம்பெருமானை அவமானப்படுத்தும் விதமாக பேச ஆரம்பித்தார். அதுவரை பொறுமை காத்த தாட்சாயிணியால் இனியும் பொறுமை காத்தல் என்பது அவசியமற்றது என்று உணர்ந்தார்.

பொறுமை இழந்த தாட்சாயிணி தேவி அட மூடனே சிவனை பற்றி அறியாமல் இவ்விதம் பேசிய உமக்கு அதற்கான தண்டனை கிடைக்கும் என்றும், இனியும் உன்னால் உருவான இந்த உடல் எனக்கு தேவையில்லை என்றும் கூறினார்.

மேலும், எதை நினைத்து எதற்காக இந்த யாகத்தை நீர் வளர்த்தாயோ அதன் பலன்கள் அனைத்தும் பயனற்று போகட்டும் என்று சபித்தார். பின் தன் கணவனின் வார்த்தைக்கு மதிப்பு கொடுக்காமல் இவ்விடம் நான் வந்தமைக்கு எனக்கு நேர்ந்தவை சரியே என்று எண்ணி, தன்னை மன்னிக்கும்மாறு தன் பதியான கணவரிடம் மனதார வேண்டி தன் இன்னுயிரை தட்சன் வளர்த்த யாகத்தில் உள்ள நெருப்பில் இறங்கி உயிர் நீத்தார் தாட்சாயிணி தேவி.

தாட்சாயிணி தேவி உயிர் இழந்ததை தன் ஞானப் பார்வையால் அறிந்த சிவபெருமான் செய்வது அறியாது நின்றார். தனது அன்பிற்கு உரிய வரும் தன்னில் பாதியுமான சதி தேவியின் இறப்பு அமைதியான சிவபெருமானை ருத்ரம் கொள்ள வைத்தது.

அந்த ருத்ரத்தில் சிவன் ருத்ர தாண்டவம் ஆடிக்கொண்டு இருந்தார். அவரது ருத்ர தாண்டவத்தில் இந்த பிரபஞ்சமே நிலை கொள்ளாமல் அழிந்து விடுமோ என்னும் நிலை உருவாயிற்று. சிவனின் ருத்ரத்தில் இருந்து வீரபத்திரர் தோற்றுவிக்கிறார்.

சிவபெருமான் வீரபத்திரரிடம் அந்த வேள்வியில் கலந்து கொண்ட அனைவரையும் கொல்ல உத்தரவு பிறப்பித்தார். சிவனிடம் இருந்து உத்தரவு கிடைத்த மாத்திரத்தில் இருந்து வேள்வி நடந்த இடத்தினை நோக்கி செல்கிறார் வீரபத்திரர்.

வீரபத்திரர் வருகையை அறிந்த காசியப்ப முனிவர் பிரஜாபதியான தட்சனிடம் சிவனின் கோப வடிவமான வீரபத்திரர் இங்கு வந்துக் கொண்டு இருப்பதை தெரிவிக்கிறார்.

ஆனால், பிரஜாபதியான தட்சன் அதை பொருட்படுத்தாமல் தன்னிடம் மாபெரும் படையே இருக்கிறது என்ற இருமாப்புடன் இருந்தார். முனிவரும் எவ்வளவு சொல்லியும் வீரபத்திரரின் பலம் அறியாமல் இருந்தார்.

தட்சன் தன் படைத் தளபதியை அழைத்து படையை தயார் நிலையில் வைத்துக் கொள்ளுங்கள், வந்து கொண்டிருக்கும் வீரபத்திரரை கொல்ல வேண்டும் என்று ஆணை பிறப்பித்தார். இப்படையுடன் காசியப்ப ரிஷியையும் உடன் செல்லுமாறு உரைத்தார்.

பிரஜாபதியின் மாபெரும் படை சினத்துடன் கொல்வதற்காக ஆணையுடன் வந்து கொண்டு இருந்த வீரபத்திரர் முன்னிலையில் எதுவும் செய்ய முடியாமல் தோல்வியுற்றன.

வீரபத்திரர், படையில் இருந்த ஒருவரையும் விடாமல் அனைவரையும் கொன்றார். இவரின் வேகத்திற்கு ஈடுகொடுக்க முடியாமல் அனைவரும் மடிந்தனர். வீரபத்திரர் வலிமையை உணர்ந்த தட்சன் இனி யாரையும் நம்பி பயனில்லை நானே சென்று அவனை தடுத்து அவ்விடத்திலே அவனை கொன்று விடுவதாக சென்றார். போர்க்களத்திற்கு வந்த தட்சன் தன்னுடைய சக்திகள் அனைத்தையும் பிரயோகப்படுத்தி வீரபத்திரரை கொல்ல அனுப்பினார்.

ஆனால், அவரின் முன்னிலையில் இவரின் சக்திகள் அனைத்தும் தோற்று போனது. இனி நம்மால் எதையும் செய்ய இயலாது என உணர்ந்த தட்சன் வேள்வி நடக்கும் இடத்திற்கு சென்று திருமாலை கண்டார்.

இருப்பினும் எதற்கும் கால அவகாசம் இன்றி போனது. ஏனெனில் வீரபத்திரர் வேள்வி நடந்த இடத்திற்கு வந்தார். அவர் வேள்வியில் இருந்த யாரையும் விடாமல் அனைவரையும் கொன்று குவித்தார். இறுதியாக பிரஜாபதியான தட்சனின் சிரசை வீரபத்திரர் வெட்டினார். வெட்டிய சிரசானது தட்சன் வளர்த்த யாகத்தில் விழுந்து ஏறிந்தது.

தட்சனை கொன்ற வீரபத்திரர் அமைதியாக அதே இடத்தில் நிற்க பரம்பொருளான சிவபெருமான் தனது ருத்ர தாண்டவத்தை விடுத்து தன் அன்பு மனைவியின் இறந்த சரீரத்தை காண வேள்வி நடந்த இடத்திற்கு உதயமானார்.

அப்போது அவரின் கோப வடிவமான வீரபத்திரர் அவருடன் இணைந்தார். பல பேரின் இரத்த குவியல்களுக்கு நடுவிலே சிதைவுற்ற தன் இல்லத்தாளின் உடலை கண்ட சிவபெருமான் செய்வது அறியாது நின்றார். அவ்விடத்திற்கு திருமால் உதயமாகி தட்சன் ஒருவன் இழைத்த பிழைக்கு இவ்வளவு உயிர் சேதங்கள் போதும் என்று கூறி சிவபெருமானை அமைதி பெறச் செய்தார்.

அமைதி நிலைக்கு திரும்பிய சிவபெருமான் பிரஜாபதியான தட்சனை தவிர்த்து அங்கு இறந்தவர்கள் அனைவரையும் உயிர் பெறச் செய்தார். சிவனின் அருளால் உயிர் பெற்ற அனைவரும் சிவனின் துதிகளை பாடினார்கள். தட்சனின் மனைவியான பிரசுதி சிவபெருமானிடம் தன்னுடைய கணவரான தட்சனை உயிர் பெற செய்து அருளுமாறு வேண்டி நின்றார்.

அவரின் வேண்டுதலை ஏற்றுக்கொண்ட கருணைக் கடலான சிவபெருமான், தன் அருகில் பலியிடுவதற்காக வைக்கப்பட்ட ஆட்டின் தலையை வெட்டி தட்சனின் உடலோடு இணைத்து அவருக்கு உயிர் அளித்தார்.

உயிர் பெற்ற தட்சனும் தன்னுடைய பிழையை மன்னித்து அருளுமாறு சிவனின் பாதத்தில் விழுந்து அருளை பெற்று சிவ துதிகளை பாட ஆரம்பித்தனர். ஆனால், எம்பெருமானோ யாவரின் துதியிலும் நிலை கொள்ளாமல் தன் மனைவியின் உடல் அருகில் சென்றார்.

சிவபுராணம் நாளையும் தொடரும்....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக