வேந்தனான இமவானின் கூற்றுகளை ஏற்றுக்கொண்ட நாரதர், தேவி இருக்கும் இடத்தை காண்பிக்கும் பொருட்டு பாதைகளை காட்டினார். வனத்தில் அனைத்து பகுதிகளிலும் அலைந்து தேவியை தேடிய வீரர்கள் ஒரு பகுதியை மட்டும் தவிர்த்தனர். ஏனெனில், அப்பகுதியில் பாதைகள் மிகவும் நெருக்கமாகவும், விண்ணைத்தொடும் அளவிற்கு உயரமாகவும் இருந்தது. அவ்விடத்தில் மானிடர்கள் யாவரும் செல்ல முடியாதபடியான சூழ்நிலை நிலவியது.
நாரதரை தொடர்ந்து வந்த மன்னனிடம் அனைவரும் செல்ல தயங்கிய வனத்தின் பாறைகள் மற்றும் பனி அடர்ந்த பகுதியை காண்பித்தார். இப்பகுதியிலேயே தங்களின் மகள் இருப்பதாக உரைத்தார். ஆனால் தங்களுடன் வந்த வீரர்களை விடுத்து தாங்களும், நானும் மட்டுமே செல்ல முடியும் என்று நாரதர் கூறினார். நாரத முனிவரின் கூற்றுகளை ஏற்றுக்கொண்டு தன் படை வீரர்களை இவ்வுடமே பாதுகாப்புக்காக விடுத்து வேந்தனான இமவான் நாரதருடன் சென்றார்.
வனத்தின் மையத்தில் மையலால் மயங்கிய தேவியை காண செல்கிறோம் என மனதில் எண்ணினார் நாரதர். தனது ராஜ்ஜியத்தில் வனத்தின் நடுவே இப்படியான இடம் இருப்பதை கண்டு மன்னர் வியந்து நின்றார். இவ்விடத்திற்கு வர அனைவரும் அச்சம் கொள்ள என் மகள் எவ்விதம் இவ்விடத்திற்கு வந்தார் என வியந்தார். இதுவே காலத்தின் கட்டாயமாகும் என நாரதர் பதில் உரைத்தார்.
சிறிது தூர பயணத்தில் வனத்தின் மையப் பகுதியை அடைந்தனர். பல பாறைகள் ஒன்றிணைந்து உருவாகிய ஒரு குகையின் வெளியே தன்னுடைய அன்பு மகளான பார்வதிதேவி சுய நினைவின்றி மயக்கமுற்று இருப்பதை கண்ட இமவான் தனது மகளின் அருகில் விரைந்து ஓடி பார்வதி.. பார்வதி.. என கூறி மயக்கத்தில் இருந்த மகளை எழுப்ப முயன்றார்.
நாரதரோ தேவியை அரண்மனைக்கு அழைத்து செல்ல வேண்டும் என கூறினார். நாரதரின் கூற்றுக்கு பின்னே சுய நினைவுக்கு வந்த மன்னன் தன்னுடைய அன்பு மகளை கையில் ஏந்திய போது அவர்கள் இருந்த இடத்தையும், சுற்றுப்புற மாறுபாட்டையும் உணர்ந்தார் வேந்தனான இமவான்.
வனத்தில் நுழைந்த போது இருந்த குளுமை இவ்விடத்தில் இல்லாததையும் எங்கும் கிடைக்காத மன அமைதி இவ்விடத்தில் கிடைக்கின்றதையும் உணர்ந்தார் இமவான். வரும் வழியில் இடையூறுகளாக இருந்த பனி பாறைகள் யாவும் விலகி வழி தந்தன. நிகழ்வது யாதும் புரியாமல் தன் மகளை கையில் ஏந்திய வண்ணம் அரண்மனைக்கு நாரதருடன் வேந்தனான இமவான் சென்றார்.
அரண்மனையில் தன் மகளின் நிலையை கண்டதும் தாயான மேனை பதற்றத்துடன் தன் மகளை வாரி அணைத்து என்ன வாயிற்று என் மகளுக்கு என புலம்ப ஆரம்பித்தார். பின் இமவான் தன் மனைவியை அமைதி கொள்ளச் செய்து வைத்தியரின் பணியை செய்ய விடுமாறு கூறினார்.
வைத்தியரும் தேவியை பரிசோதித்து பின் சில மூலிகை இலைகளை அரைத்து சாறாக மாற்றி கொடுத்தார். பார்வதிதேவியின் நிலை அறிந்த வைத்தியர் இமவானிடம் ஏதோ ஒரு விதமான அதிர்ச்சியினால் தேவி மயக்கம் அடைந்து உள்ளார் என்றும், உடல் நிலை சிறிது நேரத்தில் சீர்பெறும் எனவும் கூறிச் சென்றார்.
தேவி மயக்கம் கொண்ட இடத்தில் இருந்த சூழ்நிலை மாற்றங்கள் மற்றும் அங்கு கிடைக்கப்பெற்ற அனுபவங்களையும் ரிஷியான நாரதரிடம் கூறி அதற்கான விளக்கங்கள் கூறுமாறு இமவான் கேட்டார். இவ்வுலகில் உள்ள அனைத்து உயிர்களையும் படைத்து, அவைகள் வாழ்வதற்கான இந்த பூவுலகையும் படைத்து, மூம்மூர்த்திகளில் அழித்தல் தொழிலை செய்பவருமான எம்பெருமானான சிவபெருமான், யோகத்தில் அமர்ந்துள்ள இடம் தான் அந்த வனத்தின் மையத்தில் உள்ள குகை ஆகும் எனக் கூறினார்.
எம்பெருமானான சிவபெருமான் தனது அரசாட்சியில் உள்ள வனத்தில் இருப்பதை அறிந்த இமவான் வேந்தர் மட்டற்ற மகிழ்ச்சி அடைந்தார். இவ்வேளையில் நாரத ரிஷி, வேந்தரே! எனக்கு தாங்கள் ஒரு உபயம் செய்து தருவதாக கூறியுள்ளீர் என தனது பேச்சை தொடர்ந்தார்.
நாரதரின் பேச்சை கேட்ட இமவான், என்ன உபயம் நான் தங்களுக்கு செய்ய வேண்டும் என கூறுங்கள் அதை இக்கணமே செய்து முடிக்கிறேன் என்றார். இக்கணத்தில் செய்து முடிக்க முடியும் செயல் அதுவன்று. அதற்கு பதிலாக தாங்கள் அனுமதி மட்டும் கொடுக்க வேண்டும் என்று கூறினார் நாரதர்.
பிரம்மதேவர் தேவேந்திரனுக்கு இன்னல்களில் இருந்து விடுபட வேண்டுமாயின் சிவபெருமான் தியான நிலையில் உள்ள குகையில் அவருக்கு பணிவிடைகள் செய்து வரும் மங்கையான பார்வதி தேவியின் மீது மையல் கொள்ளுமாறு செய்தால் போதுமானது என்று ஆலோசனை கூறினார்.
ஏனெனில், சிவபெருமானின் புத்திரர்களை ஈன்றெடுக்கும் வல்லமை அவரிடமே உள்ளது எனக் கூறினார். பிரம்ம தேவர் கூறிய செயலை யாரிடம் கொடுப்பது என தேவேந்திரன் சிந்தனையில் ஆழ்ந்தார். சிந்தனையில் ஆழ்ந்த போது அவ்விருவருக்கும் ஒருவர் மட்டுமே நினைவுக்கு வந்தார்.
சிவபுராணம் நாளையும் தொடரும்....
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக