Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

புதன், 22 ஜனவரி, 2020

சிவபுராணம்..! பகுதி 19


யக்கத்தில் இருந்து எழுந்த பார்வதி தேவிக்கு கண்ணின் முன் தோன்றிய உருவங்கள் யாவும் தாம் இதுவரை கண்டிராதவையாவும், தம்முடைய மனம் இதுநாள் வரை காண நினைக்கும் தவம் மேற்கொண்டு இருந்த சிவபெருமானை தம் கண் முன் தோன்றி மறைந்ததும் விசித்திரமாகவே இருந்தது. அந்த குகையில் அவருடன் தொடர்புடைய ஏதோ ஒன்று அங்கு இருப்பதாக எண்ணினாள்.

நாரத ரிஷியின் கூற்றுகளின் பொருளை அறியாத இமவான் வேந்தர் எந்த பணியை செய்து முடிக்க யாருக்கு அனுமதி வழங்க வேண்டும் என்று கூறுங்கள் என்று கூறினார். தங்களின் மகளான பார்வதி தேவிக்கு அந்த அனுமதி கொடுக்க வேண்டும் என்று நாரதர் கூறினார். எப்பணியை செய்ய வேண்டும் என்று கூறுங்கள் அப்பணியை நானே செய்கிறேன் என்றும், எம் மகள் இதில் ஈடுபட வேண்டாம் என்றும் ரிஷி அவர்களிடம் வேந்தர் கூறினார். இது தங்களால் முடியாத காரியம் ஆகவே தான் நான் உங்களின் மகளுக்கு அனுமதி அளித்து அதை செய்து முடிக்க வேண்டும் என்று கூறுகிறேன் என்றார் ரிஷி முனிவர்.

பிரம்ம தேவர் என்னிடம் உரைத்த செயலை செய்ய வல்லவர் ஒருவரே. அவரால் மட்டுமே இப்பணியை செய்து முடிக்க இயலும் என எண்ணினார் தேவேந்திரன். அப்பணியை செய்து முடிக்கக்கூடிய வல்லமை கொண்ட ஒருவர் தான் காம தேவன் ஆவார். தேவேந்திரன் அவரை எண்ணிய கணப்பொழுதில் காமதேவன் ரதி தேவியுடன் அங்கு உதயமானார்.

நாரதர் இமவானிடம், நாம் தேவியை கண்ட குகையில் தியான நிலையில் உள்ள சிவபெருமானுக்கு தேவி அவர்கள் தேவையான பணிவிடைகளை செய்து தர வேண்டும் என்பதே நான் கேட்ட உபாயம் ஆகும் என்று கூறினார். தம் மகள் சிவபெருமானுக்கு பணிவிடைகள் செய்ய போவதை அறிந்த இமவான் மன்னரும் மிகவும் மகிழ்ந்தார்.

நான் இப்பொழுதே என்னுடைய மகளுக்கு சென்று கூறி தேவியை அனுப்பி வைப்பதாக கூறினார். மயக்கத்தில் இருந்த மகளை காண அன்னையான மேனை தேவியின் அறைக்கு சென்றார். அங்கு தேவி அவர்கள் எழுந்து ஏதோ குழப்பமான நிலையில் இருப்பதை உணர்ந்த மேனை தேவியிடம் என்னவாயிற்று மகளே ஏதாவது விபரீதம் உண்டாயிற்றா? என வினவினார்.

தேவி அவர்கள் தன் தாயிடம் தம் கண் முன் தோன்றிய பிம்பங்களையும் அதன் உயிரோட்டமான வலிகளையும் பற்றி கூறினார். சிவனின் நினைவுகளை பற்றி பார்வதி தேவி கூறியதும் சினம் கொண்டாலும் தன் மகளின் முன்னிலையில் எதையும் காட்டாமல் அமைதி கொண்டு ஓய்வு எடுப்பாயாக என்று கூறி மகளை சமதானப்படுத்தினார். அவ்வேளையில் தந்தை நாரத ரிஷி உரைத்த பணியை செய்யும் பொருட்டு தன் மகளிடம் உரைக்க தேவியின் அறைக்கு வந்தார்.

இமவான் பார்வதி தேவியை கண்டதும் நாரதர் கூறிய பணியை தன் மகளிடம் கூறினார். பார்வதி தேவி அந்த குகையில் யார் இருப்பதாக நாரத ரிஷி கூறினார் என வினவினார். அந்த குகையில் இந்த பிரபஞ்சத்தின் பரம்பொருளான சிவபெருமான் கடுமையான தவ நிலையில் இருப்பதாக கூறினார்.

இதை கேட்டதும் பார்வதி தேவி மிகவும் மகிழ்ச்சி அடைந்தார். ஏனெனில், தன்னுடைய இளம் வயதில் இருந்து சிவனை பற்றிய சிந்தனைகளும், சிவ எண்ணங்களும் மென்மேலும் அதிகமாயின. தன்னுடைய மனதில் பதியாக எண்ணிய சிவபெருமானுக்கு பணிவிடை செய்வதில் மிகவும் விருப்பத்துடன் இருந்தார்.

ஆனால், பார்வதி தேவியின் தாய் சிவனுக்கு என் மகள் பணிவிடைகள் செய்வதில் விருப்பம் இல்லை என்றும், தன்னுடைய மகள் அங்கு செல்ல மாட்டாள் என்றும் கூறினார். மேலும், தன்னுடைய மகளுக்கு விவாகம் செய்ய வேண்டும் எனக் கூறினார்.

இதை கேட்டதும் பார்வதி தேவியும், இமவான் மன்னரும் அதிர்ச்சி அடைந்தனர். இமவான் மன்னர் தன்னுடைய மனைவியை சமாதானப்படுத்த முயன்றார். இருப்பினும் எவ்விதமான இனிமையான சொற்களுக்கும் உடன்பட மறுத்தார் அன்னையான மேனை தேவி.

தேவேந்திரன் முன் தோன்றிய காமதேவன் தேவேந்திரனை பணிந்து நின்றார். அமரரே நான் ஏதாவது உபயம் செய்ய வேண்டுமோ என வினவினார். இந்த பிரபஞ்சத்தில் என் மனதில் எண்ணிய செயலை செய்து முடிக்கக்கூடிய செயல் வல்லமை உனக்கே உள்ளது. பிரம்ம தேவர் எனக்கு அளித்த ஆயுதங்கள் செயல் இழந்து போனாலும் என் நண்பனான காமதேவன் நீர் என்றும் செயல் இழக்கமாட்டாய் என்று கூறினார் தேவேந்திரன்.

அமரர்களுக்கு அதிபதியான தங்களுக்கு ஏதாவது சங்கடங்கள் உண்டாயின் அதை நிவர்த்தி செய்யவே நாங்கள் உள்ளோம் என்றும், இதில் என்னை தாங்கள் பெருமைப்படுத்துவதை விட தங்களுக்கு இந்த காமதேவன் செய்ய வேண்டிய பணியை அளித்தால் அதை செவ்வனே செய்து முடிப்பதாக கூறினார்.

சிவபுராணம் நாளையும் தொடரும்....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக