இனி மேற்கொண்டு நாம் தாமதிக்கும்
ஒவ்வொரு கணமும் நம் அழிவை உறுதிப்படுத்தும் என்றும் இமவான் மன்னன் மீது படையெடுக்க
தனது படைகளை தயார் நிலையில் இருக்க தாரகாசுரன் உத்தரவிட்டான். அவ்வேளையில்
அசுரர்களின் குருவான சுக்கிராச்சாரியார் அசுர சபைக்கு வருகைத் தந்தார்.
சிவபெருமானை காணும் மகிழ்ச்சியில்
பார்வதி தேவி சிறந்த முறையில் சிகை அலங்காரம் செய்து கொண்டு வாசனை உள்ள மலர்களை
சூடி மஹாதேவரான சிவபெருமானுக்கு கனிகளை கையில் ஏந்திய வண்ணம் தந்தையின் அனுமதியோடு
சிவபெருமான் யோக நிலையில் உள்ள குகைக்கு செல்ல ஆயத்தமானார்.
அப்போது பார்வதி தேவியின் அன்னையான
மேனை தன் மகளை கண்டு மிகவும் மகிழ்ந்தார். தன் மகளை மணக்கக்கூடிய இராஜ குமரன்
விந்திய நாட்டு இளவரசன் என்று கூறினார். இந்நொடி வரை மிகவும் மகிழ்வாக இருந்த
பார்வதி தேவி இச்செய்தியால் ஐயம் மற்றும் அதிர்ச்சி கொண்டார்.
சிவபெருமானுக்கு பணிவிடை செய்து விட்டு
வருவாயாக என தாய் கூறியதை கேட்டவுடன் தான் தேவி சுயநினைவிற்கு வந்தார். நான்
விரைவில் உனக்கான பதியை கண்டு விவாகம் செய்து வைக்கிறேன் என்று தாயான மேனை
கூறினார்.
அசுரலோகத்தில் அசுர வீரர்கள் போருக்கு
தயாராக இருப்பதை கண்ட சுக்கிராச்சாரியார் யார் மீது படையெடுக்க உள்ளாய் என்று
தாரகாசுரனிடம் கேட்டார். அந்த தேவர்கள் இந்நாள் வரை எனக்கு தெரியாமல் செய்த செயலை
தனது ஒற்றர்கள் மூலம் அறிந்ததை தனது குருவிடம் கூறினார்.
மேலும் பார்வதி தேவி உயிரோடு இருக்கும்
பட்சத்தில் எனது அழிவிற்கான வாய்ப்புகள் உள்ளன. எனவே, பர்வத ராஜ்ஜியத்தை அழித்தால்
சிவன் என்றும் யோகி ஆவார் என கூறினார். இதைக்கேட்ட சுக்கிராச்சாரியார் இவ்விதம்
போர் புரிவது என்பது உசிதமானதல்ல என்று கூறினார்.
அசுர சபையில் தாரகாசுரன் தனது
குருவுடன் வாதங்களில் ஈடுபட்டு அவரை அவமதித்து பேசினான். நீங்கள் எங்களுக்கு நன்மை
புரிவதற்காக வந்தீர்களா அல்லது தேவர்களுக்கு உதவி புரிகிறீர்களா என்று கேட்டான்.
மேலும் நான் உங்களை கொன்று விட்டால்
நீங்கள் தவம் இருந்து பெற்ற சஞ்சீவினி மந்திரத்தை யாரை கொண்டு பிரயோகம் செய்து
உயிர் பெற்று வருவீர்கள் என அவமதித்து பேசிக்கொண்டு இருந்தான் தாரகாசுரன்.
மேலும், இமவான் மன்னன் மீது போர்
தொடுப்பது உறுதி என்று உரைத்துக் கொண்டு இருந்தான். நிதானம் கொண்ட அசுர குரு நீர்
போர் தொடுத்தால் உனக்கு தோல்வி நிச்சயம் என்று சொன்னார். இதை சற்றும் எதிர்பாராத
தாரகன் தன் குருவின் பேச்சால் மிகுந்த கோபம் கொண்டு அவரை வீழ்த்துவதற்காக வாளை
ஓங்கினான்.
தாரகனின் செயலால் கோபம் கொண்ட அசுர
குரு அவனை தனது தவ வலிமையால் தடுத்து அவனது புலன்கள் செயல்படா வண்ணம் அவனை மந்திர
வலிமையால் கட்டினார்.
நீ வேந்தன் ஆயினும் என் சீடர்களில்
சிறந்தவன் என்ற போதும் நான் உன்னுடைய குரு. அதிகாரம் மிகுந்த வேந்தனாக இந்த அசுர
குலத்திற்கு நீ திகழ்ந்தாலும் என்றுமே நீ என் சீடனே அதை நினைவில் நிறுத்தாமல்
என்னை கொல்வதற்கு வாளை ஓங்குகிறாயா மூடனே என அசுர குரு உரைத்தார்.
தாயின் கூற்றுகளால் மிகவும் சோர்ந்து
குழப்பமான மனநிலையில் சிவபெருமானுக்கு பணிவிடை செய்வதற்கு தேவையான பொருட்களை
மறந்து தன்னந்தனியே வனத்தில் சென்றார்.
என் மனதில் சிவபெருமானே நிறைந்து
இருக்கிறார். அவரில்லாமல் என் வாழ்க்கை முழுமை அடையாது என்று எண்ணிய வண்ணம்
வனத்தில் உலாவிக்கொண்டு இருக்கையில் ஒரு முனிவரின் உரையாடல் கேட்டு அவரின்
ஆசிரமத்தை நோக்கி சென்றார் பார்வதி தேவி.
பார்வதி தேவியை கண்டதும் முனிவரான
ததிசி மிகவும் மகிழ்ந்தார். ஆனால், தேவியின் முகத்தில் காணப்பட்ட குழப்பமான நிலையை
உணர்ந்து தேவியிடம் வினவினார். இருப்பினும் தேவி தனது மனதில் இருந்த குழப்பங்களை
சொல்ல தயங்கினார்.
அகிலத்திற்கு நாயகியான நான் வணங்கும்
சிவனை மணக்கும் வல்லமை உடைய தேவியே தங்கள் மனதில் கொண்டுள்ள ஐயத்தை கூறினால் இந்த
அடியேனால் முடிந்த உதவியை தங்களுக்கு புரிகிறேன் என்றார்.
சிவபுராணம் நாளையும் தொடரும்....
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக