புதன், 22 ஜனவரி, 2020

சிவபுராணம்..! பகுதி 22


  தாரகாசுரன், தான் எவ்வளவு பெரும் பாவச் செயலை செய்ய துணிந்தேன் என மனம் வருந்தி தன் குருவிடம் மன்னிப்பு கேட்டு இக்கட்டில் இருந்து தன்னை விடுவிக்குமாறு பணிந்து நின்றான்.

நான் என்னுடைய கட்டை விடுவிக்க வேண்டுமாயின் நீர் இமவான் மன்னன் மீது போர் தொடுத்தல் கூடாது என்று வாக்குறுதி அளிக்கும் பட்சத்தில் நான் உன்னை விடுவிக்கிறேன் என்றார் சுக்கிராச்சாரியார்.

அசுர குருவின் கூற்றுக்கு இணங்கி இமவான் மன்னன் மீது போர் தொடுக்கமாட்டேன் என்னும் வாக்குறுதியை தாரகாசுரன் அளித்தான். அதன் பின்பே சுக்கிராச்சாரியார் உருவாக்கிய மந்திர சக்தியின் கட்டுகளை விடுவித்தார்.

தன் குருவின் பாதம் தழுவி தான் இழைத்த பிழையை மன்னித்தமைக்கு நன்றி கூறினான். அசுர குல வேந்தனே நான் செய்யும் செயல்கள் எப்போதும் அசுர குல முன்னேற்றத்தை நினைவில் கொண்டே புரிவேன் என்று கூறி அவ்விடத்தை விட்டு அசுர குரு மறைந்தார்.

முனிவரின் கூற்றுகளை ஏற்றுக்கொண்ட தேவி தன் மனதில் கொண்ட ஐயத்தை அதாவது தன் தாய் தன்னை அருகில் உள்ள பேரரசின் இளவரசருடன் திருமணம் செய்து வைக்க உள்ளார். ஆனால், என் மனதிலோ சிவன் மட்டுமே உள்ளார்.

அவரை காண்பது மற்றும் அவரை அடைவது எவ்வண்ணம் என்று அறியா மனக்குழப்ப நிலையில் உள்ளேன் என்று தன்னிலையை முனிவருக்கு எடுத்துரைத்தார் பார்வதி தேவி.

பார்வதி தேவியின் கூற்றுகள் யாவற்றையும் பொறுமையுடன் கேட்டறிந்த முனிவர் அன்னையே தாங்கள் மணக்க நினைப்பவர் என்பவர் இந்த பிரபஞ்சத்தையே சிருஷ்டித்து அதை இன்று வரை காத்து வருபவர். அவர் அனைத்தையும் கொண்டவர் எனினும் யாவற்றிலும் பற்று இல்லாதவர்.

ஆனால், மானிடர்களாக பிறந்த நாம் யாவற்றிலும் பற்றுக்கொண்டு எது உண்மையான இன்பம் என்றும் உணராமல் பரம்பொருளான எம்பெருமானை அடைவது என்பது எவ்விதம் சாத்தியம் தேவி என்று கூறினார் முனிவரான ததிசி. தாங்கள் உரைக்க வரும் கருத்து யாதென்று புரியவில்லை என்று பார்வதி தேவி கேட்டார்.

முனிவரான ததிசி, பார்வதி தேவியிடம் மானிட பிறவியில் நமது எண்ணங்களை கட்டுப்படுத்துவதும், உலக ஆசைகளுக்கு இணங்கி நம்மை சரியான பாதையை விடுத்து தவறான பாதைக்கு அழைத்து செல்வதும் நம் உடலில் உள்ள ஏழு சக்கரங்களாகும்.

நான் தங்களுக்கு உரைக்கும் இவையாவும் நான் அனுபவ ரீதியாக உணர்ந்தவையாகும். இந்த வழிமுறைகளின் மூலம் பரம்பொருளான பிரபஞ்சத்தின் மூல சக்தியாக விளங்கும் சிவபெருமானை அடைந்து மோட்சம் அடையும் பெரும் பாக்கியசாலிகள் ஆவார்.

நம் உடலில் உள்ள ஆன்மா மற்றும் இப்பிறவியில் நாம் செய்து முடிக்க வேண்டிய கர்மாக்களை அறிந்து செயல்பட வைப்பது இச்சக்கரங்கள் ஆகும். மானிடர்களை ஒரு பரிணாமத்தில் இருந்து அடுத்த பரிணாமத்திற்கு அழைத்து செல்லும் வல்லமை உடைய நம்மிடம் இருந்து அதை உணராமல் இருக்கும் சக்கரங்கள் பல உள்ளன.

அதில் இந்த பிரபஞ்சத்தோடு நம்மை இணைக்கும் வல்லமை கொண்டவை என்பவை ஏழு சக்கரங்கள் ஆகும். அவை

1. மூலாதாரம்
2. சுவாதிஷ்டானம்
3. மணிப்பூரகம்
4. அனாகதம்
5. விசுக்தி
6. ஆக்ஞை
7. சகஸ்ரஹாரம் அல்லது துரியம் ஆகியவையாகும்.

மூலாதாரம் என்னும் சக்கரத்தை கட்டுப்படுத்துவதன் மூலம் இந்த பூவுலகில் வாழும் உயிர்களில் தோன்றும் ஆசைகள், உயிர் வாழ தேவையான உணவுகள் மற்றும் பிடிவாத குணத்தை கட்டுப்படுத்துகிறோம். மூலாதாரம் பஞ்சபூதங்களில் நிலத் தத்துவத்தைக் குறிக்கிறது. இதுவே பரம்பொருளான எம்பெருமானை அடையும் முதல் வழியாகும்.

இவ்வுலகில் ஜீவித்த உயிர்கள், உலகில் உள்ள இன்பங்களை அனுபவிக்க நாட்டம் கொள்கின்றன. இவ் எண்ணங்களை சுவாதிஷ்டானம் என்னும் கீழிருந்து இரண்டாவது சக்கரத்தை கட்டுப்படுத்துவதன் மூலம் உலக இன்பங்களில் இருந்து விடுபடுகிறோம். இச்சக்கரம் பஞ்சபூதங்களில் நீர்த் தத்துவத்தைக் குறிக்கிறது.

தனது தேவைகளையும் உடல் இயக்கங்களுக்கு தேவையான சக்தியும், ஐயம் மற்றும் பாச உணர்ச்சிகள் பிறப்பெடுக்கும் இடம் கீழிருந்து மூன்றாவதாக அமையப் பெற்றுள்ள மணிப்பூரக சக்கரங்கள் ஆகும். இச்சக்கரத்தை கட்டுப்படுத்துவதன் மூலம் இணையில்லா சக்தியை உருவாக்க இயலும். இச்சக்கரம் பஞ்சபூதங்களில் நெருப்பு தத்துவத்தை குறிக்கிறது.

உலகத்தில் பிறப்பெடுத்த உயிர்கள், இவ்வுலகில் உள்ள உயிர்களிடம் கொண்டுள்ள அன்பு, சகோதர பாசம் மற்றும் காதல் எண்ணங்களை அனாகதம் சக்கரத்தை கட்டுப்படுத்துவதன் மூலம் நான்காம் நிலையை அடைகிறோம்.

புலன்களுக்கு அப்பால் நாம் கற்கவும், கற்றவற்றை பிறருக்கு உபதேசிக்கவும், வாழும் போது பிற உயிர்களால் ஏற்படக்கூடிய தீவினைகளை தடுத்து நிறுத்தும் ஆற்றல் கொண்டது விசுக்தி சக்கரமாகும். இது ஆகாய தத்துவத்தை அடிப்படையாகக் கொண்டது. இச்சக்கரங்களை கட்டுப்படுத்துவதன் மூலம் ஐந்தாம் நிலையை அடைகிறோம்.

பக்தியின் பிறப்பிடமாகவும், தொடு உணர்தல் மற்றும் அறிதல், அறிவாற்றல் போன்ற எண்ணங்களை கட்டுப்படுத்தும் நெற்றிக்கண் சக்கரமான ஆக்ஞை என்னும் ஆக்ஞா சக்கரமாகும். இச்சக்கரத்தை கட்டுபடுத்துவதன் மூலம் ஆறாம் நிலையை அடைகிறோம்.

உச்சந்தலையில் பிரபஞ்சத்தோடு தொடர்பு கொண்டு பேரானந்தம் அடையவும் வாழ்வியலின் பொருளையும், ஞானத்தையும் அளிக்கக்கூடிய ஆயிரம் தாமரை மலர்கள் ஒன்றாக மலர்கின்ற தாமரைச் சக்கரங்களான சகஸ்ரஹாரம் என்னும் ஏழாம் நிலை ஆகும்.

இவ்விதம் மானிடர்கள் யாவரும் தனது கர்ம வினைகளால் ஏற்பட்ட இருளில் இருந்து விடுபட்டு பிரபஞ்சத்தோடு தொடர்பு கொள்ளும் போது பேரானந்தம் எனப்படும் பரம்பொருளின் காட்சியை நம்மால் காண இயலும். இதுவே எம்பெருமானான சிவபெருமானை காண உகந்த வழி என்று ததிசி முனிவர் தேவிக்கு எடுத்துரைக்கிறார்.

இதனால் பார்வதி தேவிக்கு தன் மனதில் இருந்த ஐயம் என்னும் இருள் நீங்கி, சூரிய ஒளியால் உண்டாகும் வெளிச்சத்தை போன்றதொரு தெளிவு பெற்றார். இருப்பினும் நான் சிவனின் பதியாக இருக்கும் பட்சத்தில் ஏன் சிவபெருமான் என்னை மையல் கொள்ள வரவில்லை என்ற ஒரு வினாவும் எழும்பியது. இந்த ஐயத்தையும் முனிவரிடம் கேட்டார்.

ததிசி முனிவரோ நான் வணங்கும் பரம்பொருளான சிவபெருமானின் மனைவி தாங்கள் மட்டுமே. தங்களின் வருகைக்காக சிவபெருமான் காத்துக் கொண்டு இருக்கிறார் என்று கூறினார்.

சிவபுராணம் நாளையும் தொடரும்....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Follow and Join with US

தினமும் எங்கள் வாசகர்கள் மற்றும் நண்பர்கள் பல்வேறு செய்திகளை பெறுகின்றனர் நீங்களும் இணைத்து எங்களை வழி நடத்துங்கள்