ததிசி முனிவரின் பதில்களால் மனம் தெளிவு பெற்ற பார்வதி தேவி என் மனதில் இருந்த ஐயங்களை நீக்கி தெளிவு அடைந்தமைக்கு தாங்கள் கூறிய கருத்துக்கள் பெரிதும் உதவியது என்று கூறி நன்றி உரைத்து வனத்தில் இருந்து பார்வதி தேவி அரண்மனை நோக்கிச் சென்றார்.
பின் தனது சிகை அலங்காரங்களை மென்மேலும் அதிகப்படுத்தி கொண்டு சிவபெருமானை காணச் சென்றார். தேவியின் வருகைக்காக காத்துக் கொண்டு இருந்த காமதேவனிடம் ரதி தேவி தனது ஆசைகளை நிறைவேற்றி தருமாறு கேட்டார்.
தேவியே நீர் கேட்பது எதுவாயினும் நான் உனக்கு நிறைவேற்றி தருகிறேன் என்றார். பின் ரதி தேவி உங்களை போன்ற ஒரு அழகான மகனை ஈன்றெடுக்க வேண்டும் என்று கூறினார். ரதி தேவியின் ஆசைக்கு இணங்கி அவ்விதமே உண்டாகும் என்று வாக்குறுதியும் அளித்தார்.
சிவபெருமான் தவம் மேற்கொள்ளும் குகைக்கு உள்ளே காமதேவனால் செல்ல முடியவில்லை. என்ன செய்வது என்று யோசித்து கொண்டு இருந்த கணத்தில் பார்வதி தேவி எம்பெருமானிற்கு பணிவிடை செய்வதற்காக சிவன் இருக்கும் குகையை நோக்கி வந்தார்.
முன்பு நான் இவ்வழியில் வரும் போது இவ்வளவு செழுமையான மலர்களையும், மரங்களையும் நான் காணவில்லையே என்னவொரு விந்தையான மாற்றங்கள் என எண்ணுவதற்குள் ததிசி முனிவர் சொன்ன வார்த்தைகள் நினைவுக்கு வந்தன.
அதாவது தங்களின் இணைவை இந்த பிரபஞ்சமே எதிர்நோக்கி உள்ளன என்று கூறியது நினைவுக்கு வந்ததால் பார்வதி தேவி மிகவும் மகிழ்ச்சி அடைந்தார். மன்மதன் எண்ணிய வினாடியில் கரும்பால் ஆன வில்லும் தேனிகளால் ஆன நாண் உடைய வில்லை கையில் ஏந்திய வண்ணம் நின்றார்.
மன்மதன் கையில் தாமரை மலர்களின் இதழ்களை அளிக்கக்கூடிய அம்பினை எய்வதற்காக தயார் நிலையில் இருந்தார். இருப்பினும் ரதி தேவி தியான நிலையில் இருக்கும் எம்பெருமானிற்கு இடையூறு ஏற்படுத்தும் வண்ணம் இருப்பின் ஏதாவது அனர்த்தம் உண்டாகுமோ என பயம் கொண்டார்.
தன் கணவரான மன்மதனிடம் எடுத்து உரைத்தும் எவ்விதமான பலனும் இல்லை. மாறாக மன்மதன் ரதி தேவியை சமதானப்படுத்தி தான் செய்ய வேண்டிய காரியத்தில் கண்ணும் கருத்துமாக இருந்தார்.
பார்வதி தேவி சிவபெருமான் தியானம் மேற்கொண்ட குகையின் அருகில் சென்றார். பார்வதி தேவியின் வருகைக்காக காத்திருந்தது போல அனைத்து நிகழ்வுகளும் அங்கு நிகழ்ந்தன. வனத்தில் இருந்த பறவைகள் இனிமையான ஓசையை எழுப்பின. மலர்கள் தங்கள் நறுமணத்தால் அவ்விடத்தை சொர்க்க பூமியாக மாற்றின.
பார்வதி தேவி குகையின் உள்ளே நுழையும் வாயிலை அடைந்தார். அங்கே உறுதியான பனியினால் ஆன தடுப்பு இருந்தது. என்ன செய்வது என்று புரியாமல் நின்றார் பார்வதி தேவி. பின் பார்வதி தேவி சிவ சிந்தனைகளுடன் அந்த பனிப்பாறையை தனது கையால் தொட்டார். அவ்விடத்தில் இருந்த பனிப்பாறைகள் யாவும் உருகி நீர்மமாக மாறின.
குகையின் உள்ளே சிவனை தேடி பார்வதி தேவி பயணிக்க தொடங்கினார். விழிகள் சிவபெருமானை தேடின. எவ்வளவு முயன்றும் பார்வதி தேவியால் சிவபெருமானை காண முடியவில்லை. ததிசி முனிவர் கூறிய அறிவுரைகளை அவர் நினைவில் கொண்டு அச்சக்கரங்களை கட்டுப்படுத்த முயற்சித்தார்.
அவர் முதல் சக்கரமான மூலாதாரத்தை கட்டுப்படுத்த முயன்ற போது முற்பிறவியில் தாட்சாயிணி உருவத்தில் அவர் செய்த பிடிவாதங்கள் மற்றும் சிவபெருமான் மீது கொண்ட காதல் போன்ற காட்சிகள் நினைவுக் காட்சிகளாக இயற்கை வனப்புகள் நிறைந்த மலைப் பகுதியின் நடுவில் தோன்றின.
இவையாவும் மாயமே என உணர்ந்த தேவி அச்சக்கரத்தை கட்டுப்படுத்தினார். இவர் சக்கரத்தை கட்டுப்படுத்திய பிறகு மலைகளின் நடுவில் இருந்த காட்சிகள் மற்றும் மலை பரப்புகள் நீங்கி இயல்பு நிலைக்கு திரும்பின.
மூலாதாரத்தை கட்டுப்படுத்திய பின்பு சிவபெருமான் இருக்கும் திசை தோன்ற அத்திசையைத் நோக்கி பார்வதி தேவி நடக்க முயல நீர் பரப்புகளில் மூழ்கியது போன்று ஒரு மாயை தோன்ற அதில் சிவபெருமானுடன் புரிந்த ஆனந்த நடனம் மற்றும் உரையாடல்கள் அவரை அடைய வேண்டும் என்று மையல் கொண்ட விதங்கள் யாவும் தோன்றி தேவியை கலங்கப்படுத்தின.
இவ்விதம் சிவபெருமானை அடைந்து நாம் இழந்ததை எண்ணிய நொடியும் இவை யாவும் நம்மை சிவபெருமானை காண முடியாமல் காலம் கடத்துகின்றன என்பதை உணர்ந்த தேவி நிதானமாக மனதை ஒருநிலைப்படுத்தி நீர் தத்துவத்தை குறிக்கும் சுவாதிஸ்டான சக்கரத்தை கட்டுப்படுத்தினார். அதன் பின் நீர் நிலைகள் யாவும் விலகி இயல்பு நிலைக்கு வந்தன.
சிவபுராணம் நாளையும் தொடரும்....
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக