பார்வதி தேவி சிவபெருமான் அமர்ந்து தவம் மேற்கொண்ட இடத்தில் தன் தலையினை சாய்த்து ஏன் நான் உங்கள் மீது கொண்ட மையலை புரிந்து கொள்ளாமல் இருக்கிறீர்கள். நான் இழைத்த பிழைக்கு என்னை மன்னித்து தங்களின் இல்லத்தரசியாக ஏற்றுக் கொள்ள மாட்டீர்களா என தனக்கு தானே பேசிய நிலையில் இருந்தார் பார்வதி தேவி.
பார்வதி தேவியின் வருத்தத்தால் சிவபெருமான் தியானம் மேற்கொண்ட ஒளிப் பொருந்திய அந்த குகை சூரியனின் மறைவால் தன் மகிழ்ச்சியை இழந்தது போன்று காட்சியளித்தது. தன் பதியான மன்மதனை தேடி குகைக்குள் வந்த ரதி தேவி இறுதியாக தனிமையில் எம்பெருமானை எண்ணி புலம்பிக் கொண்டு இருந்த தேவியை கண்டார்.
தேவியின் அருகில் சென்று தன் பதியானவரை கண்டீர்களா என கேட்டார் ரதி தேவி. அங்கு ரதி தேவியை கண்டதும் என்ன சொல்வது என்று புரியாமல் நின்றார் பார்வதி தேவி. இருப்பினும் மனதில் தைரியத்துடன் நிகழ்ந்தன யாவற்றையும் கூறினார். அதாவது சிவபெருமானின் நெற்றிக்கண்ணில் இருந்து வந்த நெருப்பு சுவாலையால் எரிந்து சாம்பலானார் என்பதை கூறினார்.
இதை கேட்டதும் ரதி தேவி என் பதியானவர் மாய்ந்து விட்டாரா என புலம்பி ஆழ்ந்த துக்கத்தில் மூழ்கினார். ரதி தேவிக்கு ஏற்பட்ட இந்நிலையில் தென்றலாக வீசிய காற்று கூட இல்லாமல் முழு அமைதியானது அந்த இடம்.
காடுகளில் இருந்த பறவைகள் கூட ரதி தேவி அடைந்த வேதனையால் எவ்வித சத்தமும் எழுப்பாமல் அமைதியாக இருந்தன. வாசம் வீசும் மலர்கள் கூட தனது நறுமணத்தை கட்டுப்படுத்திக் கொண்டன. இவ்விதம் உலகில் உள்ள எல்லா ஜீவராசிகளும் காமதேவன் மறைந்ததால் ரதி தேவி அடைந்த வேதனைக்கு தங்களால் ஆன செயல்களை செய்தன.
ரதி தேவியோ தனது எழில் மிகு தோற்றத்தை விடுத்து தன் கணவனான மன்மதன் எரிந்து சாம்பலான இடத்தை நோக்கி சென்றாள். தன் கணவரின் சாம்பலின் அருகில் சென்றதும் என்ன செய்வது என்று புரியாமல் அவ்விடத்திலேயே அமர்ந்து தன்னுடைய பழைய நினைவுகளை எண்ணிக் கொண்டு இருந்தார்.
ரதி தேவியின் நிலையைக் கண்ட பார்வதி தேவி, அந்த இடத்தில் நிகழ்ந்த மாற்றங்களையும், அந்த இடத்தில் ஏற்பட்டுள்ள அமைதியை கலைக்கும் விதமாக ரதி தேவியின் அருகில் சென்றார். இருப்பினும் ரதி தேவி பார்வதி தேவியை கண்டும் காணாமலும் இருந்தார்.
பின் தன் மனதில் ஏற்பட்ட இந்நிலைக்கு பார்வதி தேவியே காரணம் என எண்ணிணார். மேலும், பார்வதி தேவியையும் எம்பெருமானான சிவபெருமானையும் இணைக்க தன் கணவர் இங்கு வந்ததால் இந்நிலை ஏற்பட்டுள்ளது என எண்ணினார். பார்வதி தேவி, ரதி தேவியிடம் பேச முற்படுகையில் தேவி தாங்கள் என்னிடம் எதுவும் பேச வேண்டாம் என தன் கணவரின் சாம்பலை பார்த்த வண்ணம் கூறினார்.
ஆனால், பார்வதி தேவி அதை கேட்காமல் மீண்டும் பேச முற்படுகையில் தேவி தாங்கள் எதுவும் என்னிடம் உரைக்க வேண்டாம் என்னுடைய இந்நிலைக்கு முழு காரணம் நீங்களே தேவி என ரதி தேவி உரைக்க, நான் எவ்விதம் காரணம் ஆவேன் என பார்வதி தேவி கேட்டார்.
அதுவரை பொறுமை காத்து தனக்கு ஏற்பட்ட துன்பத்தினை அடக்கி வைத்திருந்த ரதி தேவி திடீரென பார்வதி தேவியின் பக்கம் திரும்பி என்னுடைய இந்த நிலைக்கு நீரே காரணம் பார்வதி நினைவிற் கொள்க என உரக்க கூறினார்.
நான் எவ்விதம் உந்தன் இந்நிலைக்கு காரணமாவேன் என பார்வதி தேவி ரதி தேவியிடம் கேட்டார். ரதி தேவியோ தன் பதியான வரை இழந்த சோகம் மற்றும் மனதில் தோன்றிய எண்ணங்களால் ஏற்பட்ட கோபத்தால் அனைவரையும் அன்பால் கவரக்கூடிய எழில் மிகுந்த கண் ஆனது, ஆதவனை எரிக்கும் அளவிற்கு சிவந்து கண்டங்களை அழிக்கும் பிரளயம் போல எழுந்து வந்து நீர் சிவபெருமான் மீது கொண்ட மையல் எண்ணங்களே எந்தன் இந்நிலைக்கு காரணம்.
என் பதியானவரிடம் நான் கேட்ட வரத்தினை தருவதாக அருளிய அந்த கணத்தில் தேவேந்திரன் அழைப்பால் உந்தன் மையலை சிவபெருமானுடன் இணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு சிவனின் கோபத்தால் எரிந்தார் என் கணவர். இக்கணம் முதல் என்னை அன்பாக கவனித்துக் கொள்ள எவரும் இல்லை. என்னுடன் பேசி மகிழ எவரும் இல்லாத பட்சத்தில் நான் தனிமரமாக உள்ளேன்.
சிவபுராணம் நாளையும் தொடரும்....
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக