புதன், 22 ஜனவரி, 2020

சிவபுராணம்..! பகுதி 29


 இந்திரதேவன் தான் மேற்கொண்ட செயலுக்கான காரணத்தை சிவபெருமானிடம் எடுத்து உரைத்துக் கொண்டிருந்த கணத்தில் சிவன் அமர்ந்து தியானம் மேற்கொண்ட குகையில் இருந்த ரதிதேவி சிவபெருமானை காண கைலாய மலைக்கு வந்தார்.

அங்கு தேவேந்திரனுடன் உரையாடிக் கொண்டிருந்த சிவபெருமானை கண்டு தங்களின் உரையாடல்களில் குறுக்கிடுவதற்கு என்னை மன்னிக்க வேண்டிகிறேன் இந்திரதேவா எனக் கூறி சிவபெருமானை கண்டு பணிந்து நின்று தான் அடைந்த இன்னல்களை பற்றிக் கூறி அதற்கு தாங்கள் தான் விமோசனம் தர வேண்டும் என்று வேண்டினாள்.

இந்த அடியேன் தங்களை தஞ்சம் அடைகிறேன் என்று ரதிதேவி கூறினார். தேவர்கள் மற்றும் தேவேந்திரன், ரதிதேவி அடைந்த இன்னல்களை கண்டு மேலும் உலகில் பிறப்பெடுத்த உயிர்களுக்கு உள்ள சங்கடங்களை அறிந்து நீக்கும் சங்கடநாதரே ரதிதேவி தமது காதற் கணவனை இழந்து நீங்காத துயரத்தில் மிகவும் சோகமுற்று இருக்கின்றாள்.

அவர்களின் சோகத்தை கலைத்தெறிய தங்களின் நெற்றிக் கண்ணால் இருந்து வந்த நெருப்பு ஜுவாலையால் அழிவுற்ற காமதேவனை மீண்டும் உயிர்ப்பித்து ரதிதேவி அடைந்த இன்னல்களை நீக்கியருள வேண்டும் என தேவர்கள் சிவபெருமானிடம் தங்களின் கோரிக்கைகளாக எடுத்துக் கூறினார்கள்.

கருணாமூர்த்தியான சிவபெருமான் காமதேவன் செய்த செயல்களை யாவும் மறந்து ரதிதேவியின் கண்களுக்கு மட்டும் புலனாகும்படி காமதேவனை தோற்றுவித்தார். உடலின்றி இருப்பினும் ஸ்ரீகிருஷ்ணன் துவாரகா புரியில் ருக்மணி உடன் சேர்ந்து புதல்வர்களை தோற்றுவிப்பார். அந்நிகழ்வின் போது பிரத்யும்னன் என்ற பெயரில் உடலற்ற காமதேவன் உடல் பெற்று சம்பராசுரனை வதம் செய்து ரதிதேவியை அடைவார் என அருள் புரிந்தார்.

சிவபெருமான் தவம் மேற்கொண்ட குகையில் தனிமையில் இருந்த பார்வதி தேவி சிவபெருமானை நினைத்து கலக்கமுற்று, அவருடன் உரையாடல் நிகழ்த்திய நினைவுகளை எண்ணிய வண்ணம் அமர்ந்திருந்தார்.

வெகு நேரமாகியும் தன் மகளான பார்வதி தேவி இன்னும் அரண்மனைக்கு வரவில்லை என்னும் கலக்கத்துடன் சிவபெருமான் தியானித்த குகையை நோக்கி இமவான் சென்றார். உடலின்றியும் உயிர் பெற்ற காமதேவனும், ரதிதேவியும் சிவபெருமான் பாதம் பணிந்து ஆசி பெற்று சிவபெருமான் குறிப்பிட்ட சம்பராசுரன் என்னும் அசுரன் வாழும் தலைநகரத்திற்கு புறப்பட்டனர்.

தேவேந்திரனே எல்லோருக்கும் கருணை பாவிக்கும் கருணாமூர்த்தியே ரதிதேவி அடைந்த துக்கத்தை நீக்க உபயம் அளித்த தாங்கள் தேவி பார்வதியுடன் இணைந்து எங்களின் துயரங்களையும் நீக்குவீர்களோ எனக் கூறி முடிப்பதற்குள், யார் அந்த பார்வதி தேவி? என சிவபெருமான் உரைக்க உரைத்ததும் அதுவரை மகிழ்வுடன் சென்றிருந்த சுப நாழிகைகள் அசுபமாயின.

உடனே நாராயணனோ தாட்சாயிணி தேவியின் மறு பிறப்பே பார்வதி தேவி ஆவார்கள். அவர்களை தாங்கள் மனம் புரிந்து யோகி நிலையில் இருந்து இல்லற வாழ்க்கைக்கு மாற வேண்டும். இப்போது அதற்கான காலம் வந்து விட்டது. ஆதி சக்தி தங்களுடன் இணைவதற்கான காலம் கனிந்து உள்ளது என கூறினார்.

ஆனால், சிவபெருமானோ! எனக்கு மீண்டும் இல்லற வாழ்க்கைக்கு மாற விரும்பம் இல்லை என்றும் நான் எப்பொழுதும் யோகி தான் என்றும் கூறிவிட்டார். திருமண வாழ்க்கையில் நிகழ்ந்த சுப நினைவுகளை விட வலியும் வேதனையுடன் கூடிய நினைவுகளே அதிகம். இனி வரும் காலங்களில் சிவனின் சித்தார்த்தம் என்பது யோகி நிலையே ஆகும் என திடமாக உரைத்து பஞ்ச பூதங்களில் மறைந்தார்.

சிவபெருமானின் இது போன்ற முடிவினை சற்றும் எதிர்பாராத தேவர்கள் என்ன செய்வது என அறியாமல் குழம்பி நின்றனர். ஆனால், நாராயணனோ புன்முறுவலுடன் காட்சியளித்து அனைவரின் கவலைகளையும் போக்கும் வண்ணம் இருந்தார்.

தேவர்களும் நாராயணனின் புன்முறுவலின் அர்த்தங்கள் புரியாமல் நின்றனர். பிரம்ம தேவரோ சிவபெருமானின் இந்த எதிர்பாராத முடிவினை கண்டு மனவருத்தத்தில் உள்ளோம். ஆனால், தாங்களோ இன்முகத்துடன் காட்சியளிக்கின்றீர்களே! எதுவாக இருந்தாலும் எங்களுக்கும் உரைத்தால் எங்கள் அனைவருக்கும் இன்பம் பயக்கும் என கூறினார்.

சிவபுராணம் நாளையும் தொடரும்....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Follow and Join with US

தினமும் எங்கள் வாசகர்கள் மற்றும் நண்பர்கள் பல்வேறு செய்திகளை பெறுகின்றனர் நீங்களும் இணைத்து எங்களை வழி நடத்துங்கள்