சர்வங்களை படைத்து சர்வேஸ்வரராக விளங்கும் எம்பெருமான் பக்தர்கள் அளிக்கும் பொருள்களால் மகிழ்ச்சி அடையாமல் அவர் மீது கொண்டுள்ள அன்பு மற்றும் பக்தியால் மட்டுமே மகிழ்ச்சி அடையக்கூடியவர் என்று முனிவர்கள் கூறினார்கள்.
இறைவன் சிவபெருமான் அனைத்து இன்ப துன்பங்களையும் கடந்தவர் ஆவார். அவர் எல்லாம் கொண்டாலும் எதிலும் பற்று இல்லாதவர் என அந்த வயோதிக முனிவர் கூறினார். அவர் கூறி முடித்ததும் அதில் அடங்கியுள்ள தத்துவங்கள் யாவும் அறிந்து கொண்டார் பார்வதி தேவி. ஏனெனில், தவம் புரிய வந்தும் நாம் இன்றளவும் எளிமையான உடைகள் இல்லாமல் இளவரசி போன்ற உடையுடன் இந்த வனத்தில் இருப்பது தவறே என உணர்ந்தார்.
இனி மேற்கொண்டு மனதில் நினைத்த வினையானது முழுமை பெறும் வகையில் இதுபோல அலங்கார உடைகளையோ, ஆடைகளையோ அணியமாட்டேன் என்று கூறினார். இதுநாள் வரை நான் செய்து வந்த பிழையை உணர்த்தியமைக்கு மிக்க நன்றி என கூறிய தேவி தான் அணிந்து இருந்த ஆபரணங்களை கலைந்து அதை சிவ லிங்கத்தின் முன்னிலையில் வைத்து தான் இழைத்த பிழையை மன்னித்தருள வேண்டும் என தன்னுடைய மனத்திற்குள் கூறி தான் வாழ்ந்து வந்த குடிலுக்கு செல்ல முற்பட்டார்.
அவர் குடிலுக்கு செல்ல முற்படுகையில் மற்றொரு முனிவர் தங்களின் உடைமையான சிவலிங்கத்தை தாங்கள் எடுத்து செல்லலாம் என கூறி சிவலிங்கத்தை எடுத்து கையில் கொடுத்தார். தங்களின் எண்ணம் இனிதே நன்முறையில் சித்தமாகும் என வாழ்த்து கூறி அனுப்பினார்.
தேவர்களுடன் இருந்த அசுர வீரன் பல தேவர்களின் உரையாடல்களை உண்ணிப்பாக கவனித்தார். இருப்பினும் எவ்விதமான தகவல்களும் கிடைக்கப் பெறாமல் இருந்தார். இறுதியில் அங்கு இருந்த தேவர்களில் ஒருவர் நாம் சிவபெருமானின் திருமணத்தை காண முடியாதவர்களானோம் என கூறி வருந்தி நின்றார். அதை அங்கிருத்து கேட்ட தேவ உருவத்தில் இருந்த அசுரனுக்கு தான் வேண்டி வந்த தகவல்கள் கிடைக்கப்பெற்றவனாக தன் மன்னனை காண விரைந்தான்.
தேவியும் முனிவர் கொடுத்த சிவலிங்கத்தை பெற்றுக்கொண்டு அவ்விடத்தை விட்டு அகன்று சென்றார். பின் அங்கு இருந்த முனிவர்கள் யாவரும் தன் சுய உருவத்தை பெற்றார்கள். அதில் வயோதிக முனிவராக இருந்தவர் எம்பெருமானான சிவபெருமான் ஆவார். மற்றவர்கள் யாவரும் நாரதரும், ததிசி முனிவர் மற்றும் நந்தி தேவர் ஆவார்கள்.
குடிலுக்கு வந்த பார்வதி தேவி தனது அலங்கார உடையமைப்பை கலைத்து எளிமையான காவி நிறம் கொண்ட உடையை அணிந்து எம்பெருமானான சிவபெருமானை நினைத்து பாடல்கள் பாடி தியானம் மேற்கொள்ள தொடங்கினார்.
தேவ உருவத்தில் இருந்த அசுரன் தன் வேந்தனான தாரகாசுரனை கண்டு தேவர்கள் இதுவரை கொண்டுள்ள அமைதிக்கான காரணத்தை, அதாவது தேவர்கள் சிவபெருமானும் பார்வதி தேவியின் இணைவையும் எதிர்பார்த்து காத்துள்ளனர் என்று கூறினார்.
இச்செய்தியை கேட்ட தாரகாசுரன் தேவி பார்வதியை கொல்ல வேண்டும் என எண்ணினான். இருப்பினும் நான் சுக்கிராச்சாரியாருக்கு வாக்களித்துள்ளேன். என்ன செய்வேன் என்று சிந்தனையில் ஆழ்ந்தான்.
சிவபெருமான் தாட்சாயிணி தேவியின் இணைப்பை பிரித்தவாறு இவர்களின் இணைப்பையும் நாம் பிரிக்க வேண்டும். அதனால் தகுந்த முறையில் திட்டமிட்டு இமவானின் மகளாகிய பார்வதி தேவியை மட்டும் தனியே அழிக்க வேண்டும் என எண்ணினார்.
பின் தன்னுடைய ஒற்றர்கள் மூலம் பார்வதி தேவி பற்றிய தகவல்கள் யாவும் அறிந்து வர தாரகாசுரன் ஆணையிட்டான். எம்பெருமானான சிவபெருமான் ஒரு பயண கலைப்பால் உள்ள முதிய அந்தணர் போன்று உருவம் தரித்து பார்வதி தேவி குடில் அமைத்துள்ள பகுதிக்குச் சென்றார்.
குடிலின் வெளிப்புறத்தில் இருந்த தோழிகள் வயதான அந்தணரை கண்டனர். அவர்கள் தங்களுக்கு ஏதாவது உதவி வேண்டுமா? என்று வினவினார். வெயிலின் உஷ்ணத்தால் தாங்கள் மிகவும் சோர்வாக உள்ளீர்கள்.
தாங்கள் எங்கள் தேவி இருக்கும் குடிலுக்கு வருகைத் தந்து சிறிது ஓய்வு எடுத்து பின் தங்களின் பயணங்களை தொடரலாம் எனக் கூறி அழைத்துச் சென்றனர். தனது தோழிகள் மூலம் முதிய அந்தணர் வருகை அறிந்த தேவி பார்வதி அவருக்கு தேவையான உணவுகளை எடுத்து தயார் நிலையில் வைத்திருந்தார். எம்பெருமானான முதிய அந்தணர் தேவி பார்வதி இருக்கும் குடிலை அடைந்தார்.
எம்பெருமானான சிவபெருமானுக்கு பார்வதி தேவி தம் கையால் சமைத்த உணவுகளை பரிமாறினார். பார்வதி தேவி தான் தங்கி இருக்கும் குடிலை அடைந்த பலருக்கு பல முறை உணவுகளை பரிமாறினார்.
சிறிய குழந்தைகள் முதல் பல முதியவர்கள் இவ்வழியாக செல்லும் போது தேவியின் குடிலிற்கு வந்து உணவு உண்பார்கள். மேலும், தாகம் தணிக்க நீர் அருந்தி செல்வார்கள். இருப்பினும் இந்த முதிய அந்தணருக்கு நான் உணவு பரிமாறும் போது எல்லையில்லா மகிழ்ச்சியும் ஆனந்தமும் உண்டாயிற்று காரணம் என்னவென்று புரியவில்லையே என எண்ணினார் தேவி.
மேலும் தேவியின் கைகளால் உண்ட உணவினால் அவரது பயணக் கலைப்பு நீங்கி புத்துணர்ச்சி பெற்றார். அந்த முதிய அந்தணரின் முகத்தில் கண்ட மகிழ்ச்சியை எண்ணி மிகவும் ஆனந்தம் கொண்டார் பார்வதி தேவி. உணவு உண்ட சிவபெருமான் தனது திருவிளையாடலை தொடங்கினார்.
சிவபுராணம் நாளையும் தொடரும்....
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக