அந்தணராக இருக்கும் சிவபெருமான் பார்வதி தேவியிடம், இனிமையான ஓசைகளை எழுப்ப வேண்டிய வளையல் மற்றும் கொலுசுகள் இன்று கை மற்றும் கால்களில் மலர் வளையங்கள் இருப்பதும், மலர்களால் அழகாக ஒதுக்க வேண்டிய கூந்தலோ மலரின்றி இருப்பதும் போன்ற கோலம் யாருக்காக தேவி?
உன்னுடைய மனதில் நீர் கொண்டுள்ள எண்ணம் தான் என்ன? அல்லது உன் மனதிற்கு ஏற்ற நாயகனை அடைய இதுபோன்ற கோலம் கொண்டுள்ளாய் எனில் இதைக் இக்கணமே நிறுத்திக்கொள். இது உன்னுடைய அழகான உருவத்திற்கு ஏற்றதல்ல என்று கூறினார்.
மேலும், மலரானது தன்னை வேண்டுபவரை என்றும் தேடிச் செல்வதில்லை. இருப்பினும் மலரை வேண்டுபவர் தானே வந்து அதனை எடுத்து கொள்வான். அவன் விரும்பிய மலரில் ஏதேனும் குறைகள் இருப்பினும் அதை பொருட்படுத்தாமல் அதை அவனிடமே வைத்துக் கொள்வான்.
நீர் மேற்கொண்ட இந்த கடுமையான தவத்தால் உன்னுடைய தேகம் பொலிவிழந்து காணப்படுகிறது. இதற்கான காரணத்தை சொன்னால் நான் அதைக் கேட்டு மனம் மகிழ்ச்சி கொள்வேன் என்று கூறினார் முதியவரான அந்தணர்.
அந்தணர் கூறிய யாவற்றையும் கேட்ட பார்வதி தேவி எதையும் உரைக்காமல் அமைதி காத்தார். மேலும், அவர் கொண்ட நாணத்தால் முதியவரிடம் உரைக்க வார்த்தைகள் எதுவும் இன்றி வெட்கத்தால் தலை குனிந்தவாறு தான் தங்கியிருந்த குடிலின் மறைவுக்கு சென்று தன் தோழிகள் மூலம் முதியவரின் கேள்விக்கு தேவையான பதில்களை தெரிவிக்கச் செய்தார்.
பார்வதி தேவியின் தோழியோ அரச குடும்பத்தில் பிறந்து சகல சௌபாக்கியத்துடன் வாழ்ந்த பார்வதி தேவி தாம் மனதில் மையல் எண்ணம் உருவாக காரணமாக இருந்த, தன் மனதை கவர்ந்தவரான இப்பிரபஞ்சத்தில் உள்ள அனைத்து உயிர்களிலும் இருப்பவரான, மேலும் கைலாய மலையில் வீற்றிருக்கும் சர்வேஸ்வரரான சிவபெருமானை அடைவதற்காக தேவி கடுந்தவம் புரிகின்றார் என்று தேவியின் தோழிகள் கூறினார்கள்.
பார்வதி தேவியின் தோழி கூறியதைக் கேட்ட அந்தணர் பார்வதி தேவியை நோக்கி, தேவி உன் தோழி கூறுவன யாவும் உண்மையா? எனக் கேட்டார். தேவியோ! ஆம், என் தோழி உரைத்தது யாதும் உண்மையே எனக் கூறினார்.
தேவி கூறியதைக் கேட்ட அந்தணரோ நீ விரும்பிய யாவும் இனிதே நடைபெற என்னுடைய வாழ்த்துக்கள் எனக் கூறினார். பின்பு தேவியிடம் நான் என்னுடைய பயணத்தை தொடங்குவது உசிதமாகும். மேற்கொண்டு நான் இங்கு இருக்கும் பட்சத்தில் நம் நட்பு முறிவுபடலாம் எனக் கூறி பயணத்தை தொடர ஆரம்பித்தார். உடனே பார்வதி தேவி ஏன் தாங்கள் இக்கணமே செல்கின்றீர்கள் எனக் கேட்டார்.
அதற்கு அந்தணர் சிறிது நேரம் பழகினாலும் உன்னுடைய நற்குணங்களால் நம்மிருவருக்கும் இடையே சிநேகிதம் உண்டாயிற்று. இனி நான் அந்த சிநேகிதத்தை சிதைக்க விரும்பவில்லை தேவி என்று கூறினார். ஏன் இவ்விதம் உரைக்கின்றீர் என தேவி கேட்டார்.
ஏனென்றால், நம்மிடம் பழகிய ஒருவர் சரியானதொரு முடிவு எடுக்காமல் தவறான முடிவுகளால் துன்பப்பட போகிறார் என்பதை அறிந்தவர் அவரை காப்பாற்ற வேண்டும் அல்லவா? உயர்ந்த குலத்தில் பிறந்த நீ குலம் தெரியாத அந்த சிவனை மணப்பதா என்று கூறினார்.
பொறுமையுடன் கேட்டு வந்த பார்வதி தேவி பொறுமை தாங்காமல் தாங்கள் கண்ட குறைகள் யாவை என்று கோபத்துடனும், அதே சமயம் நிதானமாகவும் கேட்டார். தேவி நீர் இவ்வளவு கடுமையாக தவம் செய்யும் உன் விருப்பமானது எப்படி உள்ளதெனில் அழகான வாசனை கமலும் மலர்கள் இருக்க காகித மலர்களை தலைக்கு சூடுவது போல் உள்ளது.
அழகான வேலைப்பாடுகள் நிறைந்த ரதத்தை விடுத்து எருது வாகனமாகவும் பிரபஞ்சத்திற்கு ஒளி அளிக்கும் சூரியனை விடுத்து இரவில் மினுமினுக்கும் பூச்சிகளை விரும்புவதா? புனித ஆற்றின் நீர் இருக்க குடிக்க மறுத்து கிணற்று நீரை குடிப்பதைப் போன்று விசித்திரமாக உள்ளது உனது விருப்பம் என்று கூறினார்.
சிவபுராணம் நாளையும் தொடரும்....
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக