அழகான அரண்மனை போன்ற வீடு வாசல்களை விடுத்து யாவரும் இல்லாத மிருகங்களுடன் கானகத்தில் வாசம் செய்பவருடன் வாழ நீ தவம் செய்கிறாய். இது உன் எதிர்கால வாழ்க்கைக்கு உசிதமானதாக தோன்றவில்லை.
ஆடலும், பாடலும் நிறைந்த சபையை புறக்கணித்து விட்டு அழுகையும், சாம்பலுமாக உள்ள சபையை விரும்புகிறாய். செல்வம் உடைய பல செல்வந்தர்களும் ஏன் இந்திரன் முதலான தேவர்கள் அனைவரையும் விடுத்து எதுவும் இல்லாத சிவபெருமானை உன் கணவராக எண்ணுகிறாயே இது உசிதமா? எதையும் அறியா சிறு குழந்தை எடுக்கும் முடிவு போல் உள்ளது உனது விருப்பம்.
மீன்களை போன்ற அழகான கருவிழிகளையும் கலாதியுடைய உடல் அமைப்பும் கொண்ட நீ எங்கே? பார்ப்பதற்கு நயமில்லாம் விசித்திரமாக நெற்றியிலோ மூன்றாவது கண் கொண்ட சிவன் எங்கே? வாசனை கமலும் திரவங்களை பூசாமல் சாம்பலை பூசி திரியும் அந்த ஆண்டி பித்தன் எங்கே?
அழகான உடைகள் அணிந்த நீ எங்கே? விலங்கின் தோலை உடையாக அணிந்த சிவன் எங்கே? இதமான ஒலியை எலுப்பும் உன் வளையல்கள் எங்கே? பாம்பை அணிகலன் போல் அணிந்துள்ள சிவன் எங்கே? உனக்கு பணிவிடை செய்யும் பணிப் பெண்கள் எங்கே? சிவனிடம் இருக்கும் பூத கணங்கள் எங்கே?
இவ்விதம் கூறிக்கொண்ட போகலாம். உடல் தோற்றம் என்ற பொருத்தம் அல்லாத நீங்கள் இருவரும் திருமணம் புரிவதா என்று கூறி புன்னகைக்க தொடங்கினார் முதிய அந்தணர்.
அந்தணர் கூற தொடங்கிய பொழுதில் அமைதி காத்த பார்வதி தேவி இறுதியாக சினத்தின் உச்சத்திற்கே சென்றார். அழகான கருவிழியானது எரிமலை குழம்பை போல் சிவக்கத் தொடங்கியது. போதும் நிறுத்துங்கள் அந்தணரே என்று பொறுமை கடந்து கோபத்துடன் கூறினார் பார்வதி தேவி.
அந்தணராக வந்த சிவபெருமானிடம் பார்வதி தேவி, தாங்கள் யார் என்று அறியாமல் நான் உங்களை அழைத்து உபசரித்துவிட்டேன். நீங்களோ சிவபெருமானை பற்றி எதுவும் அறியாதவர். அவருடைய பெருமைகளை உணராதவர். இக்கணம் வரை உங்களை தன்யர் என்று எண்ணியிருந்தேன். ஆனால் இப்போது தான் புலப்படுகிறது நீங்கள் தன்யர் அன்று ஆபத்தானவர் என்று தெரிகிறது.
அதற்கு அவர் இல்லை பார்வதி தேவி நான் ஒன்றும் சிவபெருமானுக்கு சத்துரு இல்லை. தேவலோகத்தில் எவ்வளவு தேவர்கள் இருக்கையில் அவர்களை வேண்டி தவம் செய்யாது எதுவும் இல்லாமல் பித்தனாக இருக்கும் சிவபெருமானை விரும்பி தவம் செய்து உன் வாழ்க்கையில் பொன்னான நாட்களை வீணடிக்கிறாயே என்று தான் கூறினேன் என்றார்.
நீர் உரைத்த பித்தனை பற்றி யாதும் அறியாமல் அவர் மீது வசை பாடத் தொடங்கிய பெரியவரே அவர் யார் என்று தெரிந்திருந்தால் நீங்கள் இவ்விதம் உரைத்திருப்பீர்களா? நீர் சொன்ன தேவர்கள் எல்லாம் இவரிடமிருந்து அல்லவா உருவானவர்கள். வேதங்கள் அனைத்தையும் படைத்தவர். பரமாத்மாவாக விளங்கும் சிவபெருமானுக்குள் அனைத்தும் அடங்கும்.
சகல சௌபாக்கியத்தையும் படைத்தவராக இருக்கும் போது நினைத்த மாத்திரத்தில் அவருக்கு வேண்டியனயாவும் வந்து சேரும். பித்தன் என்று நீர் உரைத்த சிவபெருமான் ஆதியும், அந்தமும் இல்லாத மரணத்தை வென்ற மிருத்யுஞ்ஜயர்.
சர்வலோகங்களுக்கு அதிபதியான எம்பெருமானிடமிருந்து பரப்பிரம்மா உருவானது. நீர் உரைத்த பொன் பொருள்கள் கொண்ட தேவர்கள் யாவரும் சிவனிடம் அடிப்பணிந்து நடந்து கொள்கின்றனர். சிவபெருமான் யாராலும் தோற்றுவிக்கப்படாத சுயம்பு ஆவார்.
எளிய மக்களுக்கு எப்போதும் சிவபெருமான் சாதாரணமானவராக காட்சி அளிக்கக்கூடியவர். எவர் ஒருவர் தம் மனதால் சிவம் என்ற சுப சொற்களை தங்கள் மனதில் எண்ணுகிறாரோ அவரை காணுகின்ற அந்நியர்களும் தன்யர்கள் ஆவார்.
நீர் கூறும் சாம்பலை பூசிக்கொண்டு பித்தனாக ஆடும் சிவபெருமான் எல்லா உலகத்திற்கும் ஆரம்பமாகவும் உலகில் உள்ள உயிர்கள் தோன்றவும் அவைகளை காத்து அழிக்கும் முத்தொழிலை புரியும் எண்ணிலடங்கா திருவிளையாடல்களுக்கு உரியவராக விளங்கும் அந்த சர்வேஸ்வரனை உன் போன்ற அறிவு குறைந்தவர்கள் எவ்விதம் அறிய இயலும் என்று கூறினார்.
செவி கொடுத்து கேளும் முதிய அந்தணரே அஞ்ஞான எண்ணங்களால் நிறைந்த மனதால் பரம்பொருளின் உருவத்தை அறிய இயலுமா? எவன் ஒருவன் சிவபெருமானின் பெருமைகளையும் கருணையும் உணராமல் நித்திக்கின்றாரோ அவன் பல ஜென்மங்களில் சேர்த்த புண்ணியங்கள் யாவும் எம்பெருமான் பூசும் சாம்பலாகி விடும்.
பிரபஞ்சத்திற்கே ஒளி அளிக்கக்கூடிய உடலை கொண்ட சர்வேஸ்வரரான சிவபெருமானை வசைச் சொற்களால் இழித்து பேசி வீட்டீர்கள். தங்களை அகவையில் உயர்ந்தவர் ஞானத்தால் நிரம்பியவர்கள் என்று எண்ணினேன்.
ஆனால், நீரோ குறைந்த ஞானத்தை கொண்டவராக இருக்கின்றீர்கள். இதை அறியாது நான் உங்களை அழைத்து மதித்து தங்களுக்கு வேண்டிய உதவிகளை செய்து நானே என்னுடைய புண்ணியத்தை குறைத்துக் கொண்டேன்.
துஷ்ட முதிய அந்தணரே உன்னுடைய கண்களுக்கு எம்பெருமானான சிவபெருமான் எவ்விதம் தோன்றினாலும் அவரே என்னுடைய மனதிற்கு பிரியவரும் என் விருப்பத்திற்கும் உரியவர் ஆவார். எவ்வேளையிலும் நீர் வந்து கேட்டாலும் என்னுடைய பதில் என்றும் ஒன்றே என்றார் பார்வதி தேவி.
இவ்விதம் உரைத்த பின்பு தன் தோழிகளை கண்ட பார்வதி தேவி கெட்ட மனமும் புத்தியும் கொண்ட இந்த அந்தணரை இங்கிருந்து உடனே புறப்படச் சொல். சிவபெருமானை பற்றி தவறாக நினைப்பவன் தானும் பாவத்தை அடைகின்றான்.
அவர்களின் சொற்களை கேட்பவரும் அவர்களுடைய பாவத்தில் பங்கு கொள்கிறார்கள். எனவே, இவர் போகாது இவ்விடத்தில் இருந்து எனக்கு மேலும் சிவநிந்தையே செய்வராயின் நாம் இவ்விடத்தை விட்டு வேறு இடம் செல்வோம் என்று கூறி தான் தங்கியிருந்த குடிலை விட்டு வெளியே செல்ல முற்படுகையில் ஒரு ஆனந்த காட்சியானது அங்கு உருவானது.
சிவபுராணம் நாளையும் தொடரும்....
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக