பார்வதி தேவியும், அவரது தோழியும் குடிலின் வாயிலை அடைவதற்குள் அமர்ந்து இருந்த முதிய வயதான அந்தணர் எழுந்து நின்றார். பின்பு முதிய அந்தணர் உருவத்தில் இருந்த எம்பெருமான் தன் சுயரூபமான சிவபெருமான் உருவத்திற்கு மாறினார்.
தேவி நான் உதிர்த்த சொல்களுக்கு நான் மட்டுமே காரணம் ஆவேன். என்னால் மேற்கொண்டு இனி யாவரும் இக்குடிலை விட்டு செல்ல வேண்டாம். நானே செல்கிறேன் தேவி என்றார் பரம்பொருளான சிவபெருமான்.
சிவனை பற்றிய தவறான புரிதல்களையும், எண்ணங்களையும் கொண்ட உன்னை போன்ற மதியிழந்தவர்களை காண்பது என்பது நான் மேற்கொண்ட என்னுடைய விரதத்திற்கு அது கலங்கமாகும். விரைந்து இவ்விடம் விட்டு செல்வீர்களாக என்று பார்வதி தேவி கூறினார்.
அதற்கு எம்பெருமான் பார்வதி தேவியிடம் நீர் உரைத்த யாவற்றையும் என்னைக் கண்ட பின் உரைக்க நான் விரும்புகிறேன் என்றார். ஆனால், பார்வதி தேவி தாங்களை காண்பது என்பது எனக்கு பிடிக்கவில்லை என்றும், தன்னுடைய கோபத்தை தன் தோழிகளிடம் செய்கையின் மூலம் எடுத்து கூறி அவரை இங்கிருந்து புறப்பட செய்யுமாறு கூறினாள்.
தோழிகளோ! அந்தணரே என்று கூறிய வண்ணம் திரும்பியவர்களுக்கு அங்கு அந்தணர் இல்லாமல் எம்பெருமானான சிவபெருமான் அங்கு நிற்பதைக் கண்ட அவர்கள் என்ன செய்வது என்று அறியாமல் ஓம் நமச்சிவாய என்று கூறி அலறினார்கள்.
தோழிகளின் அலறல்களை கேட்டு திடுக்கிட்டு திரும்பிய பார்வதி தேவி அந்தணர் இருந்த இடத்தில் தாம் யார் வரவேண்டி யாருடன் உரையாட விரும்பி தவம் செய்தோமோ, அந்த பரம்பொருளான சிவபெருமான் அங்கு நிற்பதை கண்ட பார்வதி தன் இருகைகள் கூப்பி என் மனதில் என்றும் நீங்காமல் நிலை கொண்டு இருக்கும் தாங்களா என்று கூறி சிவபெருமானை வணங்கி அவரின் திருவடியை காண சென்றார்.
சிவபெருமானை பார்த்த பார்வதி தேவி தம்முடைய மனதில் எழுந்த எண்ணங்கள் யாவற்றையும் சொல்ல இயலாமல் மனம் தவித்தார். தேவியின் மனதில் கொண்டுள்ள எண்ண ஓட்டங்களை அறிந்த எம்பெருமான் நானே முதிய அந்தணராக வந்தோம் என்றார்.
நான் மேற்கொண்டு நீர் புரியும் தவத்தையும், உன்னுடைய மன உறுதியையும் சோதிக்கவே அந்தணராக வந்து இந்த திருவிளையாடலை அரங்கேற்றினோம் என்று சிவபெருமான் கூறினார்.
சிவபெருமான் கூறியவற்றை அறிந்த பார்வதி தேவி அந்தணர் உருவத்தில் இருந்த சிவபெருமானை தவறாக நினைத்து அவரை வசைச்சொற்களால் கடிந்தமைக்கு மிகவும் கவலை கொண்டாள். அதைப் பார்த்த சிவபெருமான் அறியாமல் செய்யும் பிழையை நினைத்து மனம் வருந்த வேண்டாம் தேவி. நாம் இப்போதே கைலாயம் செல்வோம் என்று கூறினார்.
இனி ஒரு நாழி கூட உன்னை விட்டு என்னால் பிரிந்து இருக்க இயலாது என்றும், நீ இல்லாத ஒரு கணம் கூட ஒரு யுகமாக தோன்றுகிறது, இனி நீ என்னால் ஏற்பட்ட நாணத்தை விடுத்து என்னுடன் வீட்டிற்கு வருவாயாக என்று சிவபெருமான் தேவியிடம் உரைத்தார்.
எம்பெருமான் கூறிய வார்த்தைகளை கேட்ட பார்வதி தேவிக்கு அந்த கணத்தில் உயிர்கள் வாழும் இந்த பூவுலகில் அவர் அடைந்த இன்பம் எல்லையற்றது. இதுநாள் வரை பல இன்னல்களையும், பல விதமான கசப்புகளையும் அனுபவித்த தேவிக்கு, எம்பெருமான் அருளிய வார்த்தைகளால் யாவும் சூரிய ஒளியால் புத்துணர்ச்சி பெற்று மலரும் சூரியகாந்தி மலரை போல ஆனந்தம் கொண்டார் பார்வதி தேவி.
அப்போது மாய உலகத்தில் இருந்த பார்வதி தேவியை தனது தொடுகையால் நிகழ்கால உலகிற்கு அழைத்து வந்தார் எம்பெருமான். சிவபெருமானை கண்ட பார்வதி தேவி தாம் காண்பதும், கேட்டதும் கனவாக இருத்தல் கூடாது என்று எண்ணிய மாத்திரத்தில் எம்பெருமானே புன்னகைத்தபடி இது கனவன்றி உண்மையே! என்று உரைத்தார். அக்கணத்தில் எம்பெருமானை பார்வதி தேவி அரவணைத்துக் கொண்டார்.
சிவபெருமானும், பார்வதி தேவியும் ஒன்றிணைந்த அந்த வினாடி, அனைத்தும் அறிந்து உணர்ந்த எம்பெருமானும், மானிட பிறவியில் பிறந்த பார்வதி தேவியின் உயிரும் ஒன்றாக சங்கமித்தன.
இதுநாள் வரை சதியின் பிரிவால் பல இன்னல்களையும், சம்சார வாழ்க்கையையும் வெறுத்து இருந்த சிவபெருமானும் சதி தேவியின் அம்சமான பார்வதி தேவியை மனதார ஏற்று அரவணைத்துக் கொண்டார்.
விண்ணுலகத்தில் பல இன்னல்களுக்கு ஆளான நிலையில் இருந்த தேவர்களும் தம் மனக்கண்ணால் எம்பெருமான் பார்வதி இணைவை கண்டு ஆனந்தம் கொண்டனர்.
திருப்பாற்கடலில் ஆதிசேஷன் மீது பள்ளி கொண்டுள்ள திருமாலும், சத்யலோகத்தில் தாமரை இதழ்கள் மேல் வாசம் கொண்டுள்ள பிரம்மாவும் இக்காட்சியை கண்டு அகம் மகிழ்ந்தனர். படைப்பவரான பிரம்மாவோ இனி இந்த பிரபஞ்சம் புத்துயிர் பெற்று புதிய பரிணாமத்தை நோக்கி பயணிக்க போகின்றது என தனது துணைவியான சரஸ்வதி தேவியிடம் உரைத்தார்.
ஆனால், மகாதல லோகத்தில் வாழ்ந்து வந்த தாரகாசுரனுக்கு ஏதோ அதர்மமான நிகழ்வு நிகழ்ந்தாற் போல் எண்ணங்கள் உண்டானது.
சிவபெருமானுடன் இருந்த பிணைப்பில் இருந்து மனம் இல்லாமல் விடுபட்ட பார்வதி தேவியிடம் எம்பெருமான் நாம் வாழும் இருப்பிடம் செல்வோம் வா எனக் கூறினார்.
சிவபெருமானின் கூற்றுகளை கேட்ட தேவி தேவர்களின் அதிபதியே என் மனதில் என்றும் நீங்காமல் குடியிருக்கும் சிவபெருமானே அடியாளின் எண்ணத்தை கருணைக் காட்டி நிறைவேற்ற வேண்டுகிறேன் என்றார் தேவி.
ஆனால், சிவபெருமானோ பார்வதி தேவியிடம் இனிமேல் நீ என் இல்லாள் ஆவாள். உன்னுடைய எண்ணங்களையும், விருப்பங்களையும் நிறைவேற்றுவது என் கடமையாகும். உன் விருப்பங்களை கூறுவாயாக என்று கூறினார் எம்பெருமான்.
சிவபுராணம் நாளையும் தொடரும்....
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக