Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

புதன், 22 ஜனவரி, 2020

சிவபுராணம்..! பகுதி 45




  பார்வதி தேவி சிவபெருமானிடம் தாங்கள் என் மீது கொண்டுள்ள அன்பிற்கு நான் எத்தனை காலம் தவம் செய்தேனோ என்று தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். பிரபுவே இப்போது என்னை என் பெற்றோர் இருக்கும் வீட்டிற்கு செல்ல தாங்கள் அனுமதி அளிக்க வேண்டும்.

பிறகு பிரம்ம ரிஷிகள் மற்றும் சித்த புருஷர்களால் சுபமான ஒரு நன்னாளில் என்னை பெண் கேட்டு வந்து என் பெற்றோர் வாழ்த்துக்களுடன் நம் இருவரின் திருமணமானது உற்றார், உறவினர் முன்னிலையில் பலருடைய வாழ்த்துக்களுடன் நடைபெற வேண்டும் என்பது என்னுடைய விருப்பம் என்று தேவி எம்பெருமானிடம் வேண்டினார்.

தேவியின் விருப்பத்தை கேட்டதும் எம்பெருமான் தன் மனம் குளிர தேவியை பார்த்து தேவி இதுவே உன் விருப்பம் என்றால் எல்லாம் அவ்விதம் நடைபெறட்டும் என்று கூறினார். பின் நீ உன் வீட்டிற்கு செல்வாயாக. நான் விரைவில் நம் திருமணம் பற்றி பேச உன் தந்தையை சந்திக்கின்றேன் என்று கூறினார்.

பின் தேவியிடம் உன் தவம் இன்றுடன் நிறைவடையட்டும் என்று கூறி அவ்விடத்தை விட்டு மறைந்தார். சிவபெருமான் கூற்றுகளால் பார்வதி தேவி அடைந்த மகிழ்ச்சி எண்ணில் அடங்கா வண்ணம் விவரிக்க இயலாது செயலாக தோன்றியது. பின் குடிலில் இருந்த இசைக் கருவிகளை தோழிகள் வாசிக்க, தம் பிறப்பு முதல் இக்கணம் வரை நடந்த தாம் அறிந்த நிகழ்வுகள் யாவற்றையும் இணைத்து தன் தோழிகளுடன் பாடி ஆனந்தக் கூத்தாடினார். இவருடைய பாடல்களுக்கு இசை சேர்க்க வனத்தில் இருந்த பறவைகள் யாவும் பங்கு கொண்டன.

மகாதல லோகத்தில் விண்ணுலக தேவர்கள் வாழும் சொர்க்கத்தை கைப்பற்றியும் தம் மனதில் திடீரென நடைபெறக் கூடாத செயல்கள், அதாவது தனது அழிவிற்கான காலம் உண்டாகப்போகிறதோ என்னும் எண்ணம் அதிகரிக்க, காரணம் புரியாமல் மிகவும் குழம்பிய நிலையில் தாரகாசுரன் தன் இருக்கையில் இருந்தான்.

அவ்வேளையில் அசுர ஒற்றர் ஒருவர் வருகைத் தந்து பூலோகத்தில் நிகழ்ந்துள்ள மாற்றங்களையும், தேவர்கள் கொண்டுள்ள எண்ணங்கள் விரைவில் நிறைவேறப் போகும் என்பதை பற்றியும் கூறினான்.

அசுர ஒற்றர் ஒருவர் பூலோகத்தில் பரம்பொருளான சிவபெருமான் பர்வதராஜன் என்னும் இமவானின் மன்னருடைய மகளான பார்வதியை சிவபெருமான் மணம் முடிப்பதாக வரம் அளித்துள்ளார் என்று தாரகாசுரனிடம் கூறினான்.

ஒற்றரின் மூலம் தம் மனதில் குடிக்கொண்டுள்ள ஒரு விதமான சஞ்சலத்திற்கான பதில்கள் கிடைக்கப்பெற்று தாரகாசுரன் தெளிவடைந்தான். இந்நிலையில் தன்னுடைய வீரர்களால் சிறை பிடிக்கப்படாத தேவர்கள் அனைவரும் இத்திருமணத்தில் பங்கேற்க வருவார்கள்.

அவ்வேளையில் அவர்களை நாம் பிடித்துக் கொள்வோம். பின் பார்வதி தேவியை கொல்ல சரியான காலம் பார்த்து அவரை கொன்று விட வேண்டும் என எண்ணினான். உடனே தம் அசுர படையின் சேனாதிபதியை அழைத்தார். எண்ணிய கணத்தில் அசுர படையின் சேனாதிபதியும் அங்கு வந்தார்.

குடிலில் இருந்த பார்வதி தேவி தம்முடன் வந்த தோழிகளுடன் தன்னுடைய இருப்பிடமான, பெற்றோர் வாழும் அரண்மனையை நோக்கி தம் மனதில் பல்வேறு கனவுகளுடன் சென்றார். தன் மகளின் வருகையை அறிந்த இமயவான் மன்னன் அரண்மனை எங்கும் தோரணங்கள் மற்றும் அலங்காரம் செய்து தனது மகளின் வருகைக்காக காத்துக்கொண்டு இருந்தார்.

பல நாட்கள் கடந்து சென்றன, தம் மகளை காணாமல் தம்முடைய அகம் முழுவதும் எழுந்த எண்ணங்களை களைத்தெரிய தன் மகள் இன்று முதல் தன்னோடு இருக்கப் போகிறாள் என்று மனம் நெகிழ்ந்தார். தேவியின் வருகையை எதிர்பார்த்து காத்துக்கொண்டு இருந்த அவருடைய தாயான மேனை தேவி விரும்பி உண்ணும் உணவுகளையும், இனிப்புகளையும் சமைத்து அவரின் வருகையை எதிர்நோக்கி காத்துக்கொண்டு இருந்தனர்.

பார்வதி தேவியும் அவர்களுடன் சென்ற தோழிகளும் அரண்மனைக்கு வருகை தர மலர்களால் அவர்களை வரவேற்றனர். மேனை தேவி தன் மகளை அரவணைத்து உன்னை ஈன்ற போது அடைந்த மகிழ்ச்சியை விட நான் இக்கணம் நான் மகிழ்ந்தேன் மகளே என்று கூறி வாழ்த்துக்களையும், ஆசிகளையும் வழங்கினார்.

இமவான் தன் மகளை கண்டு மிகவும் மகிழ்ச்சி கொண்டார். அரண்மனை முழுவதும் மங்களகரமான ஒலியாலும் அழகான அலங்காரங்களாலும் நிறைந்து விண்ணுலகத்தில்ன் இருக்கும் சொர்க்கமே இம்மண்ணுலகிற்கு வாழ்வை தேடி வந்தது போன்று காட்சி அளித்தன. அடலும் பாடலுடனும் ஒரே ஆனந்த சங்கமமாக மகிழ்ச்சியாக காட்சியளித்தன.

பார்வதி தேவியின் எண்ணங்கள் சித்தமாகட்டும் என்னும் வாக்கினை அளித்து மறைந்த சிவபெருமான் புண்ணிய ஸ்தலமான காசியை அடைந்தார். தம் மனதில் சப்த ரிஷிகளை எண்ணினார். அவர் எண்ணிய மாத்திரத்தில் அதை உணர்ந்த ரிஷிகள் அனைவரும் தம்முடைய இல்லாலுடன் சிவபெருமான் இருக்கும் காசி நகரை சிவனை எண்ணிக் கொண்டே வந்தடைந்தனர்.

எம்பெருமானை கண்ட சப்த ரிஷிகளும் அறியாமை என்னும் இருளை போக்கி வெளிச்சம் அளிக்கும் எம்பெருமானுக்கு எங்களது வணக்கங்கள் என்று கூறி அவரை பலவாராக துதித்து போற்றினர். பரம்பொருளை எண்ணி உயிர்கள் வாழும் இந்த பூவுலகில் பரம பொருள் எங்களை எண்ணியத்திற்கு நாங்கள் எத்தனை பிறவிகளில் என்ன புண்ணியம் செய்தோமோ நாங்கள் தன்யர்கள் ஆனோம் என்று கூறி தங்களின் மகிழ்ச்சியை ஒரு சேர பரம் பொருளான சிவபெருமானிடம் கூறினார்கள்.

ஐயனே! எங்களை எண்ணி வரவழைத்த காரணம் யாது என்று கூறினால் அதை நாங்கள் இந்நொடியே செய்து முடிக்கின்றோம். கட்டையிடுங்கள் சர்வேஸ்வரரே என்று கூறி ரிஷிகள் யாவரும் அவரின் ஆணைக்காக காத்துக்கொண்டு இருந்தனர்.

உலகில் உள்ள அனைத்து உயிர்களாலும் மதித்து வணங்கத்தக்க ஞானம் உடைய முனிவர்களே உங்களை எண்ணி இங்கு வரவழைக்க காரணம் யாதெனில் உங்களால் ஒரு செயலானது இனிதே நடைபெற வேண்டியுள்ளது.

சிவபுராணம் நாளையும் தொடரும்....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக