Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

புதன், 22 ஜனவரி, 2020

சிவபுராணம்..! பகுதி 46



  பூவுலகில் வாழும் மானிடர்களுக்கும் விண்ணுலகில் வாழும் தேவர்களுக்கும் பல விதமான இன்னல்களை ஏற்படுத்தும் தாரகாசுரன் எனக்கு பிறக்கும் என் மகனாலே தனக்கு அழிவு வேண்டும் என்னும் வரத்தினை பெற்றான்.

பெற்ற வரத்தினை தவறாக உபயோகித்து தன்னுடைய அழிவிற்கான வழியை அவனே தேடிக் கொண்டான். தாரகாசுரனை அழித்துத் தேவர்கள் மற்றும் மானுடர்கள் அடைந்துள்ள இன்னல்களை போக்க சிவபெருமானின் குமாரன் அவதரிக்க வேண்டிய காலம் உண்டாயிற்று.

ஆகையால் யான் பார்வதி தேவியை திருமணம் செய்து கொள்ள விரும்புகிறேன். இமவான் புத்திரியான பார்வதி தேவி என்னை மணம் முடிக்க வேண்டி முனிவர்களாலும் செய்ய இயலாத கடுமையான தவம் செய்துள்ளாள். அவள் செய்த தவத்தின் பலன் அவர்களுக்கு கிடைக்க வேண்டும்.

எனவே தாங்கள் அனைவரும் பார்வதி தேவியின் பெற்றோர்களை சந்தித்து சுபச் செயல் இனிதே நடைபெறும் வண்ணம் எங்கள் இருவருக்கும் மணம் பேசி முடிக்கும் படி எண்ணுகிறேன்.

சிவபெருமானின் கூற்றுகளை கேட்ட ரிஷிகள் மட்டற்ற மகிழ்ச்சி அடைந்தனர். ஏனெனில், உலகைப் படைத்த பரம்பொருளான எம்பெருமானுக்கு திருமணம் செய்து வைப்பதில் மகிழ்ச்சி அடைகிறோம். நாங்கள் இக்கணம் சென்று தங்களின் திருமணத்தை நிச்சியம் செய்கின்றோம் எனக் கூறி சிவபெருமானிடம் உத்தரவு பெற்று அவ்விடத்தை விட்டு சென்றனர்.

ரிஷிகள் அனைவரும் இமவான் மன்னனின் அரண்மனைக்குச் சென்றனர். அரியணையில் வீற்றிருந்த இமவான் மன்னன், ரிஷிகள் மற்றும் அவர்களது மனைவிகளையும் ஒன்றாக கண்டதில் பெரும் மகிழ்ச்சி அடைந்தனர். தன் மனைவியான மேனையை அழைத்துக் கொண்டு சப்த ரிஷிகள் மற்றும் அவர்களது மனைவிகளையும் வரவேற்று அவர்களிடம் இமவான் மன்னர் ஆசி பெற்றார்.

என்னுடைய வாழ்வில் செய்தற்கரிய புண்ணியங்கள் என்ன செய்தேனோ அறியவில்லை இல்வாழ்க்கை மற்றும் தவ வாழ்க்கை மட்டும் அல்லாமல் ஞானத்திலும் சிறந்து விளங்கும் தங்கள் அனைவரையும் ஒரே இடத்தில் கண்டதில் நான் தன்யன் ஆனேன் என்று கூறினார் இமவான் மன்னர்.

இமவான் மன்னனிடம் ரிஷிகள் யான் கூறும் செய்திகளால் நீங்கள் எண்ணிலடங்கா மகிழ்ச்சியில் ஆழ்வீர்கள் என்று கூறினர். ரிஷிகளின் பேச்சுகளில் உள்ள பொருளை உணராமல் தாங்கள் யாது உரைக்க இருக்கின்றீர்கள் என இமவான் மன்னன் கேட்டார்.

பரம்பொருளான எம்பெருமான் தங்கள் மகளின் மீது மையல் கொண்டு அவர்களை மணக்க விரும்புவதாகவும், அதை பொருட்டு தங்களின் மகளை சிவபெருமானுக்கு மனம் பேசவே நாங்கள் இங்கு வந்துள்ளோம் என்றும் கூறினார்.

ரிஷிகள் கூறிய கூற்றை கேட்ட இமவான் மன்னன் இவ்வுலகில் நிலைக் கொள்ளாமல் விண்ணுலகிற்கும், மண்ணுலகிற்கும் உள்ள உயிர்களிடத்தில் பெருமகிழ்ச்சி கொண்டார். பரம்பொருளான எம்பெருமானுக்கு தம் மகளான பார்வதி தேவியை மணம் முடித்து கொடுப்பதில் எவ்விதமான ஐயமும் இல்லை ரிஷிகளே.

இவ்வேளையில் என் மகளான பார்வதி தேவியை எண்ணி நான் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன் என்று தம் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். ஆனால், பார்வதி தேவியின் அன்னையான மேனை தேவிக்கு இதில் விருப்பமில்லை என்றாலும் தம் மகளின் மகிழ்ச்சிக்காவே புன்முறுவல் பூத்த முகத்துடன் காட்சியளித்தார்.

மேனை தேவியின் எண்ண ஓட்டங்களை அறிந்த சப்த ரிஷிகள் மேனை தேவியே நீங்கள் ஏதும் ஐயம் கொள்ள வேண்டியதில்லை. இந்த உலகத்தில் யாருக்கும் கிடைக்காத அதி உன்னதமான பாக்கியம் நீங்கள் பெற்றுள்ளீர்கள் என்று கூறினார்.

ரிஷிகளின் மனைவிமார்கள், மேனை தேவிக்கு இவர்கள் கூறியவற்றில் இருந்து மனம் அமைதி கொள்ளவில்லை என்பதை அறிந்தனர். பின்னர் மேனை தேவியை தனியாக அழைத்து சென்று தங்களுக்கு வரப்போகும் மருமகனின் பெருமைகளை எடுத்துக் கூறி புரிய வைத்தனர்.

ரிஷிகளின் மனைவிமார்கள் உரைத்த கூற்றுகளில் இருந்து தம் மகளை மணக்க இருப்பவரின் பெருமைகளை உணர்ந்து பின் தன் மகளை சர்வேஸ்வரனுக்கு திருமணம் செய்து வைக்க சம்மதம் அளித்தார். திருமணம் என்பது மணமக்களின் விருப்பம் மட்டுமின்றி அவர்களின் பெற்றோர்களின் விருப்பத்துடனும், ஆசியுடனும் நடைபெற வேண்டும்.

தாய், தந்தையின் ஆசிகளே பிள்ளைகளை எப்போதும் அரணாக இருந்து பேணி காக்கும் என ரிஷி மக்கள் பர்வதங்களை ஆளும் இமவான் மன்னன் அவரின் துணைவியான மேனை தேவியிடம் கூறினார்கள்.

தன் துணைவியின் விருப்பங்களை அறிந்து கொண்ட இமவான் மன்னன் தங்களின் மகளாகிய தேவி பார்வதியை சர்வேஸ்வரருக்கு திருமணம் செய்து வைப்பதில் எங்கள் இருவருக்கும் பரிபூரணமான சம்மதம் என்று கூறினார்.

பின்பு தம் மகளாகிய பார்வதி தேவியை அழைத்து ரிஷிகளிடம் ஆசி பெறச் செய்தார். ரிஷிகளும் அவர்களது துணைவியுடன் இணைந்து நிற்க பார்வதி தேவி அவர்களை பணிந்து நின்று ஆசி பெற்றார். தேவி பார்வதி உம் மனதில் ஏற்பட்ட எண்ணம் போல் விரைவில் சர்வேஸ்வரரான சிவபெருமானை உற்றார், உறவினர் முன்னிலையில் மனம் முடிப்பாயாக என ஆசி வழங்கினர்.

இமவான் மன்னன் விகலைப் பொழுதில் அனைவரும் அமர்ந்து சுப செயலை பேசுவதற்கான மேடையை ஆடம்பரமின்றி அழகான விரிப்பான்களுடன் மலர்களும், பழங்களும் நிறைந்த தாம்பூலங்களுடன் ஏற்பாடு செய்தார்.

பின்னர் ரிஷிகள் அவர்களது துணைவியுடன் அமர்ந்து தேவி பார்வதியின் பெற்றோர்களுடன் கூடி திருமணத்திற்கு உரிய ஒரு சுபதினத்தை குறித்தனர். சிறிது காலத்திற்கு பின்பு சர்வேஸ்வரனின் திருமண முகூர்த்தத்தை குறித்த ரிஷிகள் தேவியின் பெற்றோர்களிடம் இருந்து விடைபெற்று வரும் போது அவர்களை அனுப்ப மனமில்லாமல் என்ன செய்வது என்று புரியாமல் இருந்தார் இமவான் மன்னர்.

சிவபுராணம் நாளையும் தொடரும்....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக