புதன், 22 ஜனவரி, 2020

சிவபுராணம்..! பகுதி 47
  இமவான் மன்னரின் தயக்கத்தை உணர்ந்த ரிஷிகள், தங்களை விட்டு பிரிவதற்கு எங்களுக்கும் மனமில்லை. இருப்பினும் திருமண வேலைகள் உள்ளதை எண்ணி நாம் பிரிய வேண்டியுள்ளது எனக் கூறி அவர் மனம் இன்னல் கொள்ளாமல் பிரியாவிடையுடன் அவ்விடத்தை விட்டு எம்பெருமான் இருக்கும் காசி நகரை அடைந்தனர்.

பின்பு சர்வேஸ்வரனை வணங்கி இமவான் மன்னன் அரண்மனையில் நிகழ்ந்த நிகழ்வுகள் யாவற்றையும் கூறி தங்களுக்கும் பார்வதி தேவிக்குமான திருமண நாளை குறித்து வந்துள்ளதையும் கூறினர்.

மிகவும் மகிழ்ச்சியான செயல்களை செய்து வந்துள்ளீர்கள் என சிவபெருமான் கூறினார். சப்த ரிஷிகளே என்னுடைய விவாகத்தில் முக்கிய பணிகளை மேற்கொண்டு இத்திருமணத்தை பிரசித்தி பெரும் வகையில் நடத்திக் கொடுக்க வேண்டும் என்று கூறினார்.

அதற்கு சப்த ரிஷிகளும் தங்களின் விருப்பத்தை நிறைவேற்றுவது எங்களின் கடமையாகும் எனக் கூறி நாங்கள் எங்களின் இருப்பிடம் செல்ல தாங்கள் அனுமதி அளிக்க வேண்டும் என்றனர்.

பின்னர் எம்பெருமான் நீங்கள் அனைவரும் உங்களின் சீடர்களோடு என் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வேண்டும் என்று கூறி அவர்கள் புறப்படுவதற்கு அனுமதி அளித்தார். ரிஷிகளும் அவ்விடத்தை விட்டு புறப்பட்டு சென்றனர்.

சப்த ரிஷிகளும் புறப்பட்டுச் சென்ற சிறிது நேரத்தில் எம்பெருமானும் காசி மாநகரை விடுத்து தான் என்றும் குடியிருக்கும் கைலாய மலைக்கு சென்றார். எம்பெருமானின் வருகைக்காக காத்துக்கொண்டு இருந்த நந்தியும் கணங்களும் சிவபெருமானை கண்டதும் தங்களது மகிழ்ச்சிகளை வெளிப்படுத்தினார்.

நந்தி தேவரோ மட்டற்ற மகிழ்ச்சி அடைந்தோம் உலகை ஆளும் சர்வேஸ்வரரே என்று கூறி இனி கைலாயம் மீண்டும் உயிர் பெற்று எங்களின் அன்னைக்கான வருகையை எதிர்நோக்கியுள்ளது என்று கூறி ஆடலும், பாடலுடனும் கைலாயமே மகிழ்ச்சி கொண்டது.

ஆடலுடனும், பாடலுடனும் கைலாயமே மகிழ்ச்சி கொண்ட நிலையில், எம்பெருமானும் அவர்களின் மகிழ்ச்சியில் பங்கு கொண்டு அவர்களுக்கு மேலும் மகிழ்ச்சியை உருவாக்கினார். சிறிது நேரத்திற்கு பின்பு நாரத முனிவரை மனதில் நினைக்க நாரதரும் அங்கு வருகைத் தந்தார்.

நாரதருக்கு நாம் வந்துள்ள இடம் தான் கைலாயமோ அல்லது வேறு இடமோ என்று என்னும் அளவிற்கு பூத கணங்களின் ஆடலும், பாடலும், மிருதங்க ஒலியும் மிகுந்து காணப்பட்டது. பின்பு தாம் சரியான இடமான கைலாயத்திற்கு தான் வந்துள்ளோம் என்பதை நாரதர் உறுதிப்படுத்திக் கொண்டார்.

பின்பு நாரத முனிவரை கண்ட நந்தி தேவரும் பூத கணங்களை அமைதிப்படுத்தி நாரதரை எம்பெருமானிடம் அழைத்துச் சென்றார். பின்பு இவர்களின் உரையாடல்களுக்கு எவ்விதமான இடையூறுகளும் ஏற்படாத வண்ணம் அங்கு இருந்த கணங்கள் அனைவரையும் நந்தி தேவர் அழைத்துச் சென்றார்.

எம்பெருமானை கண்ட நாரதர் அவரை வணங்கி பின்பு தங்களின் மகிழ்ச்சியான இந்த தருணங்களில் அடியேனை நினைக்க என்ன காரணம்? என்று புன்முறுவலுடன் எதையும் அறியாதவாறு கேட்டார்.

நாரதரே நிகழ்ந்த நிகழ்வுகள் தாம் அறியாது போல் கேட்கின்றீர்களே! என சிவபெருமான் கேட்டார். இல்லை மகாதேவரே அடியேன் ஏதும் அறியாதவன் என்று கூறினார் நாரதர்.

பின்பு நிகழ்ந்த நிகழ்வுகள் அனைத்தையும் எம்பெருமான் கூறினார். எம்பெருமான் கூற அந்த நிகழ்வுகளை எண்ணி மனம் மகிழ்ந்தார் நாரதர். இறுதியில் சிவபெருமான், பார்வதி தேவி என்னை மனம் முடிப்பதற்காக பல்வேறு இன்னல்களையும் அனுபவித்து மனம் தளராமல், தான் மேற்கொண்ட முயற்சியில் வெற்றி கண்டு என்னையும் தன் வசப்படுத்தியதாக சிவபெருமான் கூறினார்.

நாரதர் சிவபெருமானிடம் நீங்கள் பக்தர்களின் வேண்டுதலுக்கு இணங்கி அவர்களின் வசம் செல்வது என்பது புதிதான செயலுமன்று. பார்வதி தேவியின் தவத்தின் வலிமை அறிந்து தாங்கள் அவர்களுக்கு வரமாக தங்களை அளித்ததும் அவரின் மனவிருப்பத்தினை நிறைவேற்றும் பொருட்டு நான் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தேன்.

மகாதேவரே! இனி நான் தங்களுக்கு ஏதாவது செயல் செய்ய வேண்டியுள்ளதா எனக் கேட்டு ஆணையிடுங்கள். எந்த செயலாக இருப்பினும் எவ்விதமான தடையுமின்றி அதை உடனே நிறைவேற்றுகிறேன் என்று கூறினார். நாரதரே! இவ்வுலக நன்மையை கருதி நான் பார்வதி தேவியை அடைவேன்.

இதில் எவ்விதமான ஐயமும் கொள்ள வேண்டியதில்லை. இனி நான் சொல்லும் செயலை பிரம்மபுத்திரரே அதை நீரே செய்ய வேண்டும். நாரதரே சத்தியலோகத்தில் இருக்கும் பிரம்ம தேவருக்கும், பாற்கடலில் வீற்றிருக்கும் திருமாலையும் மற்றும் தேவர்கள், முனிவர்கள், சப்த மாதர்கள் என அனைவரையும் என் திருமண விழாவிற்கு அழைக்க வேண்டும்.

பின் என் திருமண விழாவிற்கு வருகை தராதவர்கள் என்னுடன் அன்பு கொள்ளாமல் இருப்பவர்கள் என அனைவருக்கும் கூற வேண்டும் என்று கூறினார். அவர் உரைத்த செயலை இனிதே முடித்தருள அவரின் ஆசி பெற்று புறப்பட்டார்.

அந்த நொடிப் பொழுது முதலே சிவபெருமான் பார்வதி திருக்கல்யாணம் பற்றி அனைத்து தேவர்களுக்கும் முறையான முறையில் நேரில் சென்று அழைக்க வேண்டியவர்களுக்கு, நேரில் சென்று திருமண நிகழ்வை சொல்லி அனைவரையும் அழைத்தார்.

தகுந்த தூதுவர்கள் மூலம் ஓலை அனுப்பி திருமண செய்திகள் அனைவருக்கும் சென்று கிடைக்கும் விதத்தில் அனுப்பினார். இவ்வாறு எவரையும் மறக்காமல் அனைவருக்கும் பார்வதி பரமேஸ்வரனின் திருமண நிகழ்வு பற்றிய செய்தி அனைவருக்கும் சென்றடைந்தன.

சிவபுராணம் நாளையும் தொடரும்....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Follow and Join with US

தினமும் எங்கள் வாசகர்கள் மற்றும் நண்பர்கள் பல்வேறு செய்திகளை பெறுகின்றனர் நீங்களும் இணைத்து எங்களை வழி நடத்துங்கள்