நாரதர் திருமண நிகழ்ச்சி பற்றிய தகவலை அனைவருக்கும் சென்று சேருமாறு அனுப்பினார். தேவர்களுக்கும், அசுரர்களுக்கும் எம்பெருமானின் திருமண செய்திகள் சென்றடைந்தன. இந்த தகவலை அறிந்த அனைவரும் மிகுந்த மகிழ்ச்சி கொண்டனர்.
ஆனால், தாரகாசுரன் இத்திருமணத்தை நிறுத்தியாக வேண்டும் என எண்ணினான். சிவபெருமானுக்கும், பார்வதி தேவிக்கும் திருமணம் நடைபெற்றால் சிவபுத்திரன் உருவாகி விடுவான். அவன் தோற்றம் என் அழிவை உறுதி செய்யும் என எண்ணி தன் அசுர படைகளை அழைத்தான்.
தயார் நிலையில் இருந்த அசுர படையும் அவர்தம் சேனாதிபதியும் அசுர குல வேந்தனின் ஆணைக்காக காத்துக்கொண்டு இருந்தன. அவ்வேளையில் அசுர குல குரு சுக்கிராச்சாரியார் அசுர வேந்தனின் அரண்மனைக்கு வருகைத் தர, அங்கு கண்ட காட்சிகளை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
தம் மனதில் தோன்றிய எண்ணம் சரியென யூகிக்கும் வகையில் அங்கு நடந்த நிகழ்வுகள் யாவும் இருந்தன. பார்வதி தேவிக்கும், சிவபெருமானுக்கும் திருமணம் நடைபெறப் போகும் செய்திகள் மக்கள் அனைவருக்கும் தெரிவிக்கப்பட்டன.
இச்செய்தியை கேட்ட மக்கள் அனைவரும் மிகுந்த மகிழ்ச்சி கொண்டனர். அரண்மனையில் திருமண ஏற்பாடுகளில் விருப்பத்துடன் கலந்து கொண்டனர். திருமணம் நடைபெறும் இடங்கள் மட்டும் அலங்கரிக்கப்படாமல் ராஜ்ஜியத்தில் உள்ள ஒவ்வொரு வீடுகளும் அலங்கரிக்கப்பட்டன.
சாலைகள் தோறும் மாவிலை தோரணங்கள் கட்டப்பட்டன. எழில்மிகு வண்ணங்கள் கொண்ட கோலங்களால் சாலைகள் நிரம்பி காணப்பட்டன. விருந்தினர் வந்து தங்குவதற்காக பெரிய பெரிய அழகிய வேலைப்பாடுகளுடன் நிரம்பிய பந்தல்கள் அமைக்கப்பட்டு இருந்தன.
பார்வதி தேவியின் திருமணச் செய்தியை கேட்டதும் ஒவ்வொரு நாளும் பண்டிகையை போன்று கொண்டாடினர். எங்கும் எத்திசையிலும் ஆடல் பாடல்கள் நிறைந்த மகிழ்ச்சியான தருணங்களாகவே இருந்தன.
இமவான் மன்னன் தனது நட்பு அரசாட்சிக்கு உட்பட்ட மன்னர்களுக்கும் அழைப்பு கொடுத்திருந்தார். அவர்களும் அவர்கள் நாட்டு மக்களும் இமவான் மன்னனின் மகளான பார்வதி தேவியின் திருமண விழாவிற்கு வருகை தந்தனர்.
பர்வதங்கள் நிரம்பி வழிந்த இமவான் மன்னனின் அரசாட்சியில் மேலும் மேலும் பல பர்வதங்கள் வந்து நிறைவது போன்று மக்களின் வருகையும் அதிகரித்துக் கொண்டே இருந்தன. வருகின்ற மக்களுக்கும் எந்த விதமான இன்னலுக்கும் ஆளாகாமல் இருக்கவும், எதிரி நாட்டு படைகளால் துன்பம் நேராமல் இருக்கவும் மிகுந்த பாதுகாப்பும் சட்ட ஒழுங்கும் காக்கப்பட்டன.
எழில்மிகு வண்ணப் பட்டாடைகள் மற்றும் ஆபரணங்கள் அணிந்து கொண்டு பெண்களை காண தேவலோக கன்னிகள் போன்று காட்சியளித்தன. ராஜ்ஜியத்தில் உள்ள ஒவ்வொருவரும் இத்திருமணம் தம் வீட்டில் நடைபெற போவதாக எண்ணி மிகுந்த மகிழ்ச்சியுடன் ஒவ்வொரு ஏற்பாடுகளிலும் கலந்து கொண்டனர்.
திருமணத்திற்கான வருகைத் தந்த நண்பர்களையும், உறவினர்களையும் கண்டு அவர்களிடம் நலம் விசாரித்துக் கொண்டு மணமகனான சிவபெருமானின் வருகைக்காக காத்துக் கொண்டு இருந்தார் இமவான் மன்னன்.
இமவான் மன்னன் அரசாட்சியில் திருமண ஏற்பாடுகள் கோலாகலமாக ஒவ்வொரு நபரின் முகத்தில் மகிழ்ச்சியும் ஆனந்தமுமாக இருக்க, கைலாயத்தில் திருமண ஏற்பாடுகள் வெகு விமர்சையாக இருந்தன.
பாற்கடலில் வீற்றிருந்த திருமாலும், லட்சுமி தேவியும் சத்தியலோகத்தில் வீற்றிருக்கும் பிரம்மதேவரும், சரஸ்வதியும் கைலாயத்திற்கு வருகைத் தந்தனர். தேவர்கள், முனிவர்கள் மற்றும் ரிஷி முனிவர்களும் அவர்களின் மாணவர்களும் வந்து சேர்ந்தனர்.
அஸ்டவசுக்கள் மற்றும் திக் பாலகர்கள் ஆகியோர் தங்கள் பரிவாரங்களுடன் வந்து சேர்ந்தனர். திருமண நிகழ்விற்கு வருகைத் தந்த அனைவரும் மிகுந்த மகிழ்ச்சியுடன் பார்வதி பரமேஸ்வரனின் திருமண தருணங்களை காண ஆவலோடு எதிர்பார்த்துக் காத்துக் கொண்டு இருந்தனர்.
எம்பெருமான் அணிவதற்கென குபேரன் பல அதிநுட்பமான வேலைப்பாடுகள் நிறைந்த அணிகலன்களையும், ஆடைகளையும் கொண்டு வந்தார். ஆனால், இவை யாவும் உடுத்தாமலும், அணியாமலும் பரம்பொருளான சிவபெருமான் இந்த பிரபஞ்சத்தில் மிகுந்த அழகு கொண்டவராக திகழ்ந்தார்.
அசுர குல வேந்தன் தாரகாசுரன் திருமணச் சடங்கில் பாதிப்பை ஏற்படுத்தவும், பார்வதி தேவியை கொல்லவும் தனது படை வீரர்களை அனுப்ப தயாரான நிலையிலும் அவர்களுக்கான ஆணைகள் யாவும் பிறப்பித்துக் கொண்டிருந்தான்.
இதைக் கண்டதும் இது என்ன அனர்த்தமான செயல் என்று அசுர வேந்தனிடம் அசுர குல குரு கூறினார். அதற்கு தாரகாசுரன் இதில் என்ன அனர்த்தம் உள்ளது குருவே, சிவபெருமானின் திருமணம் நடைபெற்று அவர்களுக்கு புத்திரன் உருவானால் என்னுடைய அழிவு என்பது உறுதியானதாகும்.
அதைத்தான் எங்களின் குல குருவாகிய தாங்கள் விருப்பப்படுகிறீர்களோ எனக் கேட்டார். வேந்தனாக இருக்கும் தாரகாசுரனே அசுர குலத்தோரின் நம்பிக்கையாக திகழும் நீ இது போன்றதொரு எண்ணங்களை கைவிடுதல் என்பது அவசியமாகும்.
தன்னுடைய மாணவனின் அழிவிற்கு ஒரு குருவாகிய நானே காரணமாக இருப்பேனா என்று கூறினார். உன்னுடைய அழிவானது சிவபுத்திரன் கைகளில் மட்டுமே உள்ளது. ஆனால், இப்பொழுது நடைபெறும் சிவ பார்வதி திருமணத்தால் உன்னுடைய அழிவு இன்னும் உறுதியாக வில்லை.
ஏனெனில், இப்போது நடைபெறும் திருமணத்தால் சிவ புத்திரன் உருவாகுவதற்கான சாத்தியம் என்பது மிகவும் குறைவு என்று அசுர குருவான சுக்கிராச்சாரியார் கூறினார். அதற்கு தாரகாசுரன் தாங்கள் உரைப்பதில் உள்ள பொருள் என்னவென்று என்னால் அறிந்துக்கொள்ள முடியவில்லை என்றான்.
சிவபெருமானின் சிரசில் உள்ள மகுடத்தில் சந்திரன் அமர்ந்திருக்க நெற்றிக்கண்ணானது திலகமாகவும், காதுகளிலும், மார்புகளிலும் இருந்த சர்ப்பங்கள் பொற் குண்டலங்களாயின. வாசனை மலரும் சந்தனங்களாயின சாம்பல். யானைத் தோல் பட்டாடைகளாக மாற்றம் பெற்றன.
இதுநாள் வரை எளிமையான உருவத்தில் காணப்பட்டவர் இந்த திருமணத் தோற்றத்தில் எம்பெருமானின் அழகு மிகவும் மிகையுற்றது. சிவபெருமானின் அருளாலே அவரின் உடலில் இருந்த இயற்கையே அவருக்கு சிறந்த ஆபாரணமாக விளங்கியது. இவருடைய இயற்கையான ஆபரணங்கள் முன்னர் குபேரன் எடுத்து வந்த ஆபரணங்கள் யாவும் முக்கிய பொருட்டாக தெரியவில்லை.
மணமகன் தோற்றத்தில் எவராலும் எக்காலத்திலும் எவ்விதத்திலும் எடுத்து சொல்வதற்கு சொற்கள் இல்லாமல் மிகுந்த கலாதியுடன் காணப்பட்டார் எம்பெருமான். அசுரலோகத்தில் இருக்கும் தாரகாசுரனுக்கு புரியும் விதத்தில் அதாவது, எம்பெருமானும் பார்வதி தேவியும் மணம் செய்து கொண்டாலும் அவர்களுக்கு புத்திர பாக்கியம் என்பது இல்லை என சுக்கிராச்சாரியார் கூறினார்.
சிவபுராணம் நாளையும் தொடரும்....
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக