எம்பெருமானுக்கும், பார்வதி தேவிக்கும் புத்திர பாக்கியம் என்பது இல்லை என சுக்கிராச்சாரியார் கூறியதைக் கேட்ட தாரகாசுரன், தாங்கள் என்ன கூறுகின்றீர்கள் குருவே பார்வதி தேவிக்கு பிள்ளை வரம் என்பது கிடையாதா? என்று கேட்டான். அதற்கு சுக்கிராச்சாரியார் மன்மதனின் மனைவியான ரதி தேவியின் சாபத்தால் பார்வதி தேவி கருவுற்று பிள்ளை பெற இயலாது என்று கூறினார்.
தனது குருதேவர் சிவபெருமானுக்கு புத்திரன் பிறக்க வாய்ப்பில்லை எனக் கூறியதும் மிகுந்த மகிழ்ச்சி கொண்டான் தாரகாசுரன். அசுர குல வேந்தனே நீ எவ்வகையிலும் பார்வதி தேவியின் திருமணத்தில் தடைகளை ஏற்படுத்தக்கூடாது. மேலும், எம்பெருமானின் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்ள விருப்பமுள்ள அசுரர்களை அழைத்துச் செல்ல அனுமதி வேண்டும் என்றார்.
மகிழ்ச்சியான செய்தி சொன்னீர்கள் குரு தேவரே! இனி நான் பார்வதி தேவியின் திருமணத்தில் எவ்விதமான தடைகளையும் ஏற்படுத்தமாட்டேன் என்றும் விருப்பமுள்ள அசுரர்களை தங்களுடன் தாராளமாக அழைத்துச் செல்லலாம் என்றும் தாரகாசுரன் கூறினான்.
அசுரகுல குருவான சுக்கிராச்சாரியார் எம்பெருமான் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்ள அசுர படைகளுடன் எம்பெருமான் வீற்றிருக்கும் கைலாயத்திற்கு தனது பயணத்தை தொடர்ந்தார். ததிசி முனிவரின் பாதுகாப்பில் இருந்த தேவேந்திரனும் மற்ற தேவர்களும் திருக்கல்யாண நிகழ்வை பார்க்க இயலாததை எண்ணி எம்பெருமானை நோக்கி மனமுருகி வேண்டி நின்றனர்.
எம்பெருமானும் அவர்களின் வேண்டுதலுக்கு செவி சாய்த்து நந்தி தேவரை அழைத்து ததிசி முனிவரின் குடிலில் உள்ள இந்திர தேவரையும் மற்றும் மற்ற தேவர்களையும் அழைத்து வரும் படி கூறினார். நந்தி தேவரும் புறப்பட்டு சென்று மாப்பிள்ளை ஊர்வலம் தொடங்குவதற்கு முன்பாக வர வேண்டும் என எண்ணி விரைந்து சென்றார். ஏற்கனவே தாரகாசுரன் பிறப்பித்த ஆணைகளால் இவர்களின் வருகைக்காக காத்துக் கொண்டு இருந்த அசுரர்கள் நந்தி தேவருடன் வந்த தேவர்களை சிறைப்பிடிக்க முயன்றனர்.
இருப்பினும் அவரது முயற்சிகள் யாவும் சிவபெருமானின் பரிபூரணமான அருள் பெற்ற நந்திதேவரின் முன்னிலையில் எடுபடவில்லை. அவர்களை தாக்கிய அசுரப் படைகளை வெற்றிக் கொண்டு இந்திர தேவன் மற்றும் அவர்களுடன் இருந்த மற்ற தேவர்களையும் நந்தி தேவர் பாதுகாப்புடன் கைலாய மலைக்கு அழைத்துச் சென்றார். கைலாய மலைக்கு வந்த தேவர்கள் மகாதேவரான மணமகன் கோலத்தில் இருக்கும் சிவபெருமானை வணங்கி எங்களின் விருப்பங்களுக்கு செவி சாய்த்து இந்நிகழ்வை காண வைத்தமைக்கு நன்றி கூறினார்கள்.
பிரம்ம தேவரும், திருமாலும் மணமகன் அலங்காரத்தில் உள்ள எம்பெருமானின் அருகில் நிற்க இந்திரன் முதலான தேவர்களும் யானை, குதிரை, ரதம் போன்ற அவர்களது வாகனங்களில் அமர்ந்து எம்பெருமானை வணங்கினார்கள். பின்பு சப்த ரிஷிகள், கந்தர்வர்கள், திக் பாலகர்கள், நாகர்கள் மற்றும் தேவலோக கன்னிகள் என அனைவரும் கைலாய மலைக்கு வந்தனர். கைலாயம் முழுவதும் சிவபெருமானின் திருமண நிகழ்ச்சியால் மகிழ்ச்சி கொண்டது.
இவர்கள் அனைவரையும் கண்ட எம்பெருமான் நீங்கள் அனைவரும் முன்னே செல்வீர்கள் என பணிந்தார். அவர்களும் எம்பெருமானின் கூற்றுக்கு இணங்கி அனைவரும் முன்னே சென்றனர். எம்பெருமானின் பெருமைகளை எட்டு திசைக்கு கூறியும், மங்கள வாத்தியங்களான மத்தளம், மிருதங்கம் மற்றும் எக்காளம் போன்றவற்றைக் கொண்டு இசைகள் இயற்றப்பட்டன.
கந்தர்வர்களும் அவ்விசைக்கு ஏற்ப அழகிய நடனங்களை இயற்றினர். கூட்டத்தை சீராகவும் முறையாகவும் இருக்கவும் பொற்பிரம்பைக் கையில் ஏந்தி அனைவரையும் நந்திதேவர் வழி நடத்தினார். இவ்வளவு கோலாகலத்துடன் மணமகன் அலங்காரத்துடன் ரிஷப வாகனத்தில் அமர்ந்து திருமணம் நடைபெறும் இடத்தை நோக்கி அனைவரும் பயணிக்கத் தொடங்கினார்கள்.
ஆடல் பாடலுடன் சென்ற தேவர் கூட்டம் திடீரென நின்றனர். நந்தி தேவரோ! என்னவென்று சொல்வது எம்பெருமானே அசுரர் படை நம் பயணத்தின் குறுக்கே நிற்பதைக் கண்டு அனைவரும் நின்றனர் என்று கூறினார். பின் அசுர வீரர்கள் அனைவரும் ஒதுங்கி நிற்க அசுர குல குருவான சுக்கிராச்சாரியார் முன்னர் வந்து எம்பெருமானை கண்டு அவரிடம் ஆசி பெற்று, பின் எவ்விதமான பாகுபாடின்றி அனைவருக்கும் வேண்டும் வரங்களை அளிக்கும் சர்வேஸ்வரரே தங்களிடம் எங்களின் கோரிக்கைகள் ஒன்று உள்ளது. அதாவது தங்களின் திருமண நிகழ்ச்சியில் அசுரர்களாகிய நாங்களும் கலந்து கொள்ள தாங்கள் அனுமதி அளிக்க வேண்டும் என்று கூறினார்.
அசுர குல குருவின் வேண்டுகோளுக்கு இணங்கி அவர்களையும் தன்னுடைய திருமண நிகழ்வில் கலந்துக்கொள்ள கருணைக் கடலான எம்பெருமான் அருளினார். அசுர குல குருவுடன் வந்த அனைத்து அசுர குல வீரர்களும் தேவர்களுடன் திருமண ஊர்வலத்தில் இணைந்து சென்றனர்.
கைலாயத்தில் இருந்து புறப்பட்ட திருமண ஊர்வலம், தன்னுடைய ராஜ்ஜியத்தின் எல்லைகளை தாண்டி விரைவில் தனது அரண்மனையை அடைய போகின்றார்கள் என்னும் செய்தியை அறிந்ததும் இமவான் மன்னனின் அரண்மனையில் செயல்பாடுகள் அனைத்தும் துரிதமாயின. வருகின்றவர்களை வரவேற்க அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் இருக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
சிவபுராணம் நாளையும் தொடரும்....
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக