Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

புதன், 22 ஜனவரி, 2020

சிவபுராணம்..! பகுதி 50


  பர்வதங்களை ஆளும் பர்வதராஜன் (இமவான்) தனது தலைநகரம் முழுவதும் எம்பெருமான் அவருடன் பயணித்து வருபவர்களும் அரண்மனையை அடையும் விதமாக அவர்கள் பயணிக்கும் பாதைகள் அனைத்திலும் அழகிய ஏற்பாடுகளும் எத்திசை திரும்பினாலும் மங்களகரமான ஒலிகள் கேட்கும் வண்ணமும் ஏற்பாடுகள் அனைத்தும் அமைக்கப்பட்டு இருந்தன.

அவர்களின் பாதை நெடுங்கிலும் அலங்கரிக்கப்பட்ட யானைகளும், குதிரைகளும் வழி நெடுங்கிலும் நின்று மணமகன் (சிவபெருமான்) வீட்டாரின் வருகைக்காக காத்துக்கொண்டு இருந்தனர். தனது தூதுவர்கள் மூலம் அறிந்த இமவான் மன்னன் தன் குடும்ப உறுப்பினர்களுடன் மங்கள இசையுடன் மணமகனின் வீட்டாரை கண்டு மிகுந்த வியப்பு கொண்டார். ஏனெனில், கனவிலும் காண இயலாத காட்சிகள் அல்லவா அனைத்து தேவர்களையும் அவர்களின் அதிபதியான இந்திரன் தேவ மற்றும் அசுர குல குருதேவர்கள் என அனைவரும் ஒருமித்து பங்கு கொண்டனர்.

தேவர்கள் பயணிக்கும் வழி எங்கும் மன்னன் தனது படையை அலங்காரத்துடன் நேர்த்தியான முறைகளில் வைத்ததையும், மக்கள் கொண்ட மகிழ்ச்சியையும் கண்டு வியந்தனர். பின் அவர்கள் அனைவரும் திருமண ஏற்பாடுகள் நிறைந்துள்ள அரண்மனையை நோக்கி சென்றனர். யாருக்கும் வேறுபாடின்றி வேண்டும் வரத்தினை அளிக்க வல்லவரும் இந்த அகிலமே போற்றி கொண்டாடும் எம்பெருமானான சிவபெருமானை காண வேண்டும் என எண்ணி அரண்மனையில் உள்ள உப்பரிகையில் ஏறி மணமகன் வீட்டாரின் வருகையை பார்த்துக்கொண்டு இருந்தார் மேனை தேவி.

இவரை மணப்பதற்காக என் மகள் அடைந்த இன்னல்களுக்கு இவர் உரியவரா, இந்திரன் போன்ற தேவர்களின் அழகில் சிறந்தவரா என மனதில் எண்ணியவாறு அவருடைய வருகைக்காக இமைப்பொழுதும் விலகாமல் காத்துக்கொண்டு இருந்தார். அவருடன் நாரதரும் எம்பெருமானின் உடன் வருபவர்களையும், அவர்களை பற்றியும் எடுத்து உரைத்துக் கொண்டு இருந்தார்.

அழகிய நடன அசைவுகளுடன் தேவ மங்கைகள் சூழ்ந்து வர மிகவும் நேர்த்தியான உடை அலங்காரத்துடன் இருந்த கந்தர்வர்களில் சிறந்தவரான விசுவாசுவைக் கண்டதும் தன் மகளை மணக்க போகும் மணமகன் இவர்தானா? என்று மேனை நாரதரிடம் கேட்டார். இல்லை தேவி. இவர் சிவபெருமானின் சந்நிதானத்தில் கீதம் பாடும் கந்தர்வராஜன் விசுவாசு என்று கூறினார்.

நாரதர் கூறியதைக் கேட்ட மேனை தேவி ஆச்சரியத்தில் ஆழ்ந்தார். ஏனெனில், சந்நிதானத்தில் பாடக்கூடிய இவரே இவ்வளவு அழகுடன் இருக்கும் போது சிவபெருமான் எவ்வளவு அழகு உள்ளவராக இருப்பார் என எண்ணினார்.

அரண்மனையில் இருந்த எல்லா பெண்களையும் விட மகளே சிறந்தவள் என்றும், மேலும் தம் மகள் அடைந்துள்ள சிறப்பினை எண்ணி மிகவும் ஆனந்தம் கொண்டார் மேனை தேவி. கந்தர்வர்களை அடுத்து யக்ஷர்களும் அவர்களுடைய தலைவரான குபேரன் வருகைத் தந்தார்.

அவரைக் கண்டதும் இவர்தான் சிவபெருமானா? என்று கேட்டார் மேனை தேவி. இல்லை தேவி. இவர்தான் குபேரன் என்றும் நவநதிகளுக்கும் அதிபதி ஆவார் என்றும் நாரதர் கூறினார். குபேரனை தொடர்ந்து வருணன், தேவ மங்கையர்களுடன் இந்திரன் என ஒவ்வொருவரையும் இவர்தானா சிவபெருமான் என கேட்டு வந்தார் மேனை தேவி.

அவர் இவர்தானா என கூறியவர்கள் பற்றி தேவிக்கு நாரதர் எடுத்து கூறிக்கொண்டு இருந்தார். நாரதர் இவர் இல்லை இவர்களை விட சிறந்தவர் எம்பெருமான் என கூற மேனை தேவியின் உற்சாகமோ பன்மடங்கு அதிகமாயிற்று. சொல்வதற்கு வார்த்தைகளே இல்லை என தன்னுடைய மகளை எண்ணி மிகவும் மகிழ்ந்தார்.

அனைத்து தேவர்களும் ஒருங்கிணைந்து வந்தாலும் இமைகளை பறிக்கும் ஒளிக்கதிர்களை வீசும் சூரியனைக் கண்டதும் இவர்தானே என் மகளை மணக்கும் அகிலம் போற்றும் சிவபெருமானா? என்று கேட்டார். இல்லை தேவி இவர்தான் சூரியன். இவர்கள் அனைவரும் எம்பெருமானிடம் பணிந்து நடக்கக் கூடியவர்கள் என்று நாரதர் கூறினார். சூரியனை தொடர்ந்து சந்திரனும் வரவே அவரா என கேட்க, இல்லை என நாரதர் உரைத்தார்.

பின் பிரம்ம ரிஷிகளோடும் மிகுந்த ஒளியை கொண்ட பிரம்ம தேவரை கண்டு இவர் தானே சிவபெருமான் என்று கூற இல்லை தேவி இவர் இந்த பிரபஞ்சத்தை படைத்த பிரம்ம தேவர் ஆவார். பின் கருட வாகனத்தில் திருமால் வரவே இவரா என கேட்க இவரும் இல்லை. இவர்கள் அனைவரும் எம்பெருமானை போற்றி வணங்கக்கூடியவர் என்று கூறினார். இன்னும் தங்களின் மருமகன் (சிவபெருமான்) வரவில்லை என்று கூறினார்.

அவர்களுக்கு அடுத்து தேவ குருவான பிரகஸ்பதி, முனிவர்கள் மற்றும் சித்தர்கள் என அணி வகுத்து வந்தனர். அவர்களுக்கு பின்னால் பூத கணங்கள் சூழ்ந்து இருக்க ரிஷிப வாகனத்தில் சிவபெருமான் வருகைத் தந்தார். இவர்கள் எல்லோரையும் விட என் மகளை மணக்க கூடியவர்தான் சிறந்தவர் என எண்ணிக் கொண்டு இருக்கையில் சிவபெருமான் சென்றதை மேனை கவனிக்கவில்லை.

எவ்வளவு சிறப்பு மிக்கவர் சிவபெருமான் என எண்ணி அவர்களுக்கு பின்னால் வரும் கூட்டத்தில் தம்முடைய கவனத்தை செலுத்தினார். ரிஷப வாகனத்தில் வருபவருக்கு பின்னால் தனியாக சிவபெருமான் வருவார் என எண்ணி கூட்டத்தை பார்த்துக்கொண்டே இருந்தார். அவர்களுக்கு பின்னால் ஒரு சில முனிவர்களே வருகைத் தர அவர்களோடு கூட்டம் முடிவு பெற்றது.

மேனை யாரும் வருகை தராத பாதையை திரும்பி திரும்பி ஆவலுடன் பார்த்துக் கொண்டு இருக்க நாரத முனிவரோ வாருங்கள் தேவி நாம் தேவியின் திருமணம் நடைபெற இருக்கும் இடத்திற்கு செல்வோம் என கூறினார். இன்னும் சிவபெருமான் வரவில்லையே என்று மேனை தேவி கூறினார்.

இல்லை தேவி. நீங்கள் சிவபெருமானை காணவில்லையா? அங்கு சென்று கொண்டு இருக்கும் சிவபெருமானை கண்டதும் நீங்கள் அடைந்த மகிழ்ச்சியில் பேசவில்லையே என எண்ணினேன் என்றார். நான் அவரை காணவில்லையே? அவர் எங்கு இருக்கிறார் என மேனை தேவி நாரதரிடம் கேட்டார். அதோ அங்கே ரிஷிப வாகனத்தில் சென்று கொண்டு இருக்கிறார் என்று நாரதர் கூறினார்.

நாரதர் காட்டிய திசையை நோக்கி தனது முழு கவனத்தை செலுத்தி பார்த்த மேனை அதிர்ச்சி அடைந்து நின்றார். ஏனெனில், அங்கு அவர் கண்ட காட்சி இதுவரை எதிர்பார்த்த எதிர்பார்ப்புகள் அனைத்தும் நொறுங்கும் விதமாக அமைந்தன.

அதாவது, எல்லோரும் எள்ளி நகையாடும் விதமான தோற்றம் கொண்டவரையே என் மகள் தவம் இருந்து மணக்க போகிறாளா என எண்ணினார். ஐந்து தலைகளுடன், பத்து கரங்களுடன் மூன்று கண்களை கொண்டவராகவும் உடல் முழுவதும் விபூதியை பூசி கொண்டவரும் இடுப்பிலே தோல் ஆடைகளையும், அணிகலன்கள் அணிய வேண்டிய இடத்தில் சர்ப்பங்களை அணிந்தவராகவும் கழுத்திலே கபாலிக மாலையை அணிந்தவராகவும், பூதகணங்கள் சூழ அவர்களுக்கு மத்தியில் ரிஷிப வாகனத்தில் இருந்த சிவபெருமானை கண்டதும் அவருடைய மூச்சே நின்று விட்டது.

எத்தகைய வளமும் இல்லாத இந்த ஆண்டியையா எல்லோரும் போற்றி வருகின்றீர்கள்? இவரா என்னுடைய மகளுக்கு மணமகனா எனக்கு மருமகனா என எண்ணினாள். தன்னுடைய மகளுடைய வாழ்க்கை என்னவென்று புரியவில்லையே என்னும் தருவாயில் மூச்சடைந்து கீழே விழுந்தார் மேனை தேவி.

சிவபுராணம் நாளையும் தொடரும்....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக