மயக்கமுற்ற மேனை தேவியை கண்டு நாரதர் அதிர்ச்சியடைந்தார். சிறிது நேரத்திற்கு பின்பு கண் விழித்த மேனை தேவி தாம் ஏமாந்துவிட்டோம் என எண்ணினார். தன் கண் முன்னே இருந்த நாரத முனிவரை கடிந்து கொண்டார். தாங்கள் கூறுவதன் அர்த்தம் என்னவென்று புரியவில்லை தேவி என நாரதர் கேட்டார்.
என்னவென்று தங்களுக்கு புரியவில்லையா? நாரதரே!! எங்களின் இந்த நிலைக்கு நீரே காரணம் ஆவீர். அந்த ஆண்டியான சிவபெருமானுக்கு பணிவிடை செய்ய தன்னுடைய மகளை அனுப்ப சொன்னதும் யாவரும் அடையாத கீர்த்தியை அடைந்தோம். எங்களை மட்டும் ஏமாற்றாமல் எங்களின் மகளின் வாழ்கையையும் வீண் செய்துவீட்டீர்கள்.
மேலும், நீங்கள் சொன்ன சொல்லிற்காக என் மகள் கடும் தவம் புரிந்தது, இந்த ஆண்டியை மணப்பதற்காகவா? என கூறினார் மேனை தேவி. மேலும் என் மகளை மணம் பேச வந்த ரிஷிகளும், அவர்தம் மனைவிமார்களும் எங்கே? அன்று என்னிடம் இந்த ஆண்டியை பற்றி அவ்வளவு உயர்வாக பேசியவர்கள் அவரின் தோற்றத்தை பற்றி உரைக்காமல் இருந்து விட்டார்களே என கூறி விட்டு தன் பதியானவரை கண்டு அவரிடம் முறையிட சென்றார் மேனை தேவி.
தன்னுடைய மனைவியான மேனை கண்ணில் நீர் வடிய மிகவும் சோகமுற்று இருப்பதாக அறிந்த இமவான் மன்னன் தன் மனைவியின் அருகில் சென்று அவருடைய கண்ணில் வரும் நீரை துடைத்து விட்டு என்னவாயிற்று தேவி என மனைவியிடம் கேட்டார். சுவாமி நாம் ஏமாந்து போய் விட்டோம். சற்றும் நம்முடைய மகளை மணக்க எவ்விதமான உடற்தகுதியும் இல்லாத அந்த விகார தோற்றம் கொண்ட சிவபெருமானுக்கு தம்முடைய மகளை மணம் செய்து வைக்க வேண்டாம்.
இத்திருமணத்தில் எனக்கு விருப்பம் இல்லை என்றும், உங்களின் விருப்பத்திற்காகவும் என் மகளின் எதிர்கால வாழ்க்கை மிகவும் சுபிட்சத்துடனும் இருக்கும் என எண்ணியே இத்திருமணத்திற்கு சரியென நான் சம்மதம் அளித்தேன்.
ஆனால், தம் மகளை அந்த விகார தோற்றம் கொண்டவருக்கு மணம் செய்து வைத்தால் நம் மகளை நாமே பாழங்கிணற்றில் தள்ளுவதற்கு சமம். மேலும் அவரை மணப்பதால் நம் குலப் பெருமை என்னாவது என மிகவும் தோய்வான குரலில் தன் பதியானவரிடம் கூறிக் கொண்டு இருந்தார்.
தம்முடைய மனைவியான மேனை தேவி உரைப்பது எதுவும் புரியாமல் நின்றார் இமவான். ஏனெனில் தன்னுடைய மகளை மணக்கும் சிவபெருமானே இங்கு மிகுந்த அழகு கொண்டவராக காட்சியளிக்கின்றார். என்ன அனர்த்தம் இங்கு நிகழ்கின்றது என எதுவும் புரியவில்லையே என மனம் குழம்பிய நிலையில் இருந்தார் இமவான் மன்னன்.
நாரத ரிஷி இமவான் மன்னனிடம் பேச முற்படுகையில் மிகுந்த கோபத்துடன் இருந்த மேனை தேவி நாரத முனிவரே தாங்கள் எதுவும் உரைக்காமல் இருப்பது மிகவும் நன்று என கூறினார். மேனையின் பேச்சுகளை கேட்ட இமவான் மன்னன் இது முறையற்ற பேச்சுகள் தேவி. அவர் அனைத்தும் அறிந்த முனிவர் அவரிடம் இது போல் உரைப்பது முறையன்று. மேலும், அவரிடம் மன்னிப்பு கேட்பாயாக என கூறினார் இமவான் மன்னன்.
அனைத்தும் உணர்ந்த இந்த நாரத முனிவரே என் மகளின் இந்நிலைக்கு காரணம் ஆவார் என கூறி, மேலும் நான் என்ன பிழை செய்தேன் நான் ஏன் இவரிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என மேனை தேவி கேட்டார். ரிஷிகளும் என்னவாயிற்று தேவி, ஏன் சுபமான நிகழ்ச்சிகள் நடந்து கொண்டு இருக்கும்போது தாங்கள் இவ்வளவு சேகமுற்று உள்ளீர்கள் எனக் கேட்டனர்.
மேனை தேவியோ வாருங்கள் ரிஷிகளே இங்கு நடப்பது எல்லாம் சுபமான தருணங்களா? ஆம், தங்களை போன்றோருக்கு இது சுபமான நிகழ்ச்சிகளே. ஏனெனில் யாவரும் பார்த்து மணந்து கொள்ள முடியாத தோற்றம் கொண்டவருக்கும், சூடுகாட்டில் வாசம் செய்து ஆபரணங்கள் எதுவும் வாங்க முடியாமல் சாம்பலை உடல் எங்கும் பூசிக்கொண்டு இருக்கும் அந்த ஆண்டிக்கும், எல்லா வளமும் கொண்ட எழில்மிகு தோற்றம் கொண்ட என் மகளை அவருக்கு நான் மணம் முடித்து வைக்கின்றோம் அல்லவா? உங்களுக்கு சுபமான தருணங்களே.
ஆனால், எங்கள் மகளின் எதிர்கால வாழ்க்கை என்பது என்னவென்று புரியாமல் தவிக்கின்றேன். இவையனைத்திற்கும் காரணம் நீங்கள் மட்டுமே என கூறி அவர்களை நித்திக்க தொடங்கினார் மேனை தேவி.
சப்த ரிஷிகள் மேனை தேவியிடம் நிதானம் கொள்வாயாக!. நாங்கள் அன்று உன்னிடம் உரைத்தது மாயையோ அல்லது பொய்யோ அல்ல. இவ்வுலகத்தில் பிறந்தவர்களில் சர்வேஸ்வரனான சிவபெருமானுக்கு உங்களின் அன்பு புதல்வியை கன்னிகாதானம் செய்து மாபெரும் புண்ணியங்களை அடைய இருக்கின்றாய்.
சிவபெருமான் தங்களின் மகளை மணம் முடித்து கொள்வதற்காக உங்களின் மனை தேடி வந்திருப்பது நீங்கள் எப்பிறவியில் செய்த புண்ணியமோ அவருடைய வருகை எப்போதும் சுபிட்சத்தை மட்டும் அளிக்கக்கூடியது என்று எடுத்துரைத்தார்கள்.
சப்த ரிஷிகள் கூறியவற்றில் உள்ள உண்மையை உணராத மேனை தேவி, இல்லை முனிவர்களே என் மகளை அந்த ஆண்டிக்கு மணம் முடித்து வைக்க மாட்டேன் என்றும், என் மகள் ஆண்டியுடன் வாழ்வதை காட்டிலும் என்னுடன் என் மகளாகவே இருக்கட்டும் என்றும் மேனை தேவி கூறினார்.
இமவான் மன்னனோ தேவி புரிந்துக்கொள், நம் முன்னால் இருப்பவர்கள் அனைவரும் சாதாரணமானவர்கள். நம் மகளை மணம் முடிப்பவரோ எல்லையில்லா வளங்களை கொண்டவர். நீர் கோபத்தில் சிந்தும் வார்த்தைகள் எதையும் உன்னால் மீண்டும் திரும்பிப் பெற முடியாது தேவி. இங்கு வந்துள்ள அனைவரும் போற்றி வணங்கும் அளவிற்கு நம் மகளை மணப்பவர் சிறந்தவர்.
ஆகையால் நீ கவலைக் கொள்ள வேண்டாம் தேவி. இத்திருமணமான சுபச் செயல் இனிதே நடக்க வேண்டும் என்றார். இவர்களின் உரையாடல்களை கண்டு பார்வதி தேவி அங்கு வருகைத் தந்தார். தன்னுடைய தாய் ஏன் தனது மகளின் திருமணத்தில் இவ்விதம் நடந்து கொண்டு இருக்கிறார் என புரியாமல் எதையும் உரைக்காமல் மௌனம் காத்துக்கொண்டு இருந்தார் பார்வதி தேவி.
தன் கணவரும் தான் கூறியவற்றில் இருந்த உண்மைகளை உணராது இவ்விதம் பேசியது மென்மேலும் மேனை தேவியின் கோபத்தை அதிகப்படுத்தியது. இதற்கு மேல் பொறுமை கொள்ள முடியாது. இத்திருமணம் நடைபெற்றால் இதுவே என் கடைசி நாட்களாக அமையும் என கூறினார் மேனை தேவி.
தன் அன்னையின் கூற்றுகளை கேட்ட பார்வதி தேவி மிகவும் அதிர்ச்சியடைந்தார். அம்மா ஏன் இந்த விபரீதமான எண்ணங்கள்? உண்மை எதுவென்று நீங்கள் அறிந்தும் அதை ஏன் ஏற்க மறுக்கின்றீர்கள். நீங்கள் சொன்ன அந்த சர்வேஸ்வரரே இவ்வுலகங்களை படைத்து அதில் வாழ உயிர்களையும் படைத்தவர்.
எல்லோராலும் போற்றி வணங்கக்கூடியவர். பிறப்பு இறப்புகளுக்கு அப்பாற்பட்டவர். உன் மகளின் வாழ்க்கை சிறப்பாக இருக்க வேண்டும் என எண்ணிய தாங்கள் இங்கு வந்துள்ள தேவர்களில் இவரை விட சிறந்தவர் மற்றும் உயர்ந்தோரை உங்களால் அடையாளம் காட்ட இயலுமா?
மேலும், என்னுடைய வாழ்க்கையில் திருமணம் என்பது என் மனதில் என்றும் நீங்கா வாசம் செய்யும் அணுதினமும் அவரை மட்டுமே என் கணவராக எண்ணும் சிவபெருமான் உடன் மட்டுமே. வேறு எவருடனும் என் திருமணம் என்பது இல்லை. இனி உங்களின் முடிவுகளில் மட்டுமே என் வாழ்க்கை உள்ளது என்றார் பார்வதி தேவி.
சிவபுராணம் நாளையும் தொடரும்....
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக