உலகிற்கு பல துன்பங்களை இழைத்து வந்த தாரகாசுரனை கொன்று வெற்றிக் கொண்ட குமரனோடு தேவர்கள் மற்றும் முனிவர்கள் கைலாயம் சென்றனர். முருகனை அளித்து அவர்களின் துயரங்களை துடைத்த எம்பெருமானான சிவபெருமானையும், தாயான பார்வதி தேவியையும் பலவாறு துதித்து வணங்கினார்கள்.
எம்பெருமானான சிவபெருமானும், பார்வதி தேவியும் தான் ஈன்ற மகனால் உலகம் நன்மையுற்றதை கண்டு தேவர்கள் மற்றும் முனிவர்களின் வாழ்த்துகளால் மனம் மகிழ்ந்தது மட்டுமின்றி அவர்களுக்கு ஆசியும் வழங்கினர்.
தேவர்களும், முனிவர்களும் எம்பெருமானின் ஆசிர்வாதத்தை பெற்று மன மகிழ்ச்சியோடும், எவ்விதமான குறைவும் இன்றி தங்களது பணிகளை செய்ய தொடங்கினர்.
தாரகாசுரன் மடிந்ததும், தேவர்களின் அரசனான இந்திரன் மீண்டும் தனது தேவேந்திரன் பதவியை அடைந்தது எண்ணி தேவலோகத்தில் அனைத்து தேவர்களும் மகிழ்ச்சியில் இருந்தனர். ஆனால், இவர்களது மகிழ்ச்சி வெகுகாலம் நிலைக்கவில்லை.
தாரகாசுரனின் மகன்களான வித்யுன்மாலி, தாரகாக்ஷன் மற்றும் கமலாக்ஷன் தன் தந்தையை கொன்ற தேவர்களை பழிவாங்க மிகுந்த கோபத்துடன் தேவர்கள் அனைவரையும் அழிக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு புறப்பட்டனர்.
இச்செய்தியை அசுர குல சுக்கிராச்சாரியார் அறிந்து அம்மூவரையும் தடுத்து நிறுத்தினார். ஆனால், அவர்களோ தனது தந்தையை கொன்றவர்களை பழிவாங்க வேண்டும் என்று கூறி புறப்பட்டனர்.
அட மூடர்களே தேவர்களை தாக்கி அழிப்பது என்பது எளிதான செயல் அல்ல. அவர்களை அழிக்க ஆயுதங்கள் மட்டும் போதாது சக்தியும் வேண்டும் என்று கூறினார் அசுர குரு.
பின்பு, அசுர குருவான சுக்கிராச்சாரியாரின் கூற்றுகளில் இருந்த உண்மையை உணர்ந்த அம்மூவரும் தேவர்களை பழிவாங்க நாங்கள் என்ன செய்ய வேண்டும்? என தாங்களே வழிகாட்ட வேண்டும் என்று கூறி நின்றனர்.
அசுர குருவான சுக்கிராச்சாரியாரின் ஆலோசனையின் படி இந்த பிரபஞ்சத்தின் படைப்புக் கடவுளான பிரம்ம தேவரை நோக்கி தவம் புரிய தாரகாசுரனின் மகன்கள் சென்றனர். அம்மூவரும் படைப்புக் கடவுளான பிரம்மாவை நோக்கி கடுந்தவம் செய்தனர்.
ஒற்றைக்காலில் நின்று இரு கைகளையும் வான்நோக்கி உயர்த்தி பிரம்ம தேவரை எண்ணி தங்களது உடலை பல வகைகளில் வருத்தி கணக்கற்ற வருடங்களுக்கு உணவு ஏதும் உண்ணாமல் தவம் செய்தனர்.
சுவாசிக்கும் காற்றில் இருந்து தங்களது உடலில் தவம் புரிவதற்கான ஆற்றலை எடுத்துக்கொண்டு தவத்தை மேற்கொண்டனர். தவம் மேற்கொள்பவர்கள் அசுரர்களின் மைந்தனாக இருந்தாலும் அவர்கள் புரியும் தவம் என்பது மிகவும் உன்னதமானதாகும். இவர்களின் இந்த தவத்தால் தேவலோகமும் பாதிக்கப்பட்டது.
மேற்கொண்டு இவர்கள் தவம் செய்து வந்தால் இந்த பிரபஞ்சமானது அக்னியால் அழியத் தொடங்கி விடும் என்பதை உணர்ந்த பிரம்ம தேவர் அவர்களுக்கு காட்சியளித்தார். தாரகாசுரனின் மைந்தர்களே உங்களின் தவத்தால் மனம் மகிழ்ந்தோம். வேண்டும் வரத்தினை கேட்பீர்களாக என்று கூறினார்.
பிரம்ம தேவரை கண்ட தாரகாசுரனின் மைந்தர்கள் எங்களின் தவத்தினை ஏற்று எங்களுக்கு காட்சி அளித்தமைக்கு நன்றி கூறினார்கள். பின்பு பிரம்ம தேவரிடம் இந்த உலகில் உருவான ஓரறிவு முதல் மானிடர்கள் வரையிலும் எங்களுக்கு மரணம் என்பதே ஏற்படாமல் இருக்கும் வரத்தினை தாங்கள் எங்களுக்கு அளிக்க வேண்டும் என்று வேண்டி நின்றனர்.
இந்த பிரபஞ்சத்தில் உயிர்களின் தோற்றம் என்பது எவ்வாறு இருக்கின்றனவோ அவ்வாறுதான் தோன்றிய உயிர்களுக்கு மரணம் என்பது உள்ளது. மரணம் இல்லாத எந்த ஒரு ஜீவனும் இந்த பிரபஞ்சத்தில் தோற்றுவிக்கப்படுவது இல்லை. எனவே மரணம் என்பதை எவராலும் எப்பொழுதும் யாராலும் தடுக்க முடியாது. இதை விடுத்து வேறு வரத்தினை கேளுங்கள் என்று படைப்பின் கடவுளான பிரம்ம தேவர் கூறினார்.
சிவபுராணம் நாளையும் தொடரும்....
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக