மூன்று அசுர குமரர்களும் தங்களுக்குள் ஆலோசித்து பிரம்ம தேவரை வணங்கி நாங்கள் கேட்ட மரணமில்லா வாழ்க்கையை தங்களால் கொடுக்க முடியவில்லை என்றால், நாங்கள் கேட்கும்இந்த வரத்தினையாவது எங்களுக்கு அளிக்க வேண்டும் என்று கேட்டனர். பிரம்ம தேவரும் சரி வேண்டும் வரத்தினை கேட்பீர்களாக என்று கூறினார்.
தாரகாசுரனின் புதல்வர்கள் நாங்கள் நினைத்த மாத்திரத்தில் எங்கும் பறந்து செல்லக்கூடிய, எவராலும் தாக்க முடியாத வலிமையான பொன், வெள்ளி மற்றும் இரும்பாலான பட்டணங்களை எங்களுக்கு அருள வேண்டும் என்றனர்.
மேலும், அந்த மூன்று பட்டணங்களும் ஆயிரம் ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே ஒன்று சேர வேண்டும் என்றும், அவ்வேளையில் ஒரே பாணத்தில் மூன்று பட்டணங்களையும் தாக்கி அழிக்கின்ற வல்லமை கொண்ட ஒருவரால் மட்டுமே எங்களுக்கு மரணம் ஏற்பட வேண்டும் என்னும் வரத்தினை தாங்கள் எங்களுக்கு அளிக்க வேண்டும் என்று வேண்டினார்கள்.
பிரம்ம தேவரும் அவர்கள் வேண்டிக்கேட்ட வரத்தினை அளித்தார். பின்பு பிரம்ம தேவர், அசுரர்கள் வாழும் பகுதியான தென்பகுதியை செதுக்கி வடிவமைத்த மயனை அழைத்துச் சகல வசதிகள் யாவும் நிறைந்த பட்டணங்களை வடிவமைத்து, அதை தாரகாசுரனின் மைந்தர்களிடம் கொடுக்கும்படி கூறி விட்டு பின் தன் இருப்பிடமான சத்திய லோகத்திற்கு சென்றார்.
பிரம்ம தேவரின் கூற்றுக்கு இணங்கி அவரின் கட்டளைப்படியே வலிமையான மூன்று உலோகத்தை கொண்டு அதாவது தங்கம், வெள்ளி மற்றும் இரும்பு ஆகிய உலோகங்களை கொண்டு சகல வசதிகளோடு வாழக்கூடிய பட்டணங்களை உருவாக்கினார் மயன்.
தங்கம், வெள்ளி மற்றும் இரும்பு ஆகிய உலோகங்களை கொண்டு கவின்மிகு வர்ணங்களுடன் செதுக்கப்பட்ட இந்த பட்டணங்களே 'திரிபுரம்" என்று அழைக்கப்படுகிறது.
இதில் தங்கத்தால் செய்யப்பட்ட பட்டணமானது தாரகாக்ஷனுக்கும், வெள்ளியால் செய்யப்பட்ட பட்டணமானது கமலாக்ஷனுக்கும் இரும்பினால் செய்யப்பட்ட பட்டணமானது வித்யுன்மாலிக்கும் கொடுக்கப்பட்டது.
காஞ்சனபுரி என்று அழைக்கப்படும் பொன்னால் செய்யப்பட்ட பட்டணமானது சொர்க்கத்திலும், இரசிதரிபுரி என்று அழைக்கப்படும் வெள்ளியால் செய்யப்பட்ட பட்டணமானது மேகங்கள் சூழ்ந்த வான்வெளியிலும், ஆயசபுரி என்று அழைக்கப்படும் இரும்பினால் செய்யப்பட்ட பட்டணமானது பூமியில் எங்கும் பறந்து செல்லும் தன்மை கொண்டவைகளாகவும் இருக்கும்படி வடிவமைத்து அதை பிரம்ம தேவரின் கூற்றுக்கு ஏற்றவாறு அம்மூவரிடமும் மயன் கொடுத்தார்.
பின்பு மூன்று அசுரர்களும் தங்களது எண்ணத்தை செயல்முறையில் மிகவும் நேர்த்தியாகவும், செம்மையாகவும் செய்து மூன்று பட்டணங்களும் ஆயிரம் ஆண்டுகளுக்கு ஒரு முறை மட்டும் இணையும் விதமாக மந்திர சக்கர சூத்திரத்தோடு வடிவமைத்துக் கொடுத்த மயனுக்கு பலவிதமான பொருள்களை வெகுமதியாக அளித்து அவரை மரியாதை செய்து வழியனுப்பி வைத்தனர்.
மயன் வடிவமைத்த மூன்று பட்டணங்களிலும் நிலப்பரப்பில் மக்கள் வாழ்வதற்கு என்னென்ன தேவைகள் வேண்டுமோ அவை அனைத்தும் அந்த பட்டணங்களில் இருந்தன.
அதாவது வேந்தனும், மக்களும் வாழ்வதற்கென மாட மாளிகைகளும், விருட்சகங்கள், அழகிய சோலைகள், நீர் நிலையங்கள், கேளிக்கை தலங்கள் மற்றும் கவின்மிகு நுட்பங்களுடன் கூடிய சித்திர வேலைப்பாடுகள் நிறைந்த சிவாலயங்கள் யாவும் தேவலோகத்திற்கு நிகரான அனைத்து வேலைப்பாடுகளுடன் நிறைந்து காணப்பட்டது மூப்புர பட்டணம் என்று அழைக்கப்படும் திரிபுரம்.
மூன்று அசுரர்களும் தங்களது உறவினர், நண்பர்களுடன் அழகிய பட்டணங்களுக்கு இடம் பெயர்ந்தனர். மேலும், இந்த பிரபஞ்சமெங்கும் சூழ்ந்திருக்கும் தங்களது அசுரர்கள் யாவரையும் வரவழைத்து அவரவர் பட்டணங்களில் தங்க வைத்தனர்.
சிவபுராணம்
நாளையும் தொடரும்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக