Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

புதன், 22 ஜனவரி, 2020

சிவபுராணம்..! பகுதி 60


 கைலாயத்தில் பார்வதி தேவி நீராடிக் கொண்டிருந்தார். அப்போது அந்தப்புறத்தில் யாரும் நுழையாத வண்ணம் நந்தி தேவர் காவல் காத்துக் கொண்டிருந்தார். இவ்வேளையில் எதிர்பாராத வகையில் சிவபெருமான் பார்வதி தேவியை காண அவர் நீராடும் மண்டலத்திற்கு வருகைத் தந்தார்.

வாசலில் நின்று கொண்டிருந்த நந்தி தேவர் தான் வணங்கும் கடவுள் இங்கு வந்து கொண்டிருப்பதை உணர்ந்தார். பிறகு அவரை எவ்விதம் நான் தடுப்பேன் எனக்கூறி நின்று கொண்டு இருக்கையில் எம்பெருமான் நந்தி தேவரை கண்டதும் எதுவும் கூற முடியாமல் நிற்க எம்பெருமான் உள்ளே சென்றார்.

எம்பெருமானின் எந்தவொரு வினையும் ஒரு வினையை கொண்டே நிகழ்த்தப்படும். பார்வதி தேவி நீராடும் இடத்தில் எம்பெருமானை கண்டதும் ஒரு விதமான பதற்றம் கொண்டார்.

சிறிது நேரத்திற்கு பின் சிவபெருமானும் அவ்விடம்விட்டு செல்ல பார்வதி தேவி நேராக நந்தி தேவரை கண்டு நான் உங்களிடம் சொன்ன பணியை நீங்கள் செய்யவில்லை நந்தி தேவரே.

நான் நீராடி முடிக்கும் வரை யாரையும் உள்ளே விடக்கூடாது என்று கூறினேன் அல்லவா? என்று கேட்டார். அதற்கு நந்தி தேவர் தன்னை மன்னிக்கும்படி கூறினார். இனிமேற்கொண்டு இதுபோல் நடக்காமல் பார்த்துக் கொள்கிறேன் என உறுதி பூண்டார்.

அவ்வேளையில் தேவியின் தோழிகள் தாயே தங்களுக்கு என்று பணிபுரிய தனியாக ஒருவர் இருப்பின் இதுபோன்ற சங்கடங்கள் உண்டாவதை தவிர்க்க இயலும் என்று கூறினார்கள். அவ்வேளையில் அவர்களின் கூற்றுகளை தேவி ஏற்றுக்கொள்ளவில்லை.

ஆனால், தோழியின் கூற்றுகளை ஏற்றுக்கொள்ளும் காலமும் உண்டானது. திரிபுரத்தில் வாழ்ந்த அசுரர்களில் ஒருவர் அதிகம் சினம் கொள்ளக் கூடியவராகவும், மற்றொருவர், அசுர பிரிவினர்களிலேயே உடல் வலிமை கொண்டவர்களாகவும், அமைதி மனப்பான்மை கொண்டவராகவும் இருந்தனர். மேலும், இதுபோன்ற பல குணங்களை கொண்டவர்களாகவும் இருந்தார்கள்.

திரிபுரத்தில் வாழ்ந்த அசுரர்கள் அனைவரையும் திரிபுர வேந்தர்கள் தங்களது கட்டுக்குள் வைத்திருந்தனர். மேலும், திரிபுர பட்டணங்களில் சிவபெருமானுக்கான வழிபாடுகளும், பூஜைகளும் சிறப்பாக நடைபெற்று கொண்டிருந்தன.

பட்டணங்களில் நடைபெற்ற வழிபாடுகள் தேவர்களின் வழிபாட்டினை விட மிகவும் உயர்வானதாகவே இருந்தன. இருப்பினும் அவர்களின் செயல்பாடுகள் மற்றவர்களின் செயல்பாடுகளை பாதிக்கும் வண்ணம் இருந்தன. அதாவது அவர்களின் பட்டணமானது ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு சென்று உலாவிக் கொண்டு இருந்தன. இந்த பட்டணமானது திடீரென மேலே செல்வதும், திடீரென கீழே இறங்குவதுமாக இருந்தது. அவ்விதம் அப்பட்டணத்தின் அடியில் அகப்பட்ட உயிர்கள் யாவும் அழிந்தன.

மீண்டும் சிவபெருமான், பார்வதி தேவி நீராடும் போது வருகைத் தந்தார். இந்நிகழ்வின் போது தனது தோழிகள் உரைத்தது போல் தனது கட்டளைக்கு செயல்படக்கூடிய ஒரு பணியாளர் வேண்டும் என்பதை உணர்ந்தார் பார்வதி தேவி.

அவ்வேளையில் நீராடுவதற்காக வைத்திருந்த சந்தனத்தில் நீரை விட்டு தன் உடலில் பூசிய வண்ணம் தன்னுள் இருந்த சக்தியைக் கொண்டும், தம் மனதில் எம்பெருமானை நினைத்துக் கொண்டும் ஒரு புத்திரன் உருவத்தை உருவாக்கினார். அந்த அழகிய உருவத்துடன் விளங்கும் அப்புத்திரனுக்கு கணன் என்று பெயர் வைத்து ஆசையோடு அணைத்தார்.

பின்பு தன் மைந்தனிடம் அழகிய அணிகலன்கள் மற்றும் ஆடைகளை கொடுத்து அவரை என்றும் தீர்க்க ஆயுளுடன் இருப்பாயாக என்று கூறி ஆசிர்வாதம் செய்தார். கணன் தன் தாயின் காலில் விழுந்து ஆசிர்வாதம் பெற்று இவ்வேளையில் தான் உங்களுக்கு ஏதாவது செய்ய வேண்டியுள்ளதா என்று கேட்டார்.

பார்வதி தேவியோ கணனை அன்போடு அழைத்து அவரின் முகத்தில் முத்தமிட்டு அணைத்துக் கொண்டார். பின் கணதேவரிடம் துவார பாலகராக இருக்குமாறும், என் உத்தரவின்றி யாரையும் உள்ளே அனுமதிக்கக்கூடாது என்றும் கூறி அவருடைய கையில் ஒரு தண்டாயுதத்தையும் கொடுத்துவிட்டு தான் நீராடும் குளத்தை நோக்கி பார்வதி தேவி சென்றார். அவ்வேளை முதல் கணநாதன் துவார பாலகராக இருந்து காவல் காத்தார்.

சிவபுராணம் நாளையும் தொடரும்....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக