Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

புதன், 22 ஜனவரி, 2020

சிவபுராணம்..! பகுதி 61


சுரர்கள் என்றுமே அசுரர்கள் தான் என்பதை நிரூபிக்க தொடங்கினார்கள். அதாவது தாரகாசுரனின் மைந்தர்களால் பூவுலகில் உள்ள மானிடர்களின் அன்றாட கர்மாக்கள் பாதிக்கப்பட்டன. பூவுலகில் உள்ள இரும்பு பட்டணம் எவ்வேளையில் தம் மீது விழுமோ என்ற அச்சத்தில் அவரவர்களின் பணிகளை செய்யத் தவறினர்.

மேலும், மற்ற பறக்கும் பட்டணங்களால் அனைத்து தேவர்களும் பாதிக்கப்பட்டனர். இதுவே அசுரர்களின் அழிவிற்கு காரணமானது. ஒரு நாள் தேவி தனது தோழிகளுடன் நீராடிக் கொண்டிருக்கும் போது சிவபெருமான் தேவியை காண அவர் நீராடிக் கொண்டு இருக்கும் பகுதிக்கு சென்றார். அவ்வேளையில் வாயிலில் நின்று கொண்டிருந்த கணன் சிவபெருமானை தடுத்து நிறுத்தினார்.

அனைத்தும் உணர்ந்த எம்பெருமான் தம்முடைய திருவிளையாடலை தொடங்கினார். என்றும் இல்லாத புதிய அந்நியன் தன்னை நிறுத்தி தனது தாய் நீராடிக் கொண்டு இருக்கின்றார். அவரை இவ்வேளையில் தங்களால் காண இயலாது என்று கூறியதை கேட்ட எம்பெருமான் நான் யார் என்று நீ அறிவாயா? நானே சிவன் என்றார்.

உனது தாயாரின் கணவனும் நானே என்று சொல்லி உள்ளே செல்ல முற்பட்டார். ஆனால், கணன் தனது தண்டாயுதத்தினால் சிவபெருமானை தடுத்தார். யாராக இருந்தாலும் அவர் சிவனாக இருந்தாலும் இவ்வேளையில் யாரையும் உள்ளே விடக்கூடாது என்பது எனது தாயாரின் உத்தரவாகும். சற்று நேரம் பொறுத்திருந்து தாங்கள் என் தாயை காணலாம் என்று கூறினார்.

கணனின் கூற்றுகளை கேட்ட எம்பெருமானுக்கு மிகுந்த கோபம் உண்டாயிற்று. அவ்வேளையில் அங்கு இருந்த சிவகணங்களை பார்த்து இந்த பாலகனுக்கு புரியும் வகையில் தகுந்த பாடங்களை கற்பியுங்கள் என்று கூறிவிட்டு திரும்பிச் சென்றார். எம்பெருமானின் ஆணைக்கு இணங்கி சிவகணங்கள் தண்டாயுதத்தோடு நின்றுக் கொண்டிருந்த கணன் அருகில் சென்றனர்.

கணனோ என் அருகில் வருவது என்பது தங்களுக்கு சிறப்பானது அல்ல என்று கூறினார். ஆனால், சிவகணங்களோ எங்களின் பலத்தை நீர் அறிய மாட்டாய் என்றும், உன் விளையாட்டு போதும் இங்கிருந்து புறப்படுவாயாக என்று கூறினார்கள்.

சிவகணங்களின் பேச்சுகளுக்கு செவி சாய்க்காமல் பயனற்ற பேச்சுகள் வேண்டாம் என் தாயின் உத்தரவின் படி யாரையும் உள்ளே விடக்கூடாது என்று கணன் கூறினார். இங்கு நானே காவல்காரன் ஆவேன். எனது கடமையை நான் செய்கிறேன். எனவே இங்கிருந்து அனைவரும் ஓடி போவீர்களாக என்றார் கணன்.

கணனின் பேச்சுகளை கேட்ட சிவகணங்கள் எங்களை தாக்கும் வல்லமை உடையவரா நீ என கூறிக்கொண்டே அவனருகில் சென்றனர். அவர்களின் நோக்கத்தை அறிந்துகொண்ட கணன் அவர்கள் தாக்குவதற்கு முன்பாகவே தன் தாயார் கொடுத்த தண்டாயுதத்தால் சிவகணங்களை தாக்கினார்.

சற்றும் எதிர்பாராத இந்த சிறிய பாலகனின் தாக்குதலை எதிர்க்க முடியாமல் என்ன செய்வது என்று புரியாமல் இருந்தனர். இனி இந்த பாலகனை எதிர்ப்பது என்பது சாதாரண செயலாக தெரியவில்லை என்று நினைத்து சிவகணங்கள் சிவபெருமானிடம் சென்றனர்.

எம்பெருமானை கண்ட சிவகணங்கள் அவன் காண்பதற்கு சிறிய பாலகனாக இருந்தாலும் மிகுந்த பலம் கொண்ட முரடனாக இருக்கின்றான். அவனை எங்களால் எதுவும் செய்ய முடியவில்லை என்று கூறி பணிந்து நின்றனர்.

சிவகணங்கள் கூறியதை கேட்ட நந்தி தேவர் ஒரு சிறிய பாலகனை உங்களால் வெற்றி கொள்ள முடியாமல் இங்கு வந்துள்ளீர்களே என சினந்து கூறிக் கொண்டே சிவகணங்களுடன் நந்தி தேவர் அந்த பாலகன் இருக்கும் இடத்தை நோக்கி சென்றார்.

நந்தி தேவர் தலைமையில் சிவகணங்கள் வருவதை கண்ட கணன் ஒரு கணப்பொழுதில் திடுக்கிட்டாலும் மனதில் தனது தாயை எண்ணி தியானித்தார். தாயே தாங்கள் இட்ட பணியை மட்டுமே நான் செய்து வருகிறேன்.

ஆனால், என்னுடைய கடமையை செய்வதில் இடையூறாக சிவகணங்கள் இங்கே வந்து கொண்டிருக்கிறார்கள். அவர்கள் அனைவரையும் எதிர்க்கும் சக்தியை தாங்கள் தான் எனக்கு அளிக்க வேண்டும் என பிரார்த்தனை செய்தார்.

சிவபுராணம் நாளையும் தொடரும்....


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக