நந்தி தேவருடன் வந்த சிவகணங்கள் கணனை சுட்டிக்காட்ட அவருடன் இருந்த மற்ற கணங்களும், நந்தி தேவரும் மிகுந்த கோபத்துடன் கணனை தாக்க முற்பட்டனர்.
ஆனால், அவர்கள் அனைவரும் இணைந்து தாக்க முற்பட்ட போது தன்னுடைய தாயை மனதில் எண்ணி அவர்களை தாக்க தொடங்கினார் கணன். அதை சற்றும் எதிர்பாராத சிவகணங்கள் பாலகனின் ஒவ்வொரு தாக்குதலைக் கண்டும் பிரமித்து நின்றனர்.
கணன் தாக்கும் வேகத்தையும், அவனுடைய யூக்திகளையும் கண்டு இவன் சாதாரணமானவனாக புலப்படவில்லை. இவன் ஒருவனே நம் அனைவரையும் சாதாரணமாக எதிர்த்து நிற்கின்றான்.
இவனை வெல்வது என்பது சுலபமாக தெரியவில்லை. இந்நிலை தொடர்ந்தால் சிவகணங்கள் அனைவரையும் இவன் வெற்றி கொள்வான் என்பதை உணர்ந்த நந்தி தேவர், இச்செய்தியை எம்பெருமானிடம் தெரிவிக்க வேண்டும் என எண்ணினார்.
உடனே, நந்தி தேவர் சிவபெருமானிடம் சென்று நிகழ்ந்த அனைத்தையும் தெரிவித்தார். நந்தி தேவர் மூலம் செய்தியை கேட்ட சிவன் மிகுந்த கோபம் கொண்டு சிவகணங்களை எதிர்க்கும் வல்லமை படைத்தவனா? அவனுக்கு உகந்த பாடத்தை கற்பிக்க நானே வருகிறேன் என்று கூறி புறப்பட்டார்.
சிவபெருமான் மிகுந்த கோபத்துடன் செல்வதை அறிந்த விஷ்ணுவும், பிரம்மாவும் அவருடன் சென்றனர். மேலும், சிவகணங்கள் தாக்கப்பட்டதை அறிந்ததும், தேவர்களின் வேந்தனான இந்திரனும் தேவர்களுடன் கணன் இருக்கும் இருப்பிடத்தை நோக்கி புறப்பட்டார்.
பார்வதி தேவி நீராடும் மண்டபத்திற்கு வெளியே சத்தங்களும், கூச்சலும் ஏற்பட்ட வண்ணம் இருக்க தேவி தனது தோழிகளை அழைத்து நிகழ்வனவற்றை அறிந்து வருமாறு அனுப்பினார்.
தோழிகளும் வெளியே வந்து நிகழ்ந்த அனைத்து விஷயங்களையும் அறிந்து கொண்டனர். உடனே தோழிகள் தேவியிடம் சென்று அறிந்த அனைத்து செய்திகளையும் எடுத்துக் கூறினர்.
தோழிகள் பார்வதி தேவியிடம் கணன் தனக்கிடப்பட்ட பணியை நல்ல முறையில் செய்து வருகின்றார். சிவபெருமான் தங்களை காண வந்த போது அவரை தடுத்து நிறுத்தி தன்னுடைய தாய் நீராடச் சென்றதாகவும், சிறிது நேரம் கழித்து தங்கள் அன்னையை காணலாம் எனவும் கூறியுள்ளார்.
ஆனால், கணனின் பேச்சைக் கேட்ட எம்பெருமான் கோபம் கொள்ளவே தம்முடன் வந்த கணங்களை கொண்டு தகுந்த பாடம் கற்பிக்குமாறு கூறிச் சென்று விட்டார். சிவகணங்கள் மற்றும் நந்தி தேவர் என பலரையும் தாங்கள் அளித்த தண்டாயுதத்தைக் கொண்டே கணன் விரட்டி அனுப்பியுள்ளார்.
உடலில் பல காயங்கள் ஏற்பட்ட இந்நிலையிலும் தாங்கள் இட்ட கட்டளையை நிறைவேற்றியதோடு இன்னும் எவரெல்லாம் உள்ளீரோ வாரீர் என மிகுந்த உத்வேகத்துடன் கூறுகின்றார். மேலும், பிரம்ம தேவரும், விஷ்ணுவும் இங்கு வந்து கொண்டிருப்பதாக கூறினார்கள்.
தோழிகள் கூறியதைக்கேட்ட பார்வதி தேவி மிகுந்த மகிழ்ச்சியும் பெருமிதமும் கொண்டார். ஆனால், ஒரு சிறிய பாலகனிடம் மோதிய சிவகணங்களின் செய்கையை நினைத்து மிகுந்த கோபம் கொண்டார். எனவே கணனின் பாதுகாப்பிற்காகவும், அவருக்கு துணையாகவும் இரண்டு சக்திகளை தம் மனதில் எண்ணி உருவாக்கினார்.
பார்வதி தேவி தான் உருவாக்கிய இரு சக்திகளிடமும் கணன் சிவகணங்களுடன் போர் புரிந்து கொண்டிருக்கின்றான். சிவகணங்களால் கணனுக்கு எவ்விதமான பாதிப்புகளும் ஏற்படா வண்ணம் அவனுக்கு துணையாக இருந்து காத்து வர வேண்டும் என உத்தரவினை பிறப்பித்தார்.
தன்னை உருவாக்கியவரின் உத்தரவினை ஏற்ற அச்சக்திகள் கணனுக்கு துணையாக இருப்போம் எனக் கூறி தேவியிடம் இருந்து விடைபெற்று சென்றன.
மும்மூர்த்திகளான சிவன், திருமால் மற்றும் பிரம்மா ஆகியோர் கணனை காண புறப்பட்ட வேளையில் தன் தந்தையிடம் சென்று கார்த்திகேயன் பணிந்து அவனை அழிப்பதற்கு தாங்கள் செல்ல வேண்டுமா? நான் சென்று வருகிறேன் என்று கூறி அனுமதி கேட்டார்.
சிவபுராணம் நாளையும் தொடரும்....
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக