Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

செவ்வாய், 21 ஜனவரி, 2020

சிவபுராணம்..! பகுதி 5


தாரகாசுரன் சதி தேவியை கொல்ல தனது அசுரர்களில் சிறந்த வீரர்களை அனுப்பினான். அசுரர்களும் தாரகாசுரன் கூறிய பணியை செவ்வனே செய்ய சதி இருக்கும் இடத்தை அடைந்தார்கள். சதி தேவி சிவனை மணக்கும் முயற்சியில் சிவனை மணப்பதற்கான விரதத்தை மேற்கொண்டு இருந்தாள். இதுதான் சரியான சமயம் என்று சதியை கொல்ல முயன்றனர்.

அந்நிலையில் அசுரர்களை கண்டு பயந்த சதி தேவி செய்வது அறியாது நின்றாள். அவ்வேளையில் சிவபெருமான் தோன்றி சதியின் உயிருக்கு தீங்கு விளைவிக்க வந்த அசுரர்களுக்கு எதிராக போராட ஆயத்தமானார். தன் முன் நிற்பது எம்பெருமான் என்று அறிந்தும் தன் அரசனின் உயிருக்கு தீங்கு விளைவிக்க கூடிய சதி தேவியை கொல்ல அசுரர்கள் முற்பட்டனர். அசுரர்களின் அனைத்து வித மாயவித்தைகளையும் நிர்மூலமாக்கினார் சிவபெருமான்.

தான் கற்ற அனைத்து வித்தைகளின் சக்திகளை ஒன்றிணைத்து தேவியை கொல்ல முற்பட்ட அசுரர்களை இனியும் அழிக்காவிடில் தேவிக்கு ஆபத்து நேரிடும் என எண்ணி தனது சூலாயுதத்தால் அந்த அசுரர்களை சிவபெருமான் கொன்றார்.

சதி தேவி மேற்கொண்ட விரதத்திற்கு இடையூறுகளாக இருந்த அசுரர்களை கொன்ற சிவபெருமானுக்கு நன்றி கூறி தன் விரதத்தை மேற்கொள்ள ஆரம்பித்தார். சிவனை எண்ணி கடுந்தவம் புரிந்தார். சதி தேவியின் தவத்தால் மகிழ்ந்த சிவபெருமான் சதி தேவியின் முன் தோன்றினார்.

தேவியே உன் தவத்தால் யான் அகம் மகிழ்ந்தோம் என்றும், வேண்டும் வரத்தினை கேட்பாயாக என்றும் கூறினார். இவ்வேளையில் தன் மகளான சதி என்னும் தாட்சாயிணி தேவிக்கு சுயம்வரம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும், அதன்மூலம் தன் மகளுக்கு இணையான மாப்பிள்ளை தன் மகளே தேர்ந்தெடுப்பாள் என்னும் செய்தியை எல்லா தேவர்கள் மற்றும் ரிஷிகளுக்கு அனுப்பினார் பிரஜாபதியான தட்சன்.

தான் அனுப்பிய சிறந்த படை வீரர்கள் இறந்த செய்தியை அறிந்த தாரகாசுரன் தன் வீரர்களை கொல்ல எவருக்கு துணிவுண்டு என சினந்து தன் ஒற்றர்களிடம் கேட்டுக்கொண்டு இருந்தான். அவ்வேளையில் அசுரர்களின் குருவான சுக்கிராச்சாரியார் அசுரர்களின் சபைக்கு வருகை தந்தார்.

அக்கணம் சபையில் இருந்த அனைத்து அசுரர்களும், அசுரர்களின் வேந்தனுமான தாராகாசுரன் அவரை பணிந்து வணங்கி நின்றார்கள். தாரகாசுரனின் முகத்தில் இருந்த வாட்டத்தை அறிந்து என்ன நிகழ்ந்தது என சுக்கிராச்சாரியார் வினவினார்.

தாரகாசுரன் தன் ஒற்றர்கள் மூலம் அறிந்த செய்திகள் யாவற்றையும் தங்களின் குருவான சுக்கிராச்சாரியாரிடம் எடுத்துக் கூறினார். அசுரர்களின் குருவான சுக்கிராச்சாரியார் அட மூடனே குல வேறுபாடு இன்றி எல்லோருக்கும் அருள் பாலிக்கும் எம்பெருமானின் இல்லத்தாளை கொல்ல துணிந்தாயா மூர்க்கனே என வஞ்சித்தார்.

குருவின் பேச்சைக் கேட்ட தாரகாசுரன் தான் ஏன் அவ்விதம் செய்ய முற்பட்டேன் என்னும் விவரத்தை குருவிற்கு எடுத்துரைக்கின்றார். குருவே நான் சிவபெருமானிடம் என்னுடைய அழிவு என்பது சிவபெருமானின் வாரிசுகளால் நிகழ வேண்டும் என்னும் வரத்தினை பெற்றுள்ளேன்.

இந்நிலையில் சிவனுக்கும், தாட்சாயிணிக்கும் திருமணம் நிகழ்ந்து புத்திரன் உருவாகுமானால் எனக்கு அழிவு ஏற்பட்டுவிடும். என்னுடைய அழிவு என்பது அசுர குலத்தின் அழிவின் ஆரம்பம். அதனால் தான் சதியை கொல்ல நம் வீரர்களை அனுப்பினேன் என்று தன் நிலையிலான கருத்தினை தாரகாசுரன் எடுத்துரைத்தான்.

அவ்வேளையில் அசுரர்களின் மற்றொரு ஒற்றர் மூலம் சதிக்கு சுயம்வரம் நிகழப்போவதையும், அதன்மூலம் தன் மகளுக்கு பிடித்த மாப்பிள்ளையை திருமணம் செய்து வைக்க தட்சன் முடிவு செய்ததையும் தாரகாசுரன் அறிந்தான்.

இந்த சமயம் தாட்சாயிணி சிவனிடம் நீங்களே என் பதியாக வரவேண்டும் என்னும் வரத்தினை தந்து அடியாளை மகிழ்வடைய செய்வீர்களாக என வேண்டி நின்றாள். தாட்சாயிணி கேட்ட வரத்தை சிவபெருமானும் அருளினார். தாட்சாயிணி மனம் மகிழ்ந்து சிவனை அரவணைத்தாள்.

போகங்கள் பல கடந்த சிவபெருமானால் தாட்சாயிணியின் அரவணைப்பில் இருந்து மீள மனமில்லாமல் தன் இல்லத்தாளை சிவபெருமான் அரவணைத்தார். பல யுகங்களாக பிரிந்து இருந்த உமையவனும், உமையவளும் இணைந்த நேரம் இயற்கைக்கு பிடிக்கவில்லை என்னவோ பிரஜாபதியான தட்சன் தன் மகளின் சுயம்வரம் பற்றிய இனிய செய்தியை சொல்வதற்காக தாட்சாயிணியின் அறைக்கு வந்தார். தட்சனின் வருகையை அறிந்த சிவபெருமான் தாட்சாயிணியை விட்டு விலகி மறைந்தார்.

சிவனின் மறைவிற்கும் தட்சனின் வருகையை கண்ட அந்த கணத்தில் தாட்சாயிணி யான் இருக்கும் இடத்தை உணர்ந்து இயல்பு நிலைக்கு வந்தார்.

தன் தந்தையான தட்சனின் பாதத்தில் விழுந்து சிவனிடம் பெற்ற வரத்தை சொல்வதற்குள் தன் அன்பு மகளான தாட்சாயிணியிடம் உன் எதிர்காலம் சிறக்க நல்லதொரு வரன்களை முடிவு செய்ய எல்லா லோகங்களில் உள்ள இளவரசனுக்கும் செய்தி அனுப்பிவிட்டதாக பிரஜாபதியான தட்சன் கூறினார்.

 சிவபுராணம் நாளையும் தொடரும்....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக