Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

செவ்வாய், 28 ஜனவரி, 2020

சிவபுராணம்..! பகுதி 67



  ணனிடம் பார்வதி தேவி கடமையை செய்வதில் பல தடைகள் இருந்தும் அதை பொருட்படுத்தாது எதிர்த்து நின்று மேன்மை அடைந்தாய் மகனே என்று கூறினார். பின் கோபத்தினால் தன்னிடம் இருந்து வெளிப்பட்ட ஆயிரக்கணக்கான கோப சக்திகளை அழைத்து இனி யாவரையும் தண்டிக்க வேண்டாம் என்று கூறி அனைத்து சக்திகளையும் தன்னகத்தே அடக்கிக்கொண்டார்.

தேவியின் கோப சக்திகள் யாவும் பார்வதி தேவியிடம் ஒடுங்குவதை கண்ட தேவர்கள் எங்கள் அனைவரையும் மன்னித்து காக்க வேண்டும் தேவி என்று கூறி, கணனுடன் நீங்கள் இருந்து சினமில்லாது கருணை முகத்துடன் காட்சியளிக்கும் தங்களை காணும்போது நாங்கள் அனைவரும் அடைந்த மகிழ்ச்சியானது அளவில்லாதது என்று கூறி பலவாறு போற்றினார்கள்.

பின் பார்வதி தேவியும், கணனும் எம்பெருமானை காணப் புறப்பட்டனர். தேவியின் கோபமானது நீங்கி எம்பெருமானுடன் இணையும் கணப்பொழுதிற்காக தேவர்கள் அனைவரும் சிவபெருமானின் நாமங்களை துதித்துக்கொண்டே தேவியுடன் எம்பெருமான் இருக்கும் இடத்தை நோக்கிச் சென்றனர்.

சிவபெருமானை அடைந்த பார்வதி தேவி கணனுடன் எம்பெருமானை வலம் வந்து வணங்கி தாம் செய்த செயலுக்கு என்னை மன்னித்தருள வேண்டும் என்றும், தன்னுடன் வந்த கணனை முன் நிறுத்தி இவரே நம் மைந்தன் என்றும் கூறினார்.

மேலும், காலத்தினால் நிகழக்கூடாத பல செயல்கள் இங்கு நடைபெற்றாலும் அவையனைத்தையும் மறந்து கணனை தாங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று கூறி பணிவுடன் வேண்டினார். தனது தாயான பார்வதி தேவி சிவபெருமானிடம் வேண்டி நின்றதை கண்ட கணனும் கைலாய நாதனாகிய எம்பெருமானை வணங்கி, தந்தையே நான் செய்த செயலை மறந்து என்னை மன்னித்தருள வேண்டுகிறேன் என்று பணிவுடன் கூறினார்.

பார்வதி தேவி மற்றும் கணன் கூறியதைக் கேட்டு கோபம் தணிந்த சிவபெருமான் கணனை தன் மடியின் மீது அமர வைத்தார். பின், தன் மகனான கணனை நோக்கி உனது சக்தியையும், பலத்தையும் அனைவரும் உணர்ந்து கொள்ளவே இச்செயலானது இங்கு அரங்கேற்றப்பட்டது என்று கூறினார். மேலும், தேவர்களை நோக்கி புனர்முகனின் முகம் கொண்ட தன் மைந்தனான கணனை, இவன் என் மகன் என்று உரைத்தார்.

எம்பெருமானான சிவபெருமான் கூறியதைக்கேட்ட தேவர்கள் மிகுந்த மகிழ்ச்சியும், ஆரவாரமும் கொண்டனர். அவர்களின் ஆரவாரம் குறைந்தவுடன் எம்பெருமான் அங்கு குழுமியிருந்த அனைவரையும் நோக்கி இக்கணம் முதல் எனது கணங்களுக்கு தலைவன் கணன் என்றும், கணங்களின் தலைவனாக இருப்பதால் இன்று முதல் கணன், கணபதி என்ற திருநாமத்தோடு அழைக்கப்படுவான் என்று கூறினார்.

எம்பெருமானின் அருளைப்பெற்ற கணன் அவருடைய மடியில் இருந்து இறங்கி தாயையும், தந்தையான சிவபெருமானையும் வணங்கி தேவர்களை நோக்கி நான் இழைத்த பிழையை மறந்து என்னை மன்னிக்க வேண்டுகிறேன் என்றார். கணன் கூறியதைக்கேட்ட அனைவரும் பிழையை மறந்து கணனை ஏற்றுக்கொண்டனர்.

பின் எம்பெருமான், அன்னை கேட்ட வரமான எல்லோராலும் கணன் பூஜிக்கப்பட வேண்டிய வரத்தையும் அளித்தார். கணபதியே அனைவருக்கும் மூத்தவன் என்றும், கணபதியை வணங்காது எந்த செயலை செய்தாலும் பலன் உண்டாகாது என்றார்.

என்னையும், பிரம்மா, விஷ்ணுவையும் பூஜிப்பது போல கணபதியும் அனைவராலும் பூஜிக்கப்பட வேண்டும். கணபதியை வணங்கி பூஜித்த பின்னரே எங்களை வணங்கினால் நாங்கள் மகிழ்வோம் என்று கூறினார்.

எம்பெருமானின் வார்த்தைகளை கேட்ட சிவகணங்கள் கணபதியை தங்களின் தலைவனாக ஏற்றுக்கொண்டு ஆரவாரம் செய்தனர். பிறகு சிவபெருமானே கணபதியை பூஜித்த பின்பு திருமால், பிரம்மா மற்றும் பார்வதி தேவி என அனைவரும் கணநாதனை பூஜித்தனர். சதுர்த்தி தினங்களில் விரதம் இருந்து கணபதியை பூஜித்து வருபவர்களுக்கு சகல சௌபாக்கியங்கள் கிடைக்கப்பெற்று இன்பமாக வாழ்வார்கள் என சிவபெருமான் அருளினார். அனைத்தும் மகிழ்ச்சியாக நடைபெற்றன. ஆனால் பிரம்ம தேவர் அருளிய வரத்தால் இன்னல்கள் தொடங்க ஆரம்பித்தன.

திரிபுர அசுரர்கள் தங்களின் பணியை தொடங்கினர். ஆயசபுரி பட்டணத்தால் பூவுலகில் வாழும் உயிர்கள் யாவும் அழிந்தன. மானிடர்களும், முனிவர்களும் எப்போது இந்த பட்டணம் இறங்குமோ என எண்ணி பயந்து வந்தனர்.

தேவர்களின் பலமே பூலோகத்தில் மானிடர்கள் வளர்க்கும் யாகம் மூலம் கிடைக்கும் அவிர்ப்பாகம் தான். ஆனால், பயத்தின் காரணமாக மானிடர்கள் தாங்கள் செய்ய வேண்டிய கர்மாக்களையும் சரிவர செய்ய இயலாமல் இருந்ததால் தேவர்களுக்கு கிடைக்க வேண்டிய அவிர்ப்பாகம் கிடைக்காமல் போனது.

இதனால் தேவர்களின் பலமும் குறைந்து கொண்டே சென்றது. மேலும், அவர்களால் தேவலோகத்திலும் சரியான முறையில் இருக்க முடிவதில்லை. ஏனெனில் தேவலோகத்தில் உள்ள அசுர பட்டணங்கள் பூவுலகில் மானிடர்கள் போல் தேவர்களும் பயம் கொண்டனர். அசுர பட்டணம் தங்கள் மீது விழுமோ என்று பொறுமை இழந்த தேவர்கள் அனைவரும் இணைந்து இந்திரனிடம் சென்று முறையிட்டனர்.

அதாவது தேவர்களின் வேந்தரான இந்திரனே தாங்கள் எதுவும் செய்யாமல் இவ்விதம் அமைதி காத்தால் தேவர்களின் நிலை என்னவாகும்?. காலங்கள் கடக்க கடக்க எங்களின் பலம் என்பது குறைந்து கொண்டே வருகின்றது. இவ்விதம் நிகழ்ந்து கொண்டிருந்தால் நாம் யாவரும் பலமிழந்து அசுரர்கள் அனைவரும் பலம் கொண்டவராக இருப்பார்கள் எனக்கூறினார்கள். இக்கருத்தினை மும்மூர்த்திகளிடம் எடுத்துக்கூறி தேவர்கள் அனைவரையும் காத்தருள வேண்டும் என்று கூறினார்கள்.

அவர்களின் கூற்றில் இருந்த உண்மைகளை உணர்ந்த இந்திரன் அசுரர்களுக்கு வரம் அளித்த பிரம்ம தேவரை கண்டு இதற்கான உபயத்தை கேட்போம் எனக்கூறி அனைத்து தேவர்களும் அவர்களின் வேந்தனான இந்திரனுடன் சத்தியலோகம் சென்றனர்.

சத்தியலோகத்தில் இருந்த பிரம்ம தேவரை கண்டு வணங்கி, அவரிடம் தாங்கள் வந்த நோக்கத்தினை எடுத்துக்கூறி அவரிடம் சரணடைந்தனர்.

சிவபுராணம் நாளையும் தொடரும்....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக