செவ்வாய், 28 ஜனவரி, 2020

செம்படவனிடம் பெண் கேட்கும் சந்தனு...!ங்காதேவி தன் எட்டாவது குழந்தையுடன் மறைந்தாள். அவன் தேவவிரதன் என்றும், காங்கேயன் என்றும் அழைக்கப்பட்டான். இவன் நற்குணங்களில் சிறந்தவனாக விளங்கினான். தன் மனைவியையும், குழந்தையையும் இழந்த சந்தனு, மிகுந்த துன்பப்பட்டான். அதன் பின், நாட்டாட்சியில் மிகுந்த கவனம் செலுத்தி வந்தான். அஸ்தினாபுரத்தை தலை நகரமாக கொண்டு அனைவரும் போற்றி புகழும் வண்ணம் அரசாட்சிப் புரிந்தான். நீதிநெறி தவறாதவனாகவும், இந்திரனுக்கு ஒப்பற்றவனாகவும், சினத்தில் எமனுக்கு ஈடாகவும், வேகத்தில் வாயு பகவானுக்கு ஈடாகவும், அனைத்து கலைகளிலும் சிறந்தவனாகவும், விருப்பு வெறுப்புகள் இன்றி நல்லாட்சி புரிந்து வந்தான். ஒருமுறை சந்தனு, காட்டில் வேட்டையாடி கொண்டிருக்கும் பொழுது கங்கை நதியைக் கண்டான். நதியில் நீர் குறைவாக ஓடுகிறதே. எதனால் நீர் பெருக்கெடுத்து ஓடவில்லை என எண்ணிக் கொண்டு இருந்தான்.

அப்பொழுது வாலிபன் ஒருவன், தன் அம்பு எய்தும் திறமையால் கங்கை நதியதை தடுத்து நிறுத்தவதை கண்டான். இதைப் பார்த்த மன்னன் சாந்தனு, உடனே கங்காதேவியை அழைத்தான். கங்காதேவி தன் மகனுடன் மன்னன் முன் தோன்றினாள். கங்காதேவி மன்னரிடம், மன்னா! இவன் நமது எட்டாவது மகன். அனைத்து கலைகளையும் நன்கு கற்றவன். இவன் தேவேந்தரனுக்கு இணையானவன். வசிஷ்டரின் வேதங்களையும், வேத அங்கங்களையும் நன்கு கற்றறிந்தவன். நம் மகனை தங்களிடம் ஒப்படைக்கிறேன் எனக் கூறிவிட்டு மறைந்தாள். தன் மகனை கண்ட சந்தனு அளவற்ற மகிழ்ச்சி அடைந்தான். பிறகு ஒரு நன்னாளில் தன் மகனுக்கு இளவரசு பட்டம் சூட்டினான். நான்கு ஆண்டுகள் கழிந்தது. ஒரு முறை மன்னன் சந்தனு, யமுனை நதிகரைக்கு சென்றான். அங்கு ஓர் அழகிய பெண்ணைக் கண்டான். அவளிடம், பெண்ணே! நீ யார்? இங்கு என்ன செய்து கொண்டிருக்கிறாய்? எனக் கேட்டான்.

அப்பெண் மன்னா! நான் செம்படவப்(மீனவன்) பெண். எனது தந்தை செம்படவர்களின் அரசன் ஆவார். நான் இங்கு ஓடம் ஓட்டுகிறேன் எனக் கூறினாள். அப்பெண்ணின் அழகில் மயங்கிய மன்னன், அப்பெண்ணை தன்னுடைய மனைவியாக்கி கொள்ள விரும்பி அவளின் தந்தையை காணச் சென்றான். அப்பெண்ணின் தந்தையை கண்ட அரசன், அவனிடம் நான் தங்களின் மகளை மணமுடிக்க விரும்புகிறேன் எனக் கூறினான். அதற்கு அப்பெண்ணின் தந்தை, மன்னா! நான் எனது மகளை தங்களுக்கு மணமுடிக்க சம்மதிக்கிறேன். ஆனால் அதற்கு நிபந்தனை உண்டு என்றான். மன்னன், அந்த நிபந்தனை என்னவென்று கூறு. அந்த நிபந்தனையை என்னால் நிறைவேற்ற முடியாததாக இருந்தால் நான் வாக்குறுதி கொடுக்க மாட்டேன் என்றான். செம்படவன், மன்னா! என் மகளுக்கு பிறக்கும் குழந்தையே அரசனாக வேண்டும் என்றான். செம்படவனின் நிபந்தனையை ஏற்க முடியாததால் மன்னன் கவலையுற்று திரும்பினான்.

மன்னனால் செம்படவப் பெண்ணை மறக்க முடியவில்லை. அப்பெண்ணின் நினைவால் மிகவும் வாடி வருந்தினான். மன்னனின் உடல்நிலை சேர்ந்து காணப்பட்டது. தந்தையின் இந்நிலையைக் கண்ட தேவவிரதன், தந்தையிடம் சென்று, தந்தையே! தாங்கள் மிகவும் சோர்வுற்று காணப்படுகிறீர்கள். தங்களின் துன்பத்திற்கான காரணம் என்னவென்று கூறுங்கள் நான் தீர்த்து வைக்கிறேன் என்றான். மகனிடம், தன் விருப்பத்தை சொல்ல வெட்கமடைந்த மன்னன், மகனிடம்! மகனே! நம் குல வாரிசாக நீ ஒருவனே இருக்கிறாய். நாளை உனக்கு ஏதேனும் நேர்ந்தால், நம் சந்ததி என்னவாகும். அதை நினைத்து நான் வருந்துகிறேன் எனக் கூறினான். (மகனிடம் செம்படவப் பெண் பற்றி எதுவும் கூறவில்லை) ஆனால் தேவவிரதன் தன் தந்தை ஏதோ மறைக்கிறார் என்பதை உணர்ந்தான். தந்தையின் தேரோட்டியிடம் கேட்டால் விவரம் தெரிந்து விடுகிறது என நினைத்து தேரோட்டியிடம் சென்றான் தேவவிரதன்.

தொடரும்...!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Follow and Join with US

தினமும் எங்கள் வாசகர்கள் மற்றும் நண்பர்கள் பல்வேறு செய்திகளை பெறுகின்றனர் நீங்களும் இணைத்து எங்களை வழி நடத்துங்கள்