ஒரு காட்டில் இருந்த சிங்கம் தன்னை எப்பொழுதும் நான் தான் பலசாலி, நான் தான் பலசாலி என்று தற்பெருமை பேசிக் கொண்டிருந்தது. சிங்கத்தின் செயல் மற்ற விலங்குகளுக்கு எரிச்சலை ஏற்படுத்தியது. ஆனால் மற்ற விலங்குகளால் சிங்கத்தின் தற்பெருமையை அடக்க வழி தெரியாமல் தவித்துக் கொண்டிருந்தன.
இந்நிலையில் அதே காட்டில் உள்ள ஒரு குளத்தில் நட்சத்திர ஆமை ஒன்று வாழ்ந்து வந்தது. அந்த குளத்தை ஒட்டி ஒரு மரத்தில் அணில் ஒன்று வாழ்ந்து வந்தது. நட்சத்திர ஆமையும், அணிலும் உயிர்த் தோழர்களாகப் பழகி வந்தனர்.
ஒரு நாள் அந்த வழியாக வந்த சிங்கம், மரத்தின் மேல் அமர்ந்திருந்த அணிலைப் பார்த்து, மூடனே நான் கீழே இருக்கிறேன். நீ எனக்கு மரியாதை கொடுக்காமல் மேலே இருக்கிறாய். அப்படியென்றால் நீ என்னைவிட பெரியவனா? என்று கோபமாக கர்ஜித்தது.
மேலும் அணிலை கீழே இறங்கி வந்து தன்னை வணங்கி நிற்கும்படியும், அப்படி செய்யாவிட்டால் தண்டனை கடுமையாக இருக்கும் என்றும் கூறியது. சிங்கத்தைப் பார்த்து பயந்த அணில் உடனே கீழே வந்து வணங்கி நின்றது.
சிங்கம் சொன்னபடி அணில் செய்ததும் சிங்கம் அங்கிருந்து சென்றது. சிங்கம் சென்றதும் குளத்தை விட்டு வெளியே நட்சத்திர ஆமை வந்தது. தன் நண்பன் அவமானத்தால் தலை குனிந்து நிற்பதைக் கண்ட ஆமை, சிங்கம் சொன்னதற்கு ஏன் கவலைப்பட்டு தலைகுனிந்து நிற்கிறாய்? உலகில் வலிமை உள்ளவர்கள், வலிமை அற்றவர்களை அடக்கி ஆள்வது தானே வழக்கம்? யானையிடம் சென்று சிங்கத்தால் இப்படி சொல்ல முடியுமா? என்று ஆறுதல் சொன்னது.
நண்பா! சிறியவர் பெரியவர் என்று யாராக இருந்தாலும் அவரவர் படைப்புக்கும், வேற்றுமைக்கும் ஏற்றபடி அவரவர் பலசாலிகள் தானே? என்று கொதித்தது. நண்பா! உன் ஆதங்கம் எனக்குப் புரிகிறது. சிங்கத்தின் ஆணவத்தை அடக்கத்தான் வேண்டும். ஆனால் அதை எப்படி செய்யலாம்? என்று அணிலும், ஆமையும் சிந்தித்துக் கொண்டிருக்கும்போது அங்கே ஒரு கட்டெறும்பு வந்தது.
நண்பர்களே! நீங்கள் பேசியதைக் கேட்டு நானும் கோபம் கொண்டேன். சிங்கத்தின் ஆணவத்தை நான் அடக்குகிறேன். அதோ அந்த மரத்தின் அடியில் தானே அந்த சிங்கம் உறங்கும். நாளை அங்கே வந்துவிடுங்கள். யார் பலசாலி என்று நிரூபிக்கிறேன் என்று அந்த மரத்தில் சென்று தங்கிக் கொண்டது. மறுநாள் வழக்கம்போல சிங்கம் அந்த மரத்தின் அடியில் இளைப்பாறிக் கொண்டிருந்தது. ஆமை கல்லுக்கடியில் மறைந்துகொண்டது. அணில் புதருக்குள் ஒளிந்துகொண்டது.
எறும்பு சிங்கத்தின் காதுக்குள் மெதுவாக நுழைந்து கொண்டு இம்சைப்படுத்தியது. சிங்கம் வலி தாங்க முடியாமல் அலறியது. நீ பெரிய பலசாலிதானே, முடிந்தால் உன்னைக் காப்பாற்றிக் கொள் என்று எறும்பு கூறியது. அணிலும், ஆமையும் தைரியமாக வெளியே வந்தன. ஒரு கட்டெறும்பிடம் தன் பலம் பலிக்காமல் போனதும், சிங்கம் வெட்கப்பட்டு தலைகுனிந்து தன் ஆணவத்தை கைவிட்டது.
சிங்கம் படும் துன்பத்தை பார்த்த ஆமையும், அணிலும், சிங்கத்தை விட்டுவிடும்படி எறும்பிடம் கூறின. உடனே எறும்பும் சிங்கத்தின் காதுக்குள் இருந்து வெளியே வந்தது. பிறகு சிங்கம் தான் மட்டும் பலசாலி என்று சொல்வதை விட்டுவிட்டது. சிங்கம், ஒவ்வொருவரிடமும் ஒரு தனித்திறமை இருக்கும் என்றும், யாரையும் கேவலமாக எண்ணக்கூடாது என்பதையும் புரிந்து கொண்டது.
நீதி :
ஒவ்வொருவரிடமும் ஒரு தனித்திறமை இருக்கும், யாரையும் பலம் குறைவாக எண்ணிக் கொண்டு தற்பெருமை பேசுதல் கூடாது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக