Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வெள்ளி, 24 ஜனவரி, 2020

கங்காதேவியின் மகிழ்ச்சி...!

ட்சுவாகு குலத்தைச் சேர்ந்த மன்னன் மகாபிஷக். மகாபிஷக் உலகை நல்லாட்சியுடன் ஆண்டு வந்தான். மகாபிஷக் செய்த புண்ணியச் செயல்களால், மகாபிஷக் இறந்ததும் தேவலோகம் அடைந்தான். மகாபிஷக் தேவர்களுடன் சேர்ந்து, பிரம்ம தேவரை வணங்கச் சென்றான். அப்பொழுது கங்கை நதி, கங்காதேவி வடிவில் அங்கு காட்சி அளித்தாள். அப்பொழுது காற்றினால் கங்காதேவியின் ஆடை சற்று விலகியது. இதைக்கண்ட தேவர்களும், ரிஷிகளும் நாணத்தால் தலைக் குனிந்து நின்றனர். ஆனால் மகாபிஷக், கங்கா தேவியின் அழகைக் கண்டு மோக வயப்பட்டான். மோகவயப்பட்ட மகாபிஷக், கங்கா தேவியை சற்றும் நாணமில்லாமல் பார்த்துக் கொண்டே இருந்தான். இதை பார்த்துக் கொண்டிருந்த பிரம்மன், மகாபிஷக் மீது கடும் கோபம் கொண்டான்.

தேவலோகத்தில் இருந்த மகாபிஷக்கை பார்த்து, நீ பூவுலகில் மனிதனாகப் பிறந்து, கங்காதேவியால் விரும்பத்தகாத செயல்களை சிலவற்றை சந்தித்து, துன்பமடைந்து சில வருடங்கள் கழித்து, நல்லுலகை அடைவாயாக என சபித்தார். அதன்பின் மகாபிஷக், பூவுலகில் பிரதீப மன்னனின் மகனாகப் பிறக்க நேர்ந்தது. பிரம்மதேவர் அவையில் தன்னை பார்த்து மோக வயப்பட்ட மகாபிஷக்கை கண்டு, கங்காதேவியும் அவன்மேல் காதல் கொண்டாள். இதை நினைத்துக் கொண்டு திரும்பி வரும்போது கங்காதேவி அஷ்ட வசுக்களை சந்தித்தாள். (அஷ்ட வசுக்கள் என்பவர்கள் மனுவின் மைந்தனான பிரஜாபதியின் எட்டு மகன்கள் ஆவர். அவர்களின் பெயர்கள் தரா, துருவா, சோமா, அஹா, அனிலா, அனலா, பிரதியுஷா மற்றும் பிரபாசா ஆகும்.) அவர்கள் மனக்கவலையில் இருப்பதைக் கண்ட கங்காதேவி, தங்களின் மனக்கவலைக்கான காரணம் என்னவென்று கேட்டாள். அவர்கள் கங்காதேவியிடம், தேவி! வசிஷ்டருக்கு சினம் வரும்படி நடந்துக் கொண்டதால் அவர் எங்களை மனிதர்களாக பிறக்க வேண்டும் என்று சபித்து விட்டார்.

இது தான் எங்களின் கவலைக்கான காரணம். தாங்கள், எங்களுக்கு பூமியில் தாயாகி, எங்களை பெற்றெடுக்க வேண்டும் என வேண்டினர். அதற்கு கங்கா தேவி, உங்களை மண்ணுலகில் பெற்றெடுக்க நான் தயார். ஆனால், அதற்கு நீங்கள் தந்தையாக விரும்புபவர் யார்? என கங்காதேவி கேட்டாள். தேவி! மண்ணுலகில் பிரதீப மன்னன் என்பவன் புகழுடன் திகழ்கிறான். அவனுக்கு சந்தனு என்ற மகன் பிறக்க போகிறான். அவனே எங்கள் தந்தையாக விரும்புகிறோம் என்றனர் வசுக்கள். இதைக்கேட்டு கங்காதேவியும் மகிழ்ச்சி அடைந்தாள். பிறகு வசுக்கள் வசிஷ்டரின் சாபம் நீண்டகாலம் இருக்கக் கூடாது. அதனால் நாங்கள் பிறந்தவுடன் தண்ணீரில் எறிந்து, எங்களின் ஆயுளை முடித்து விட வேண்டும் எனக் கேட்டுக் கொண்டனர். அப்பொழுது கங்காதேவி, உங்கள் கோரிக்கைக்கு ஒரு நிபந்தனை உள்ளது.

அதாவது, புத்திரப்பேறு கருதி, ஒரு மகனை மன்னரிடம் விட்டுவிட்டு, மற்றவர்களை நீங்கள் சொல்வது போல செய்கிறேன் என உறுதி கூறினாள், கங்கா தேவி. அதன்பின் வசுக்கள் மகிழ்ச்சியுடன் விடை பெற்றனர். ஒருநாள் கங்கை நதிக்கரையில் பிரதீப மன்னன் தியானம் செய்து கொண்டிருந்தான். அப்போது கங்காதேவி, நீரிலிருந்து கரையேறி பிரதீப மன்னன் முன்பு வந்து நின்றாள். தியானத்தில் இருந்த பிரதீப மன்னனிடம், மன்னா! உங்களுக்கு பிறக்கப் போகும் மகனுக்கு, நான் மனைவியாக விரும்புகிறேன் என்று கூறினாள். அதற்கு பிரதீப மன்னனும், அவ்வாறே ஆகட்டும் என்றான். பிரம்ம தேவனின் சாபப்படி, பிரதீபனின் மனைவிக்கு மகன் பிறந்தான். அவனுக்கு சந்தனு என்று பெயர் சூட்டினர். சந்தனு, இளமைபருவத்தை அடைந்தான். அனைத்துக் கலைகளையும் கற்று வல்லவனாகத் திகழ்ந்தான்.

தொடரும்...!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக