Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

செவ்வாய், 7 ஜனவரி, 2020

எதற்காக நாளை மாபெரும் வேலைநிறுத்தம்?- இந்த ”பாரத் பந்த்” என்ன விளைவை ஏற்படுத்தும்!

நாடு தழுவிய அளவில் நாளை பிரம்மாண்ட வேலைநிறுத்த போராட்டம் நடத்துவது தொடர்பாக பல்வேறு தொழிற்சங்கங்கள் அறிவிப்பு வெளியிட்டுள்ளன.
குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நாட்டின் பல்வேறு பகுதிகளில் பலகட்டப் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதில் போராடும் மாணவர்கள் மீது தாக்குதல் சம்பவங்களும் அரங்கேறி கொண்டிருக்கின்றன. அதேசமயம் பொருளாதாரம் மந்தநிலையில் இருப்பதாக துறை சார்ந்த வல்லுநர்கள் கூறுகின்றனர். மேலும் வேலையின்மை அதிகரித்து லட்சக்கணக்கான இளைஞர்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி இருக்கின்றனர்.
பல்வேறு துறை சார்ந்த தொழிலாளர்களின் அடிப்படை ஊதியம் நீண்ட காலமாக உயர்த்தப்படாமல் இருக்கிறது. இதனால் விலைவாசி உயர்விற்கு ஏற்ப வாழ்வாதாரத்தை கட்டமைத்து கொள்ள முடியாமல் தவிக்கின்றனர். இவை அனைத்திற்கும் மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆனால் அரசின் நடவடிக்கையில் திருப்தி ஏற்படவில்லை என்று தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.

இந்நிலையில் வேலைவாய்ப்பின்மை அதிகரிப்பு, அடிப்படை ஊதியத்தை அதிகரித்தல் உள்ளிட்ட 14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தொழிலாளர் நலத்துறை இணையமைச்சர் சந்தோஷ் கங்வாரை சந்தித்து தொழிற்சங்க பிரதிநிதிகள் கடந்த வாரம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் பொதுத்துறை நிறுவனங்கள் தனியார்மயமாவதை தடுத்தல், வங்கிகள் இணைப்பை நிறுத்துதல், சர்ச்சைக்குரிய சட்டங்களை நீக்குதல் உள்ளிட்ட கோரிக்கைகளும் வலியுறுத்தப்பட்டன.

இந்த பேச்சுவார்த்தையில் பல்வேறு தொழிற்சங்கங்கள் கலந்து கொண்டன. ஆனால் தொழிற்சங்கம் வைத்த கோரிக்கைகளை நிறைவேற்றுவது குறித்து மத்திய இணையமைச்சர் உறுதிமொழி எதுவும் வழங்கவில்லை. இதுபற்றி கூட்டறிக்கை வெளியிட்ட தொழிற்சங்கங்கள் நாடு முழுவதும் வேலைநிறுத்தப் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளன.

இந்த போராட்டத்தில் அரசு ஊழியர்கள், வங்கி ஊழியர்கள் உள்ளிட்ட பல்வேறு துறைகளை சார்ந்த சுமார் 25 கோடி பேர் பங்கேற்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படும். இந்த போராட்டத்திற்கு அனைத்திந்திய ஐக்கிய தொழிற்சங்க மையம், இந்திய தொழிற்சங்கங்களின் மையம், அகில இந்திய தொழிற்சங்க காங்கிரஸ், ஹிந்து மஜ்தூர் சபா, சுயதொழில் மகளிர் சங்கம் உள்ளிட்ட அமைப்புகள் ஆதரவு தெரிவித்துள்ளன.

மேலும் அகில இந்திய மத்திய தொழிற்சங்க கவுன்சில், தொழிலாளர் முற்போக்கு கூட்டமைப்பு, ஐக்கிய தொழிற்சங்க காங்கிரஸ், இந்திய தேசிய தொழிற்சங்க காங்கிரஸ் மற்றும் தொழிற்சங்க ஒருங்கிணைப்பு மையம் ஆகிய தொழிற்சங்கங்களும் போராட்டத்திற்கு ஆதரவு அளித்துள்ளன.

இதேபோல் அகில இந்திய வங்கி ஊழியர் சங்கம், அகில இந்திய வங்கி அலுவலர்கள் சங்கம், இந்திய வங்கி ஊழியர் கூட்டமைப்பு, இந்திய தேசிய வங்கி ஊழியர் கூட்டமைப்பு, இந்திய தேசிய வங்கி அதிகாரிகள் காங்கிரஸ் ஆகிய வங்கித் துறை சார்ந்த தொழிற்சங்கங்களும் போராட்டத்திற்கு ஆதரவுக் கரம் நீட்டியுள்ளன. இதனால் வங்கி சேவையும் பாதிக்கப்படும். அதேசமயம் ஆர்.எஸ்.எஸ் ஆதரவு தொழிற்சங்கங்கள் இந்த போராட்டத்திற்கு ஆதரவு அளிக்கவில்லை என்று கூறப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக