திருவெண்காடு, நாகப்பட்டினம் மாவட்டம் சீர்காழியில் அமைந்துள்ளது. இங்கு தவம் செய்த இந்திரனின் வெள்ளை யானையாகிய ஐராவதத்தின் பெயரில் இருந்தே இத்தலத்தின் பெயர் இவ்வாறு வழங்கப்படுவதாகக் கூறப்படுகிறது. இது தென்னிந்தியாவின் ஒன்பது நவக்கிரக கோவில்களுள் ஒன்றாகும். இவை 1000 - 2000 ஆண்டுகள் பழமை வாய்ந்தவை ஆகும்.
அதிசயங்கள் :
மூர்த்திகள் - சுவேதாரண்யேஸ்வரர், நடராஜர், அகோரமூர்த்தி
சக்திகள் - பிரம்ம வித்யாநாயகி, காளிதேவி, துர்க்கை
தீர்த்தங்கள் - சூரிய தீர்த்தம், சந்திர தீர்த்தம், அக்கினி தீர்த்தம்
தலவிருட்சங்கள் - வடவால், வில்வம், கொன்றை.
தல வரலாறு :
முன்னொரு காலத்தில் மருத்துவன் என்ற அசுரன் தனக்கு இறைவன் அருள் கிடைக்க வேண்டும் என்று நினைத்தான். அதற்காக பல்வேறு ரிஷிகளின் ஆலோசனையை ஏற்று சிவனை வேண்டி நடுக்கடலில் நெடுங்காலமாக பெரும் தவம் இருந்தான்.
அவனது தவத்தை மெச்சிய சிவபெருமான் மருத்துவன் முன்பு தோன்றி, என்ன வரம் வேண்டும் என்று கேட்டார்.
அச்சமயத்தில் அசுரன், சிவனிடம் உள்ள சூலாயுதத்தை கேட்டான். அந்த சூலாயுதத்தை எடுத்து சிவபெருமான் அவனுக்கு வழங்கினார். அதனை பெற்ற மருத்துவாசுரன் நல்ல காரியங்களை செய்யாமல், உலகத்தில் உள்ள தேவர்களை துன்புறுத்தினான். அவனால் துன்புறுத்தப்பட்டவர்கள் சிவனிடம் முறையிட்டனர்.
உடனே சிவபெருமான் தனது வாகனமான நந்தியை அவனிடம் அனுப்பினார். நந்திபகவான் மருத்துவாசுரனிடம் சென்று அறிவுரைகளை கூறினார். அதனை ஏற்காத மருத்துவாசுரன் நந்தியை போருக்கு அழைத்தான்.
அப்போது ஏற்பட்ட சண்டையில் மருத்துவாசுரன் நந்தியை தாக்கி, அதன் கொம்பை முறித்தான். மேலும், நந்தியின் உடலில் 9 இடங்களில் காயத்தை ஏற்படுத்தினான். திருவெண்காடு ஆலயத்தில் உள்ள நந்தியின் உடலில் காயங்களையும், கொம்பு முறிக்கப்பட்டு இருப்பதையும் தற்போதும் காணலாம்.
தலச் சிறப்பு :
இக்கோவில் காசிக்கு இணையான திருத்தலமாக கருத்தப்படுகிறது. இத்தலம் காவிரிக் கரையில் அமைந்துள்ளது.
திருவெண்காடு சுவேதாரண்யேசுவரர் கோவில் சமய குரவர்களாகிய சம்பந்தர், அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர் ஆகிய நால்வராலும் பாடல் பெற்ற சிவாலயமாகும்.
சிவபெருமானின் 64 வடிவங்களில் 43வது வடிவம் அகோரமூர்த்தி. திருவெண்காட்டில் அகோரமூர்த்தி தரிசனம் சிறப்பு வாய்ந்தது.
புதன் பரிகாரத் தலங்களில் முதன்மைத் தலமாகக் கூறப்படும் தலம்.
சிவபெருமானது ஆனந்தத் தாண்டவத்தின் போது அவரது முக்கண்களிலிருந்தும் சிந்திய நீர்த்துளிகளே அக்னி, சூரிய, சந்திர தீர்த்தங்களாக அமைந்துள்ளன.
மூலவர் உட்புறச் சுவரில் தலப்பதிக கல்வெட்டுகள் உள்ளன.
பிராத்தனை :
இங்கு குழந்தைகள் கல்வியில் மேன்மையடைய பிரார்த்தனை செய்து கொள்கின்றனர்.
குழந்தை பேறு கிடைக்கவும், திருமணத்தடை நீங்கவும் இங்கு மக்கள் பிரார்த்திக்கின்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக