Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வெள்ளி, 31 ஜனவரி, 2020

பயத்தை வெல்வோம்..!

Image result for பயத்தை வெல்வோம்..!"

  ரு காட்டில் அன்பு என்ற இளைஞர் ஒருவர் நடந்து சென்று கொண்டிருந்தார். அந்த சமயத்தில் அவருக்கு பசியெடுத்தது. அப்போது ஒரு மரத்தின் உயரத்தில் கனிந்த பழங்கள் இருப்பதைக் கண்டார். உடனே மரத்தின் மேல் சரசரவென்று ஏறி அவற்றில் சில பழங்களைப் பறித்து சாப்பிட்டார்.

மிகக் கனிந்த வாசனையுள்ள பழங்கள் கிளைகளின் நுனியில் இருந்தன. அவற்றை எட்டிப் பறிக்கக் கிளையின் மேல் நகர்ந்து சென்ற போது அவரது பாரம் தாங்காமல் ஒரு கிளை முறிந்து விட்டது. சட்டென்று சுதாரித்த அவர் கீழே இருந்த ஒரு கிளையைப் பிடித்துக் கொண்டு தொங்க ஆரம்பித்தார்.

குனிந்து பார்த்தால் கீழே உள்ள நிலத்தின் தூரம் அதிகமாக இருந்தது. ஏற்கெனவே பயந்து போயிருந்த அவர் மேலும் பயந்து கண்ணை மூடிக் கொண்டு யாராவது காப்பாற்றுங்கள் என்று திரும்பத் திரும்ப அலற ஆரம்பித்தார். தற்செயலாக அப்போது அந்தப் பக்கம் ஒரு முதியவர் வந்தார்.

மரத்தில் தொங்கிக் கொண்டிருந்தவரைப் பார்த்தார். அவர்மேல் ஒரு சிறிய கல்லை விட்டு எறிந்தார். கல் பட்டவுடன் வலியில் ஆத்திரத்துடன் பெரியவரே, உதவச் சொன்னால் கல்லால் அடிக்கிறீரே. அறிவில்லையா உமக்கு என்று கோபத்துடன் கேட்டார்.

அதற்கு பெரியவர் பதில் பேசாமல் மற்றொரு சிறிய கல்லை எடுத்து அவர் மேல் எறிந்தார். மேலும் கோபமுற்ற அன்பு பெருமுயற்சி எடுத்து கையை வீசி மேலிருந்த கிளை ஒன்றை பலமாக பற்றிக்கொண்டு நான் கீழே வந்தால் உம்மைச் சும்மா விட மாட்டேன் என்று எச்சரித்தார். பெரியவர் மேலும் ஒரு கல்லை அவர் மேல் வீசினார்.

இளைஞர் இப்போது இன்னொரு பெருமுயற்சி எடுத்து கிளைமேல் ஏறி விட்டார். விடுவிடுவென இறங்கி வந்த அவர் நேராகப் பெரியவரிடம் வந்தார். வந்ததும் அந்த பெரியவரை அன்பு சரமாரியாகத் திட்டினார். ஏன் அப்படிச் செய்தீர்கள்? உம்மை நான் உதவி தானே கேட்டேன்? என்றார். அதற்கு பெரியவர் அமைதியாக சிரித்துக் கொண்டே, தம்பி, நான் உனக்கு உதவிதான் செய்தேன்! என்றார். அன்பு திருதிருவென முழித்துக் கொண்டு எவ்வாறு நீங்கள் எனக்கு உதவி செய்தீர்கள் என்று கூறுகிறீர்கள் என்று கேட்டார்.

அதற்கு பெரியவர், நான் உன்னை முதலில் பார்த்த போது நீ பயத்தால் உறைந்து போயிருந்தாய். உன் மூளை வேலை செய்யவில்லை. நான் கல்லை விட்டு எறிந்ததும் பயம் மறைய ஆரம்பித்து நீ என்னை எப்படிப் பிடிப்பது என்று யோசிக்க ஆரம்பித்தாய். யோசிக்க ஆரம்பித்தவுடன் நீயாகவே உன்னைக் காப்பாற்றிக் கொண்டு கீழே இறங்கிவிட்டாய். உன்னை உன்னாலேயே காப்பாற்றிக் கொள்ள முடியும் என்று உன் அறிவுக்கு முதலில் புலப்படவில்லை. உன் பயம் உன் கண்ணை மறைத்துக் கொண்டிருந்தது என்று கூறினார்.

தத்துவம் :

மனதில் தோன்றும் பயத்தை தடுமாற்றமின்றி, தன்னம்பிக்கை துணை கொண்டு, மன உறுதியுடன் செயல்பட்டால் பயத்தை வெல்வது நிச்சயம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக