தமிழகம், புதுச்சேரியில் இருந்து நீட் தேர்வுக்கு
விலக்கு கோரப்பட்டது. ஆனால், இந்திய மருத்துவ கவுன்சில் சட்டம், 1956ன் பிரிவு
10dக்கு அது முரணாக உள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன்
விளக்கம் அளித்துள்ளார்
நீட் தேர்விலிருந்து யாருக்கும் விலக்கு கிடையாது என மத்திய
சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் விளக்கம் அளித்துள்ளார்.
நாடு முழுவதும் உள்ள மருத்துவம் மற்றும் பல் மருத்துவ கல்லூரிகளில், இளநிலை படிப்புகளில் சேருவதற்கு அகில இந்திய அளவில் பொது நுழைவுத் தேர்வு (NEET) நடத்த வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
நாடு முழுவதும் பரவலாக இதற்கு எதிர்ப்பு கிளம்பிய நிலையில், மாநில அரசுகள் உச்ச நீதிமன்றத்தில் இதனை எதிர்த்து வழக்கு தொடர்ந்தது. ஆனாலும், மருத்துவ நுழைவுத் தேர்வு கட்டாயம் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து, கடந்த 4 ஆண்டுகளாக நீட் தேர்வு நடைபெற்று வருகிறது.
இதனிடையே, நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் தொடர்பாக எழுந்த புகார்களும் அதன் பேரில் மாணவர்களும் அவர்களது பெற்றோர்களும், இடைத்தரகர்களும் கைது செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது தொடர்பான வழக்கு விசாரணையின் போது, ஏழை மாணவர்களுக்காக மருத்துவ கல்லூரிகளின் கதவுகள் திறக்கப்படுவதில்லை என்று வேதனை தெரிவித்த சென்னை உயர் நீதிமன்றம், மருத்துவ படிப்பு அனைத்து தரப்பு மாணவர்களுக்கும் சமமாக இருக்க வேண்டும் என்றும் தெரிவித்தது.
இந்த சூழலில் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் கடந்த ஆண்டு நவம்பர் 18ஆம் தேதி தொடங்கி டிசம்பர் 13ஆம் தேதி வரை நடைபெற்றது. அக்கூட்டத்தொடரின் இறுதி நாளன்று திமுக எம்.பி., டி.ஆர்.பாலு, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி எம்.பி., செல்வராஜ் ஆகியோர் னீட் தேர்வு தொடர்பாக கேள்வி எழுப்பியிருந்தனர்.
அதில், நடப்பு கல்வியாண்டில் நடைபெற்ற நீர் தேர்வில் தமிழகத்தில் உள்ள அரசு, சுயநிதி மருத்துவக்கல்லூரிகளில் இருக்கும் 4850 இடங்களில் 100 மாணவர்கள் மட்டுமே தனியார் பயிற்சி மையங்களில் படிக்காமால் தேர்வாகியுள்ளனர். தமிழகம் உள்பட ஏதேனும் மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் இருந்து நீட் தேர்வுக்கு விலக்கு கோரப்பட்டதா? அரசு பள்ளி மாணவர்களுக்கு நீட் தேர்வு நியாயமற்றதாக இருப்பதாக கூறிய சென்னை உயர் நீதிமன்றத்தின் கருத்து குறித்து மத்திய அரசுக்கு விழிப்புணர்வு இருக்கிறதா? ஏழை, கிராமப்புற மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு தமிழகம் உள்பட மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களுக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கும் எண்ணம் மத்திய அரசிடம் இருக்கிறதா என கேள்வி எழுப்பப்பட்டிருந்தது.
இந்த நிலையில், இந்த கேள்விகளுக்கு பதிலளித்துள்ள மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன், நீட் தேர்விலிருந்து யாருக்கும் விலக்கு கிடையாது என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
அவர் அளித்துள்ள பதிலில், “அனைத்து மருத்துவக் கல்வி நிறுவனங்களில் சேர பொதுவான நீட் தேர்வை இந்திய மருத்துவ கவுன்சில் சட்டம், 1956ன் பிரிவு 10d பரிந்துரைக்கிறது. சுகாதார சேவைகள் இயக்குநரகம் மற்றும் மாநிலங்களில் நியமிக்கப்பட்ட அதிகாரிகளால் நீட் தேர்வில் தேர்வானவர்களுக்கான கவுன்சலிங் நடத்தப்படுகிறது. தேர்வானவர்களில் தனியார் பயிற்சி மையங்களில் படித்த, படிக்காதவர்களின் பட்டியலில் மத்திய அரசிடம் இல்லை.
தமிழகம், புதுச்சேரியில் இருந்து நீட் தேர்வுக்கு விலக்கு கோரப்பட்டது. ஆனால், இந்திய மருத்துவ கவுன்சில் சட்டம், 1956ன் பிரிவு 10dக்கு அது முரணாக உள்ளது. எனவே, சுகாதாரத்துரை அமைச்சகமும் அதனை ஏற்றுக்கொள்ளவில்லை. நீட் தேர்விலிருந்து நாடு முழுவதும் யாருக்கும் விலக்கு கிடையாது. சென்னை உயர் நீதிமன்றத்தின் கருத்து குறித்த தெளிவு அரசிடம் உள்ளது. நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிடவில்லை. நீட் தேர்வை நடத்த அனுமதி வழங்கி உச்ச நீதிமன்றம் 2016ஆம் ஆண்டில் உத்தரவிட்டுள்ளது” என கூறப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக