Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

புதன், 22 ஜனவரி, 2020

உங்களால் முடியும்..!

 Image result for உங்களால் முடியும்..!"
சின்னு என்ற முயல்குட்டிக்கு ஒருநாள் பசி தாங்கமுடியவில்லை. என்ன இப்படிப் பசிக்குது? பசி தாங்க முடியலயே! அம்மா... என்று வயிற்றைப் பிடித்துக் கொண்டது. அம்மா முயல், சின்னுவைப் பாவமாகப் பார்த்தது. உடனே சின்னுவிடம் அம்மா முயல் என்னுடன் வா! இப்படியே உட்கார்ந்துட்டு இருந்தால், சாப்பிட ஒண்ணும் கிடைக்காது. ஆற்றின் கரையில் புற்கள் நிறையா இருக்கும். பசி தீர சாப்பிடலாம். போகலாம், வா... என்று அழைத்தது.

அம்மா முயலும், சின்னுவும் ஆற்றை நெருங்கிவிட்டன. ஆற்றங்கரையைப் பார்த்த சின்னு திகைத்துப் போய்விட்டது. என்னம்மா இது... இங்கே நிறைய புல் இருக்கும்னு சொன்ன? வெறும் பாறைதான் இருக்கு என்று சின்னு ஏமாற்றத்தோடு கேட்டது. இக்கரையில் பார்க்காதே, அக்கரையில் பார்! என்றது அம்மா முயல். அக்கரையைப் பார்த்த சின்னுவின் கண்கள் ஆச்சரியத்தால் விரிந்தன. எவ்வளவு புல்லு? இவ்வளவு புல்லை நான் பார்த்ததே இல்லை என்று வியந்தது. உடனே அம்மா முயல் சின்னுவிடம் ஆற்றைத் தாண்டிப் போகலாம், வா! என்றது. என்னது? என்று சின்னு திடுக்கிட்டது. ஏன் சின்னு என்னாச்சு? இவ்வளவு பெரிய ஆற்றை எப்படி தாண்டிப் போக முடியும்? சின்னு ஆற்றை ஒரு பார்வை பார்த்துவிட்டுப் பெருமூச்சு விட்டது.

சின்னு, என்னால தாண்ட முடியாதும்மா, வா! திரும்பிப் போயிடலாம்! என்று கூறியது. அதற்கு அம்மா முயல், சின்னுவைப் பார்த்து, என்ன சின்னு இப்படிச் சொல்ற? இங்கே பார், உன்னால ஆற்றை தாண்ட முடியும்! வீணாக பயப்பட்டு, மனதை போட்டுக் குழப்பிக்காதே! இந்த ஆற்றை தாண்ட முடியும்னு நம்பு. உன்னால தாண்ட முடியும்! என்று கூறியது. சின்னுவும், சலசலத்து ஓடும் ஆற்றைப் பார்த்தது. ஆற்றின் அகலம் பத்து அடி இருக்கும். என்னால முடியாதும்மா என்று சின்னு வேகமாகத் தலையசைத்து மறுத்தது.

சரி சின்னு, இப்ப நான் ஆற்றை தாண்டிக்காட்றேன். அதேமாதிரி நீயும் தாண்டு என்று சொல்லிவிட்டு, அம்மா முயல் சட்ரென்று ஆற்றைத் தாண்டியது. அம்மா முயல் அக்கரையில் நின்றுக்கொண்டு சின்னுவைப் பார்த்தது. இப்படித்தான் சின்னு, நீயும் ஆற்றைத் தாண்டி வா! என்றது. என்னால முடியாதும்மா! என்னை விட்டுவிடு என்று சொல்லிவிட்டு, சின்னு பின்னால் நகர்ந்தது. அம்மா முயல் கொஞ்சம் யோசித்தது.

 சின்னு, அம்மாவை ஏக்கத்தோடு பார்த்துக் கொண்டிருந்தது. திடீரென்று அம்மா முயலின் முகம் மாறியது. சின்னு.... ஆபத்து.... என்று அலறியது. என்னம்மா? சின்னு அதிர்ச்சியோடு கேட்டது. உனக்கு பின்னால.. எனக்கு பின்னால.. என்னம்மா? புலி ஒண்ணு வந்துட்டு இருக்குது! என்னது..! புலியா? என்று கண்ணிமைக்கும் நேரத்தில் சரக்கென்று ஒரே அடியில் ஆற்றைத் தாண்டிப் பாய்ந்தது. தாண்டிய வேகத்தில், சின்னு வேகமாக ஓடத் தொடங்கியது.

சின்னு, சின்னு... நில்லு... நில்லு... என்று கத்திக்கொண்டே அம்மா முயல் சின்னுவின் பின்னால் ஓடியது. சின்னு திரும்பிப் பார்க்காமல் ஓடியது. ஏய் சின்னு... நில்லு! புலியும் இல்ல... எலியும் இல்ல... நான் சும்மாத்தான் சொன்னேன்! என்று அம்மா முயல் கத்தியது. ஓடிக்கொண்டிருந்த சின்னு உடனே நின்றது. தயக்கத்தோடு திரும்பிப் பார்த்தது.

 அட, ஆமா... புலி இல்ல! ஏம்மா புலி வருதுனு சொன்ன? சின்னு... நீ ஆற்றைத் தாண்டிட்டே! ஆமா! நான் ஆற்றைத் தாண்டிட்டேன்! சின்னு ஆச்சரியமான உற்சாகத்தோடு எழுந்து நின்று கத்தியது. பார்த்தியா சின்னு... நான் சொன்னேன்ல, உன்னால தாண்ட முடியும்னு! உன்னால ஆற்றைத் தாண்ட முடியாதுனு நீயே நினைச்சுப் பயந்ததால உன்னால ஆற்றைத் தாண்ட முடியல!. ஆனா, உன் உயிருக்கு ஒரு ஆபத்துனு வந்தபோது, உன்னைக் காப்பாற்றிக் கொள்ள முயற்சி செய்தபோது, இந்த ஆற்றை சுலபமா தாண்டிட்டே! முயற்சியும் தன்னம்பிக்கையும் இருந்தால், எதையும் சாதிக்க முடியும்! என்று அம்மா முயல், முயல்குட்டி சின்னுவிடம் கூறியது.

நீதி :
யாராக இருந்தாலும் முயற்சியும், தன்னம்பிக்கையும் இருந்தால், எதையும் சாதிக்க முடியும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக