பிரம்மனுக்கு உபதேசம் தந்து, வேதங்களை மீட்டுத் தந்த தலம், சந்திரன் தன் தொழில் வலிமையை திரும்பப் பெற்ற கோவில், ஸ்ரீரங்கத்திற்கும் முந்தைய ஆலயம், சயனக் கோலத்தில் முதன்மை பெற்ற திருக்கோவில் என பல்வேறு பெருமைகள் கொண்டு திகழ்கிறது, விழுப்புரம் மாவட்டத்தில் அமைந்துள்ள திருவரங்கம் ரங்கநாதர் திருக்கோவில்.
சுவாமி : ரங்கநாத பெருமாள்.
அம்பாள் : ரங்கவள்ளி தாயார்.
தீர்த்தம் : சந்திரபுஷ்கரணி, தென் பெண்ணைநதி.
விமானம் : சந்தோமய விமானம்.
மாவட்டம் : விழுப்புரம்.
தல வரலாறு :
சோமுகன் என்ற அசுர குல அரசன், தான் மேற்கொண்ட கடுமையான தவங்களின் மூலம் பல்வேறு வரங்களை பெற்றான். அதனால் அவன் ஆணவம் கொண்டு பூவுலகையும், தேவலோகத்தையும் தன்னுடைய ஆட்சியின் கீழ் கொண்டுவர வேண்டும் எனவும், முனிவர்களும் தேவர்களும், தனக்கு அடிமையாக இருந்து சேவை செய்ய வேண்டும் எனவும் ஆசைப்பட்டான்.
அதன்படியே பூலோகத்தையும், தேவலோகத்தையும், மக்களையும், தேவர்களையும், முனிவர்களையும் தன் வசப்படுத்தி, துன்புறுத்தினான். படைக்கும் தெய்வமான பிரம்மனையும் சிறைபிடித்து, அவரிடம் இருந்த வேதங்களைப் பறித்துக்கொண்டான். அதன்பின் தேவர்கள், முனிவர்கள் அனைவரும் திருமாலை சரணடைந்தனர். அவர் அசுரனுடன் போரிட்டார். போரில் தோல்வியை தழுவும் நிலைக்குச் சென்ற அசுரன், திருமாலுக்கு பயந்து, கடலுக்குள் புகுந்து பதுங்கினான்.
அசுரனை அழிப்பதற்காக திருமால் மச்ச அவதாரம் எடுத்து, சோமுக அசுரனை வதம் செய்து கொன்றார். பின்னர் வேதங்கள் அனைத்தையும் மீட்டார்.
பூமிக்கு மேலே வெளிவந்த திருமால், பிரம்மனிடம் வேதங்களை ஒப்படைத்து அவருக்கு உபதேசமும் அருளினார். அந்த இடத்தில் இருந்த அழகிய சோலையும், வற்றாத நதியும் பார்த்த திருமால் அங்கேயே தங்க ஆசைப்பட்டார். ஆனால், திருப்பாற்கடலுக்குத் திரும்ப வேண்டும் என பிரம்மா உள்ளிட்ட தேவர்கள் வேண்டினர். முனிவர்களும், மற்றவர்களும் இதே இடத்தில் இருக்க வலியுறுத்தினர்.
திருமால் தேவதச்சனான விஸ்வகர்மாவை அழைத்து, தம்மைப்போன்ற உருவத்தினை பள்ளிகொண்ட கோலத்தில் உருவாக்கிட கூறினார். அதன்பின் தேவர்களும், முனிவர்களும் ஒன்று சேர்ந்து பிரம்மோற்சவத்தை நடத்தினர் என்கிறது தல புராணம்.
தலச்சிறப்பு :
108 திவ்ய தேச கோவில்களில், திருவரங்கம் ரங்கநாதர் திருக்கோவில் ஆனது மிகவும் பிரசித்தி பெற்ற கோவில் ஆகும். மேலும் இந்த கோவில் ஆனது அனைத்தையும் விட சிறப்பானது மற்றும் பழமையானது ஆதி திருவரங்கம். ஏன் என்றால் ஆதி திருவரங்கம் திருமாலின் முதல் அவதாரத்தில் நிர்மாணிக்கப்படுகிறது. ஆதி திருவரங்கம் அடுத்து ஸ்ரீரங்கம் என்ற சொல் இங்கு அனைத்து பகுதிகளிலும் பேசப்பட்டு வருகிறது.
தமிழகத்திலேயே மிக பெரிய பெருமாளில் இவரும் ஒருவர். இவர் ஸ்ரீரங்கம் ரங்கநாதரை விட பெரியவர். இதனால் இந்த பெருமாள் 'பெரிய பெருமாள்" என அழைக்கப்படுகிறார்.
ரங்க விமானம் :
திருவரங்கத்தில் இருக்கும் 'ரங்க விமானம்" ஆதியில் தானாகவே உருவானதாக கூறப்படுகிறது. இதைச் சுற்றி 24 கிலோமீட்டர் தூரத்துக்குள் எங்கே இருந்தாலும் முக்தி நிச்சயம் என்கிறார்கள். இந்த விமானம் பொன்னால் வேயப்பட்டு 'ஓம்" என்கிற பிரணவ வடிவில் அமைந்துள்ளது. பிரம்ம தேவன், பல ஆயிரம் ஆண்டுகள் மகாவிஷ்ணுவை நோக்கித் தவம் இருந்ததன் பலனாக, பாற்கடலில் இருந்து பெறப்பட்டது ரங்க விமானம்.
நான்கு வேதங்களையும் பிரம்மா இந்த விமானத்தின் முன் ஓதியிருக்கிறார். ரங்க விமானத்தில் அர்ச்சா ரூபமாக அவதரித்த ரங்க நாதரை, இசவாகு மன்னர் தன் குல தெய்வமாக அயோத்தியில் வைத்து பூஜை செய்து வந்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக