முகத்தை சுத்தமாகவும், தூய்மையாகவும் வைத்துக்கொள்ள அடிக்கடி முகத்தை தண்ணீரால் கழுவ வேண்டும். முகத்தை கழுவுவதன் மூலம் வறட்சியான சருமத்தை போக்க முடியும்.
ஆனால் முகத்தை கழுவும்போது நம்மை அறியாமல் செய்யும் தவறினால் முகப்பரு மற்றும் பல சருமப்பிரச்சனைகள் ஏற்படுகின்றன. எனவே முகம் கழுவும்போது நீங்கள் கவனிக்க வேண்டியவை பற்றி இங்கு காணலாம்.
முகத்தை கழுவுவதற்கு முன், கைகளை நன்கு சுத்தமாக தேய்த்து கழுவ வேண்டும். இல்லாவிட்டால், கைகளில் உள்ள அழுக்குகள் மற்றும் கிருமிகள் நேரடியாக முகத்தில்பட்டு முகப்பரு, கரும்புள்ளிகள் போன்ற சருமப்பிரச்சனைகள் உண்டாகும்.
முகத்தில் பருக்கள் வராமல் இருக்க வேண்டுமானால், தினமும் முகத்தைப் பலமுறை கழுவுங்கள். இதனால் முகத்தில் எண்ணெய் பசை நீக்கப்படுவதோடு, அழுக்குகளும் முழுமையாக வெளியேற்றப்பட்டு, சருமம் சுத்தமாக இருக்கும்.
முகத்தை சிகப்பாக மாற்ற கிரீம்களை பயன்படுத்துவது நல்லதல்ல. அதற்கு மாற்றாக இயற்கை முறையில் தயாரித்த முகப்பூச்சுகளை முகத்தில் தடவி சிறிது நேரம் கழித்து முகம் கழுவினால் சருமத்தை புத்துணர்ச்சியாக வைத்துக்கொள்ள முடியும்.
முகத்தை கழுவுவதற்கு மிகவும் சூடான நீரைப் பயன்படுத்துவதைத் தவிர்த்து வெதுவெதுப்பான மற்றும் மிதமான குளிர்ச்சியுடன் இருக்கும் நீரைப் பயன்படுத்த வேண்டும்.
ஏனெனில் மிகவும் சூடான நீரை முகத்திற்குப் பயன்படுத்தும்போது முகத்தில் உள்ள இரத்த நாளங்கள் மற்றும் நுண்குழாய்களில் இடைவெளி ஏற்படும். மேலும் சருமத்துளைகள் திறக்கப்பட்டு, எண்ணெய் அதிகம் சுரக்கப்பட்டு, முகப்பருக்கள், கரும்புள்ளிகள் போன்ற பிரச்சனைகள் உண்டாகும்.
முகத்தில் போட்டிருக்கும் மேக்கப்பை கலைக்காமல் முகத்தை கழுவினால் அழுக்குகள் சருமத்துளைகளில் தங்கி பல சருமப்பிரச்சனைகளை உண்டாக்கும்.
முகத்தில் உள்ள அழுக்குகள் மற்றும் இறந்த செல்களை வெளியேற்ற, ஸ்கரப்பை பயன்படுத்தி கடுமையாக முகத்தை தேய்ப்பதை தவிர்த்து விடுங்கள்.
ஏனெனில் கடுமையாக முகத்தை தேய்ப்பதால், சருமத்துளைகள் திறக்கப்பட்டு, பருக்கள் வரக்கூடும். எனவே ஸ்கரப் செய்யும்போது மென்மையாக செய்ய வேண்டும்.
தலைக்கு குளித்த பின்னர் பலரும், கடைசியில் முகத்தை நீரால் கழுவமாட்டார்கள். எப்போதுமே தலைக்கு குளித்தால், இறுதியில் முகத்தை நீரால் கழுவ வேண்டும். இதனால் தலையில் இருந்த அழுக்குகள் மற்றும் பொடுகு முகத்தில் தங்கியிருப்பதைத் தடுத்து, சருமப்பிரச்சனைகள் ஏற்படுவதை தடுக்கலாம்.
முகத்தில் உள்ள அழுக்கை துடைக்க, துண்டைப் பயன்படுத்தி அழுத்தி துடைக்கக்கூடாது. அதற்கு பதிலாக பருத்தியாலான துண்டினால் மென்மையாக துடைக்க வேண்டும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக