Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

புதன், 22 ஜனவரி, 2020

உணவு சார்ந்த நம்பிக்கைகள்

Image result for Diet




து நல்ல உணவு, எது கெடுதலான உணவு என்பதில் பலருக்கும் சந்தேகம் இருந்து கொண்டே இருக்கிறது. சிலர் ஆரோக்கியமானது என கூவிக் கூவி விற்கும் பொருட்கள் ஆரோக்கியமற்றவையாகி விடுகின்றன. ஆரோக்கியமற்றது என கருதும் உணவுகள் பலவும் ஆரோக்கியமானதாக மாறி விடுகின்றன. அமைதியாக இருக்கின்ற வேறு சில உணவுகள் ஆரோக்கியத்தை பெருமளவு மேம்படுத்துகின்றன.  உணவு சார்ந்த அத்தகைய பத்து சிந்தனைகள் இந்த வாரம்.
1.பழச்சாறு !
நல்ல ஹெல்த்தியா இருக்கணும்னா பழ ஜூஸ் குடிங்க. நேரடியா மாம்பழத்தையே பிழிஞ்சு பாட்டில்ல அடைச்சு தரோம் என நிறைய விளம்பரங்கள் வசீகரிப்பதுண்டு. உண்மையில் இத்தகைய பழச்சாறுகள் உடலுக்கு எந்த நன்மையும் செய்வதில்லை. ஊறு தான்  விளைவிக்கின்றன. இதில் வைட்டமின்கள் உண்டு என்பதை மறுப்பதற்கில்லை. ஆனால் இதில் கலந்திருக்கும் சர்க்கரை அளவுதான் மிரள வைக்கிறது. இவ்வளவு அதிகம் சர்க்கரையை உடலில் செலுத்திக்கொண்டே இருந்தால் உடல் விரைவிலேயே செல்லாக்காசாகி விடும். பெரும்பாலான பழஜூஸ்கள் பல்ப் நீக்கப்பட்டே  வருகிறது. அப்படியெனில், கொஞ்ச நஞ்சம் இருக்கும் நார்ச்சத்தும் நமக்குக் கிடைக்காது என்பது தான் அதன் பொருள்.
பழச்சாறு குடிக்க வேண்டுமெனில் பழங்கள் வாங்கி வீட்டிலேயே ஜூஸ் பண்ணிக் குடிப்பது தான் ஆகச் சிறந்த ஆரோக்கிய வழி. அல்லது நேரடியாகவே பழத்தைச் சாப்பிட்டு விடுங்கள். அது ரொம்ப நல்லது. மற்றபடி செயற்கை இனிப்பு, பதப்படுத்தும் பொருட்கள், செயற்கை வாசனை இத்யாதிகள் கலந்திருக்கும் பாட்டில் ஜூஸ்களை கொஞ்சம் தள்ளியே வைப்பது புத்திசாலித்தனம்.
2.பாக்கெட் நிலக்கடலை
நிலக்கடலை ரொம்ப நல்லது. வயலிலிருந்து அப்படியே பிடுங்கி வந்து அவித்தோ, வறுத்தோ சாப்பிடுவது ரொம்பவே ஆரோக்கியமானது. நிறைய வைட்டமின்கள், மினரல்கள், நார்ச்சத்து போன்றவை நிரம்பியது. அதற்காக கடைகளில் கலர் கலர் பாக்கெட்களில் விற்கப்படும் கடலை எல்லாம் நல்லது என நினைத்து விடாதீர்கள்.
சால்டட் நிலக்கடலைகள் தான் பெரும்பாலும் பாக்கெட்களில் அடைக்கப்பட்டு விற்பனைக்கு வருகின்றன. இத்தகைய பாக்கெட்களில் கடலையுடன் சுவைக்காக இணையும் இன்னொரு பொருள் ஒமேகா 6 ஃபேட்டி ஆசிட். அதையும், உப்பையும் சேர்த்து கடலையை வறுக்கும் போது சுவை பலமடங்கு அதிகரிக்கிறது. இது உடலுக்குக் கேடு விளைவிப்பது.
நிலக்கடலை சாப்பிட விரும்பினால் இத்தகைய ஜிகினா வேலைகள் ஏதும் இல்லா கடலையை நேரடியாய் வாங்கி சாப்பிடுங்கள்.
3.டயட் குளிர்பானங்கள்.
குளிர்பானங்கள் உடலுக்கு பெருமளவு ஊறு விளைவிப்பவை என்பது பல்வேறு ஆய்வுகளின் மூலம் நிரூபிக்கப்பட்டுவிட்டன‌. மிக முக்கியமாக ஒரு பாட்டில் கோக்கில் சுமார் அரை டம்பர் அளவு சீனி உள்ளது எனும் அதிர்ச்சி ஆய்வு  முடிவுகளும் வெளியாகியிருந்தன. அப்போது மக்களின் பார்வை டயட் குளிர்பானங்களின் மீது சாய்ந்தது. அவை ஆரோக்கியமானவை என்பது போன்ற ஒரு மாயத் தோற்றம் உருவானது.
உண்மையில் டயட் குளிர்பானங்கள் மற்ற குளிர்பானங்களைப் போலவோ, அதை விட அதிகமாகவோ உடலுக்கு ஊறு விளைவிப்பவை என்கின்றன ஆய்வு முடிவுகள். இதை குடித்தால் உடல் எடை சகட்டு மேனிக்கு அதிகரிக்கும் ஆபத்தும் உண்டு. இதில் கலக்கப்பட்டுள்ள செயற்கை இனிப்பு உடல் எடையை அதிகரிக்கும் முக்கிய காரணியாய் இருக்கிறது. மேலும் இதில் கலக்கப்படும் “அஸ்பார்டேம்” போன்ற இனிப்பு ஊக்கிகள் உடலில் புற்று நோய் வரவும் வழிவகை செய்யும் என அதிரவைக்கிறது இன்னொரு ஆய்வு. குளிர் பானங்கள் தொடர்ந்து குடித்தால் டி.என்.ஏக்கள் கூட பாதிக்கப்படும் என சில ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு ஆய்வு முடிவு வந்தது குறிப்பிடத் தக்கது.
எனவே ஒட்டு மொத்தமாய் குளிர்பானங்களை விட்டே ஒதுங்கி நிற்பதே உடலுக்கு நல்லது.
4.கெச்சப்
ஹோட்டல்களிலும், துரித உணவகங்களிலும், மெக்டோனல்ஸ் போன்ற பன்னாட்டு உணவகங்களிலும் இந்த கெச்சப் அதிக அளவில் பயன்படுத்தப்படுகிறது. இதென்ன தக்காளி சட்னி மாதிரி தானே என மக்கள் நினைப்பதுண்டு. வெஜிடபிள்ல என்ன பிரச்சினை இருக்கப் போவுது என கேள்விகளும் எழுவதுண்டு.
உண்மையில் இந்த கெச்சப் உடலுக்கு ஊறு விளைவிக்கக் கூடிய ஒரு பொருள். லைக்கோபின் எனும் நோய் எதிர்ப்புச் சக்தி குறைந்த அளவில் இதில் இருக்கிறது என்பது மட்டுமே இதன் ஒரே பயன். மற்றபடி இதில் கலந்திருக்கும் 26% கார்போஹைட்ரேட் உடலின் சர்க்கரை அளவை சட்டென எகிற வைக்கும். கூடவே அதிக அளவு உப்புச் சத்தும் இதில் உண்டு. எனவே கெச்சப்பைப் பார்த்தால், ரொம்ப ஹெல்தி உணவு என நினைத்து ஓடாதீர்கள்.
5.பாஸ்தா
எனக்கு இட்டாலியன் பாஸ்தா தான் புடிக்கும் என பீட்டர் விடும் பார்ட்டிகள் கொஞ்சம் கவனிங்க, பாஸ்தா ஒரு ஆபத்தான உணவு. சாதாரண பாஸ்தா வெறும் மைதா தான். அதில் வைட்டமின்களும் இல்லை, மினரல்களும் இல்லை, நார்ச்சத்தும் இல்லை. எதுவுமே இல்லை. அப்படி எந்த பயனும் இல்லாத இந்த பாஸ்தாவில் உப்பையும், கொழுப்பையும் சுவைக்காகக் கலந்து விடுவதால் அதைச் சாப்பிடுவதால் உருவாகும் ஆபத்து அதிகரிக்கிறது.
இந்த பாஸ்தாவைப் போலவே ஆபத்தான இன்னொரு உணவு வெள்ளை பிரட். உடம்பு சரியில்லேன்னா பிரட் சாப்பிடு என சொல்வார்கள். உண்மையில் பிரட் சாப்டா தான் உடம்பு சரியில்லாம ஆகும். இதை நினைவில் கொள்ளுங்கள்.
6.சாக்லேட்
சாக்லேட்டில், சாக்லேட் ரொம்ப கம்மி !!! இதென்னடா புதுக்கரடி என வியக்க வேண்டாம். நாம் சாப்பிடுகின்ற சாக்லேட்களில் உண்மையான சாக்லேட் மிக மிகக் குறைந்த அளவு தான் இருக்கிறது. இதை பல ஆய்வுகளும், அறிக்கைகளும் நிரூபிக்கின்றன. சாதாரணமாக சுமார் 10 சதவீதம் முதல் 35 சதவீதம் வரை தான் சாக்லேட்களில், சாக்லேட்ஸ் உண்டு. மற்றவை எல்லாமே பிற பொருட்களும், இனிப்பு, பதப்படுத்தும் பொருட்கள் போன்றவை தான்.
ஒவ்வொரு நாடும் ஒவ்வொரு விதமான கொள்கைகளை, அளவுகளை வைத்திருக்கின்றன. அதற்குத் தக்கபடி நிறுவனங்கள் தங்களுடைய சாக்லேட்களை தயாரிக்கின்றன. சாக்லேட்களில் நோய் எதிர்ப்பு சக்தி உண்டு. அது உடலுக்கு நல்லது. ஆனால் உண்மையிலேயே சாக்லேட் அதிகம் இருக்கும் இனிப்புகளைச் சாப்பிட வேண்டும். சாப்பிட வேண்டுமென முடிவெடுத்தால் டார்க் சாக்லேட் சாப்பிடுங்கள் என அறிவுறுத்துகின்றனர் மருத்துவர்கள்.
7.பாப்கார்ன்
பாப்கார்ன் உடலுக்கு ஆரோக்கிய மானது எனும் உண்மை பெரும்பாலானவர்களுக்குத் தெரியாது. உண்மையில் அதில் நோய் எதிர்ப்பு சக்தியான பாலிஃபினால்ஸ் உண்டு. பாலிஃபினால்ஸ் உடலில் போதுமான அளவு இருந்தால் அது கேன்சர் வரும் வாய்ப்பைக் குறைக்கிறது. இதயம் சார்ந்த நோய்கள் வராமல் தடுக்கும் சக்தியும் பாப்கானுக்கு உண்டு.
காய்கறிகள், பழங்கள் சாப்பிடுவது போல உடலுக்கு பாப்கார்னும் நல்லது. எனவே அடுத்த முறை பாப்கார்ன் சாப்பிட யோசிக்க வேண்டாம். ஆனால் பாப்கானின் மேல் லிட்டர் லிட்டராய் பட்டர் ஊற்றி அதன் ஆரோக்கியத்தைச் சிதைக்காமல் பார்த்துக் கொள்ளுங்கள். அவ்வளவு தான்.
8.டீ நல்லதா ? கெட்டதா ?
டீ முதலில் சமூகத்துக்கு அறிமுகமானபோதே ஒரு ஆரோக்கிய பானம் என்பதாகத் தான் அறிமுகம் ஆனது. எனவே இதில் ஆரோக்கியம் அதிகம் எனும் பரவலான நம்பிக்கை உண்டு. தினமும் டீ குடிப்பது உடலின் இரத்த ஓட்டத்தை சீராக்கும் என்றும், அது இதய நோய்களை நீக்கும் என்றும் சில ஆய்வுகள் சொன்னதுண்டு. ஆனால் ஒரு விஷயத்தைக் கவனிக்க வேண்டும்.
டீ விஷயத்தில் வருகின்ற ஆய்வுகள் சீராக‌ ஒரே சேய்தியைச் சொல்லவில்லை. ஒரு ஆய்வு டீ குடிப்பது நல்லது என சொல்லும் போது, இன்னொரு ஆய்வு அது கெட்டது என்கிறது. சில ஆய்வுகள் அதிக டீயை தொடர்ந்து பல ஆண்டுகள் குடிப்பது புரோஸ்டேட் கான்சர் வரும் வாய்ப்பை அதிகரிக்கும் என சொல்கின்றன. சில ஆய்வுகளோ, இல்லைவே இல்லை என்கின்றன.
விரிவான ஆய்வுகளுக்குப் பிறகே எது உண்மை என தெரியவரும். அதுவரை ஆய்வுகளை முழுமையாய் சார்ந்து டீயை வெறுக்கவோ, விரும்பவோ செய்யாமல் அளவோடு பயன்படுத்துவதே புத்திசாலித்தனம்.
9.சாலட்
சாலட் சாப்பிடுவது நல்லது என்பார்கள். ஆனால் எங்கே சாப்பிடுகிறோம் என்பதைப் பொறுத்து தான் அது நல்லதா கெட்டதா என முடிவு செய்யப்படும். வீட்டில் காய்கறிகளை அழகாய் நறுக்கி, உப்பு, பெப்பர், லெமன் போட்டு சாப்பிடுகிறீர்களெனில் அருமை ! அட்டகாசம் குறையொன்றுமில்லை. ஆனால் அதே சாலட்டை மெக்டானல்ஸ் போன்ற ஃபாஸ்ட் ஃபுட் கடைகளில் சாப்பிடுவதாக இருந்தால் நல்லதல்ல என்பது ஆச்சரியமான விஷயம்.
அத்தகைய துரித உணவகங்களில் உங்களுடைய சாலட் சுத்தமாகக் கிடைப்பதில்லை, அதோடு பல பொருட்களை இணைத்து அதன் ஆரோக்கியத்தைச் சிதைத்து விடுகின்றனர். அங்கெல்லாம் சாப்பிடும் சாலெட்கள் சுவை அதிகமாய் இருப்பதன் காரணம் அது தான். குறிப்பாக அதிக கொழுப்பு, இனிப்பு போன்றவை உங்களுடைய சாலட் மூலம் உங்களுக்குக் கிடைக்க வேண்டிய பயனை அழித்து கெடுதலையே உருவாக்கும். எனவே எங்கே எப்படி சாலட்டைச் சாப்பிட்டாலும் அது நல்லது எனும் சிந்தனை வேண்டாம்.
10 .முட்டை !
முட்டை மிகப்பெரிய ஆபத்தான கொழுப்புச் சத்துள்ள உணவு என பலரும் பேசுவதுண்டு. உண்மையில் முட்டை மிகப்பெரிய ஆரோக்கிய உணவு. முட்டையில் கொழுப்பு உண்டு என்பது உண்மை தான். ஆனால் அது சேச்சுரேட்டர் ஃபேட் அதாவது நிறைவுற்ற கொழுப்பு போல உடலுக்கு ஊறு விளைவிப்பதில்லை. நிறைவற்ற கொழுப்பு வெறும் இரண்டு சதவீதம் மட்டுமே இதில் உண்டு.
தினம் ஒரு முட்டை சாப்பிடுவது உடலுக்கு ஆரோக்கியமானது. வேக வைத்த முட்டை சாப்பிடுவது அதிக பலனளிக்கும். ஒரு முட்டையில் சுமார் 200 மில்லிகிராம் கொழுப்பு உண்டு. ஆனால் இது உடலில் இரத்தத்திலுள்ள கொழுப்பை அதிகரிப்பதில்லை. எனவே முட்டையை வெறுக்க வேண்டாம். அசைவப் பிரியர்கள் தங்கள் உணவில் தாரளமாக முட்டையைச் சேர்த்துக் கொள்ளலாம். காலையில் அல்லது மதியம் முட்டை சாப்பிடுவது நல்லது. இரவில் முட்டையைத் தவிருங்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக