Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

திங்கள், 6 ஜனவரி, 2020

ஆறாண்டு வீழ்ச்சியில் நிலக்கரி சப்ளை!

 

கோல் இந்தியா நிறுவனத்தின் நிலக்கரி விநியோகம் 2019ஆம் ஆண்டில் 3.8 சதவீதம் வீழ்ச்சியடைந்துள்ளது.


கொல்கத்தாவை தலைமையிடமாகக் கொண்டு இயங்கிவரும் நிலக்கரி சுரங்க நிறுவனமான கோல் இந்தியா, உலகளவில் நிலக்கரி உற்பத்தியில் 82 சதவிகிதப் பங்குகளுடன் முதலிடத்தில் உள்ளது. இந்நிறுவனம் இந்தியாவின் மின்னுற்பத்தி நிறுவனங்களுக்கான நிலக்கரியை விநியோகித்து வருகிறது. நிலக்கரி விநியோகத்தில் பற்றாக்குறை ஏற்படும்போது மின்சார உற்பத்தியிலும் பாதிப்பு ஏற்படுகிறது. 2019ஆம் ஆண்டில் கோல் இந்தியாவின் நிலக்கரி விநியோகத்தில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாகத் தெரிகிறது. கடந்த ஆறு ஆண்டுகளில் நிலக்கரி விநியோகத்தில் கோல் இந்தியா நிறுவனம் முதன்முதலாகச் சரிவைச் சந்தித்துள்ளது.

3.8 சதவீத சரிவுடன் 580.8 மில்லியன் டன் அளவிலான நிலக்கரி மட்டுமே 2019ஆம் ஆண்டில் கோல் இந்தியா நிறுவனத்தால் விநியோகிக்கப்பட்டுள்ளது. நிலக்கரி உற்பத்தியைப் பொறுத்தவரையில் 2019ஆம் ஆண்டில் 582.8 மில்லியன் டன் அளவிலான நிலக்கரி மட்டுமே உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. இது 2.2 சதவீத வீழ்ச்சியாகும். நிலக்கரி உற்பத்தியில் சரிவு ஏற்பட்டதன் விளைவாகவே நிலக்கரி விநியோகத்திலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் மின்சார உற்பத்தியிலும் பின்னடைவு ஏற்பட வாய்ப்புள்ளது.

மாதாந்திர அடிப்படையில், டிசம்பர் மாதத்தில் மட்டும் 1.9 சதவீத சரிவுடன் 53.63 மில்லியன் டன் நிலக்கரி விநியோகம் செய்யப்பட்டுள்ளது. டிசம்பர் மாதத்தில் நிலக்கரி உற்பத்தி 58.02 மில்லியன் டன்னாக இருந்துள்ளது. இது 2018 டிசம்பர் மாத உற்பத்தியை விட 7.2 சதவீதம் அதிகமாகும். நிலக்கரி வாயிலான மின் உற்பத்தி 2019ஆம் ஆண்டில் கடந்த 14 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகப் பெரிய சரிவைச் சந்தித்திருந்தது.

நாட்டில் பொருளாதார மந்தநிலை நீடிப்பதால் மின்சாரத் தேவை குறைந்துள்ளது. இதனால் நிலக்கரி பயன்பாடும் சரிவைச் சந்தித்துள்ளது. நிலக்கரி விநியோகம் குறைந்ததற்கு பொருளாதார மந்தநிலையும் ஒரு காரணமாகக் கூறப்பட்டுள்ளது. செப்டம்பர் மாதத்தில் நிலக்கரி உற்பத்தியில் பெரும் சரிவைச் சந்தித்த கோல் இந்தியா அதைத் தொடர்ந்த மாதங்களிலும் நெருக்கடியான சூழலில் இயங்கி வருகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக