சிவனின் பஞ்சபூத தலங்களில் நீர்த்தலமாகத் திகழும் திருச்சி திருவானைக்காவலில் ஜம்புகேஸ்வரர் - அகிலாண்டேஸ்வரி அம்பாள் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகின்றனர். திருவானைக்காவல் எனப்படும் திருவானைக்கோவில் திருச்சிக்கு அருகே அமைந்துள்ள மாபெரும் சிவன் கோவில் நகரமாகும். தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி வடகரைத் தலங்களில் அமைந்துள்ள 60-வது சிவத்தலமாகும்.
மூலவர் - ஜம்புகேஸ்வரர்.
உற்சவர் - சந்திரசேகரர், சோமாஸ்கந்தர்.
அம்மன் - அகிலாண்டேஸ்வரி.
தல விருட்சம் - வெண்நாவல்.
தீர்த்தம் - நவ தீர்த்தங்கள்.
ஆகமம் - சைவாகமம்.
புராணப் பெயர் - திருஆனைக்காவல், திருஆனைக்கா.
ஊர் - திருவானைக்காவல்.
மாவட்டம் - திருச்சி.
தல வரலாறு :
புராண காலத்தில் வெண் நாவல் மரங்கள் நிறைந்த காடாக இருந்த திருஆனைக்காவலில் ஒரு வெண் நாவல் மரத்தடியில் ஒரு சிவலிங்கம் ஒன்று பராமரிப்பு இன்றி இருந்தது. அந்த சமயத்தில் சிவகணங்களில் இருவர் தாங்கள் பெற்ற சாபம் காரணமாக இக்காட்டில் ஒரு யானையாகவும், சிலந்தியாகவும் பிறந்தனர். சிவலிங்கம் கூரையில்லாமல் வெய்யில் மற்றும் மழையிலும் இருப்பதை இருவரும் (யானை மற்றும் சிலந்தி) பார்த்தனர்.
சிலந்தி சிவலிங்கத்தின் மேல் தன்னுடைய வலையை பின்னி வெயில், மழை மற்றும் மரத்தின் சருகுகள் லிங்கத்தின் மேல் விழாமல் பாதுகாத்து வந்தது. யானை தன் துதிக்கை மூலம் காவிரியில் இருந்து நீரும் மற்றும் பூவும் கொண்டுவந்து வழிபட்டு வந்தது. யானை சிலந்தி பின்னிய வலையை அசிங்கமாக உள்ளதெனக் கருதி அதை அழித்துவிட்டுச் செல்லும்.
சிலந்தி மறுபடியும் வலைபின்னி தன் வழிபாட்டைத் தொடரும். தினந்தோறும் இது தொடர, யானையை தண்டிக்க எண்ணிய சிலந்தி யானையின் துதிக்கையில் புகுந்து கொண்டது. யானை, சிலந்தி ஆகிய இருவரிடையே போராட்டம் நிகழ்ந்தது. கடைசியில் இரண்டும் மடிந்தன.
இந்த இருவரின் சிவபக்தியை பார்த்த சிவபெருமான் மிகவும் மெச்சி வியந்தார். ஆதலால் யானையை சிவகணங்களுக்குத் தலைவனாக ஆக்கினார்.
சிலந்தியை மறு பிறவியில் கோச்செங்கட் சோழன் என்ற அரசனாகப் பிறக்க செய்தார். பூர்வஜென்ம வாசனையால் கோச்செங்கட் சோழன் யானை ஏற முடியாதபடி குறுகலான படிகளைக் கொண்ட கட்டுமலைமீது சிவலிங்கம் ஸ்தாபித்து 70 கோவில்கள் கட்டினான். அவை யாவும் மாடக்கோவில் என்று அழைக்கப்படுகின்றன. கோச்செங்கட் சோழன் கட்டிய முதல் மாடக்கோவில் திருவானைக்கா ஜம்புகேஸ்வரர் ஆலயம் என்பது தான் இத்தல வரலாறு ஆகும்.
தல சிறப்பு :
இக்கோவிலின் சிறப்பு, சிவலிங்கம் தரைமட்டத்திற்கு கீழ் இருப்பதுதான், இதனால் எப்போதும் கோவில் கருவறையில் நீர்கசிவு இருந்து கொண்டே இருக்கும். கோடை காலங்களில் கூட நீர் வற்றாமல் கசிந்து கொண்டிருக்கும். இதனால் இங்கு உள்ள சிவலிங்கம் எப்போதும் பாதி நீரில் நனைந்தபடியே இருக்கிறது.
அகிலாண்டேஸ்வரியின் ஆட்சித்தலமாகவும் இக்கோவில் விளங்கியது. இங்கு உள்ள அம்மனின் காதணிகளை தாடகங்கள் என்று அழைப்பர். இங்கு அம்பாள் கொடூரமாக இருந்ததால், ஆதிசங்கரர் அம்மனுக்கு காதணிகளை அணிவித்து, முன்புறம் விநாயகரையும், பின்புறம் முருகனையும் பிரதிஷ்டை செய்து அம்பாளின் உக்கிரத்தை தணித்தார்.
பிராத்தனை :
கணவன், மனைவியருக்குள் ஒற்றுமை அதிகரிக்கவும், கன்னிப்பெண்களுக்கு நல்ல கணவர் அமையவும் இங்கு வேண்டிக்கொள்கிறார்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக