Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

திங்கள், 27 ஜனவரி, 2020

சுமைதாங்கி மரம்..!

 Image result for சுமைதாங்கி மரம்..!"
ரு ஊரில் தச்சர் ஒருவர் இருந்தார். அவர் காலையில் அவருடைய தொழிலுக்கு தேவையான பொருட்களை எல்லாம் எடுத்துக்கொண்டு இரு சக்கர வாகனத்தில் வேலைக்கு கிளம்பினார். போகும் வழியில் அவருடைய வாகனம் பழுதடைந்து நின்றது. அதை தள்ளிக்கொண்டே சென்று மெக்கானிக் கடையில் பழுது பார்த்து, ஒரு மணி நேரம் தாமதமாக வேலைக்கு சென்றார். தாமதமாக வேலைக்கு வந்ததால் அவருடைய முதலாளி அவரை கடுமையாக திட்டினார். அதனால் மிகுந்த வேதனையுடன் அவர் வேலைகளை ஆரம்பித்தார்.

சுத்தியலால் அடிக்கும் போது கை தவறி அவர் விரலில் காயம்பட்டது. காயத்துக்கு துணியால் கட்டு போட்டுக் கொண்டு மீண்டும் வேலையை தொடர ஆரம்பித்தார். சிறிது நேரம் கழித்து அவருடைய உளி உடைந்து விட்டது. என்னடா இது காலையில் இருந்து நமக்கு நேரமே சரி இல்லையே! என்று முனுமுனுத்துக் கொண்டே மீதி வேலைகளையும் முடித்தார். முதலாளியிடம் சொல்லி விட்டு வீட்டுக்கு புறப்பட தயாரானார்.

ஆனால் அவருடைய வண்டி மீண்டும் பழுதானது. இனி உன் வண்டியை பழுது பார்த்து எப்படி வீட்டிற்கு போவாய், வா என் வண்டியில் உன்னை வீட்டில் விட்டுவிட்டு வருகிறேன்! என்று முதலாளி சொன்னதும் அவருடன் கிளம்பினார். போகும் வழியில், பாவம்யா நீ காலையில் இருந்து உனக்கு எல்லாம் சோதனையாகவே இருக்கு! என்று முதலாளி ஆறுதல் சொல்லிக் கொண்டே அழைத்துச்சென்றார்.

தச்சர் வீடு வந்ததும் தாகமா இருக்கு கொஞ்சம் தண்ணீர் எடுத்து வா என்று முதலாளி சொன்னார். வீட்டுக்குள் வாங்க முதலாளி என்று தச்சர் அவரை உள்ளே அழைத்தார். முதலாளியும் அவர் பின்னாடியே சென்றார். தச்சர் வீட்டு வாசலில் இருக்கும் மரத்தின் மீது சிறிது நேரம் கை வைத்திருந்து விட்டு உள்ளே சென்றார். முதலாளிக்கு ஒன்றும் புரியவில்லை.

தச்சர் உள்ளே நுழைந்தவுடன் அவருடைய குழந்தை ஓடி வந்தது. குழந்தையை பார்த்தவுடன் தூக்கி அனைத்து முத்தம் கொடுத்தார். தன் மனைவியை பார்த்ததும் புன்முறுவலுடன் தன் முதலாளியை அறிமுகப்படுத்தி விட்டு தண்ணீர் எடுத்து வரச் சொன்னார். காலையில் நடந்த எந்த பிரச்சனையையும் நினைத்து பார்க்காமல் எப்படி இவரால் சகஜமாக இருக்க முடிகிறது என்று முதலாளி வியந்தார். தச்சர் எந்த வித கவலையும் இல்லாமல் குழந்தையுடன் விளையாடிக் கொண்டு இருந்தார். தண்ணீர் குடித்து விட்டு முதலாளி கிளம்பத் தயாரானார். வீட்டிற்கு வெளியே வந்தவுடன் தச்சரிடம், இந்த மரத்தை தொட்டுவிட்டு போனவுடன் காலையில் நடந்த எதை பற்றியும் கவலை படாமல் எப்படி உன்னால் இருக்க முடிந்தது என்றார்.

அதற்கு தச்சர் முதலாளியிடம், இது என்னுடைய சுமை தாங்கி மரம். ஒவ்வொரு நாளும் நான் வேலை முடித்து வந்தவுடன் இந்த மரத்தை தொட்டு என் பாரத்தை இறக்கி வைத்து விட்டு தான் செல்வேன். வேலை செய்யும் இடத்தில் ஏகப்பட்ட பிரச்சனைகள் நடக்கும். அதை எல்லாம் வீட்டிற்குள் எடுத்துக்கொண்டு போகக்கூடாது. காலையில் வண்டி பழுதானதற்கும், நான் தாமதமாக வந்ததற்கும், என் கையில் காயம் ஆனதற்கும், உளி உடைந்து போனதற்கும் என் குடும்பத்தார் எப்படி பொறுப்பாக முடியும்? நான் அவர்கள் மேல் கோபப்படுவது எந்த விதத்தில் நியாயம்? காலையில் நான் போகும்போது இந்த மரத்திடம் இருந்து என் பிரச்சனைகளை எடுத்துக்கொண்டு போவேன். ஆனால் என்ன ஆச்சரியம் என்றால் நான் மாலை வந்ததும் இந்த மரத்திடம் என் பிரச்சனைகளை வைத்து விடுவேன். அந்த பிரச்சனைகள் அடுத்த நாள் காலை பாதி அளவு குறைந்து போய் இருக்கும் என்று கூறினார். இதைக் கேட்ட முதலாளி ஆச்சரியப்பட்டு நின்றார்.

தத்துவம் :

எவ்வளவு பெரிய பிரச்சனையாக இருந்தாலும் அதை மற்றவர்களின் மீது வெளிபடுத்தக்கூடாது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக