Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

திங்கள், 17 பிப்ரவரி, 2020

ரூ.10,000 கோடி கடனை செலுத்திய Airtel., மூடுவிழாவை நோக்கி செல்கிறதா Vodafone?- வாடிக்கையாளர்களே உஷார்



வரலாறு காணாத நஷ்டம்
மொபைல் போன் சேவை வழங்கும் நிறுவனங்கள் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட 'ஸ்பெக்ட்ரம்' எனப்படும் அலைக்கற்றை அளவுக்கு ஏற்ப பயன்பாட்டுக் கட்டணத்தை செலுத்த வேண்டும். மொபைல் போன் மற்றும் தொலைத் தொடர்பு சேவையின் மூலம் கிடைக்கும் வருவாயைத் தவிர மற்ற வழிகளில் கிடைக்கும் வருவாயையும் ஏ.ஜி.ஆர்., கணக்கில் சேர்க்க வேண்டும் என விதிமுறைகள் விதிக்கப்பட்டது.
மொத்தம் 1.33 லட்சம் கோடி நிலுவை
அதன்படி, பாரதி ஏர்டெல், வோடபோன் ஐடியா மற்றும் பிற தொலைதொடர்பு நிறுவனங்கள் மத்திய அரசுக்கு அளிக்க வேண்டிய உரிம கட்டணமான ரூ.92 ஆயிரம் கோடி மற்றும் ஸ்பெக்ட்ரம் பயன்பாட்டு கட்டணமான ரூ. 41 ஆயிரம் கோடி என மொத்தம் 1.33 லட்சம் கோடி நிலுவையில் இருந்தது.
உச்சநீதிமன்றம் உத்தரவு
இதுதொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் அக்டோபர் 24 ம் தேதி தொலைதொடர்பு நிறுவனங்கள் ரூ. 92 ஆயிரம் கோடியை மத்திய அரசிடம் செலுத்த வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி, ஏர்டெல் நிறுவனம் சுமார் ரூ.21 ஆயிரம் கோடி, வோடபோன் ஐடியா நிறுவனம் சுமார் ரூ.10 ஆயிரம் கோடி, ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் சுமார், ரூ.16 ஆயிரம் கோடி மத்திய அரசுக்கு அளிக்க வேண்டும். அதோடு, பி.எஸ்.என்.எல் சுமார் ரூ.2 ஆயிரம் கோடி, எம்.டி.என்.எல் சுமார் ரூ.2 ஆயிரம் கோடியும் பாக்கி வைத்திருக்கிறது.
வரலாறு காணாத நஷ்டம்
வோடபோன், ஐடியா கடும் நஷ்டத்தை சந்தித்துள்ளது. நடப்பு ஆண்டிற்கான இரண்டாவது காலாண்டில் மட்டும் வோடபோன் ஐடியா நிறுவனம் ரூ.50 ஆயிரத்து 922 கோடி நஷ்டத்தை சந்தித்துள்ளதாக கூறியுள்ளது. அண்மைக் காலக்கட்டத்தில் எந்த ஒரு நிறுவனமும் இவ்வளவு நஷ்டத்தை சந்தித்தது இல்லை.
ஏர்டெல் நிறுவனமும் நஷ்டம்
ஏர்டெல் நிறுவனமும் இதுவரை இல்லாத அளவிற்கு இரண்டாம் காலாண்டில் 23 ஆயிரத்து 45 கோடி ரூபாய் நஷ்டம் அடைந்துள்ளதாக தெரிவித்துள்ளது. அரசுக்கு செலுத்த வேண்டிய நிலுவைத் தொகையை முழுமையாக செலுத்த வேண்டும் என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பால் கடும் நெருக்கடி சந்தித்து வருவதாக ஏர்டெல் நிறுவனம் கூறியுள்ளது.
ஜனவரி 20ம் தேதிக்குள் செலுத்த வேண்டும்
இந்த நிலுவைத் தொகையை ஜனவரி 20ம் தேதிக்குள் செலுத்த வேண்டும் என உச்ச நீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் தற்போது வரை தொலைத்தொடர்பு நிறுவனங்கள் அத்தொகையை முழுமையாகச் செலுத்தவில்லை. இதற்கிடையே, நிலுவைத் தொகை வசூலிக்கப்படும் வரை நடவடிக்கை எடுக்க வேண்டாம் என தொலைதொடர்பு துறையின் உரிம நிதிப்பிரிவு உத்தரவு ஒன்றைப் பிறப்பித்திருந்தது.
மார்ச் 17ம் தேதிக்குள் செலுத்த வேண்டும் என உத்தரவு
இந்த மனு நீதிபதி அருண் மிஸ்ரா தலைமையிலான அமர்வு முன்பு வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, நிலுவைத் தொகையை வசூலிக்குமாறு உத்தரவிட்டிருந்தும் அதனை மதிக்காத தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு நீதிபதிகள் கடும் கண்டனத்தை தெரிவித்தனர். நிலுவைத் தொகையை, அடுத்த விசாரணை நடைபெறும் மார்ச் 17ம் தேதிக்குள் செலுத்திவிட வேண்டும் என்று தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
உடனடியாக தொகையை செலுத்துங்கள்
இதையடுத்து, நிலுவைத் தொகையை உடனடியாக செலுத்துமாறு தொலைத் தொடர்புச் சேவை நிறுவனங்களுக்கு மத்திய தொலைத் தொடர்புத் துறை சுற்றறிக்கை அனுப்பியது. அதில் மேற்கண்ட தொகையை நேற்றிரவுக்குள் செலுத்த வேண்டும் என உத்தரவிட்டிருந்தது
பாரதி ஏர்டெல் பதில்
இந்நிலையில், வரும் 20-ஆம் தேதிக்குள் 10 ஆயிரம் கோடி ரூபாயை செலுத்தி விடுவதாகவும், எஞ்சிய தொகையை மார்ச் 17ம் தேதிக்குள் செலுத்தி விடுவதாகவும் பாரதி ஏர்டெல் நிறுவனம் பதிலளித்திருந்தது.
முதல் கட்டமாக ரூ.10 ஆயிரம் கோடியை செலுத்திய ஏர்டெல்
இதையடுத்து, பார்தி எர்டெல் நிறுவனம் தான் செலுத்த வேண்டிய ஏறக்குறைய ரூ.45 ஆயிரம் கோடியில் முதல் கட்டமாக ரூ.10 ஆயிரம் கோடியை இன்று தொலைத்தொடர்புத் துறையிடம் செலுத்தியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது
பாரதி ஏர்டெல் நிறுவனம் வெளியிட்ட அறிக்கை
இதுகுறித்து பாரதி ஏர்டெல் நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், "பாரதி எர்டெல், பார்தி ஹெக்ஸாகாம், டெலிநார் ஆகியவற்றின் சார்பில் இன்று ரூ.10 ஆயிரம் கோடி ஏஜிஆர் நிலுவைக் கட்டணத்தில் ஒருபகுதியைச் செலுத்திவிட்டோம். எங்களின் சுயமதிப்பீட்டுப் பணியை முடிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளோம், இதை முடித்தவுடன் உச்ச நீதிமன்ற விசாரணைக்கு முன்பாக பணத்தைச் செலுத்திவிடுவோம்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாரதி ஏர்டெல் நிறுவனத்துக்கு இன்னும் ஏஜிஆர் நிலுவைக் கட்டணமாக ரூ.35 ஆயிரத்து 586 கோடி செலுத்த வேண்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.
நிறுவனத்தை மூட வேண்டியிருக்கும்: வோடபோன்
டாடா நிறுவனம் மார்ச் 17ம் தேதிக்குள் முழுத் தொகையையும் செலுத்தி விடுவதாக உத்தரவாதம் அளித்துள்ளது. ஆனால், வோடஃபோன் ஐடியா நிறுவனம், நிலுவைத் தொகையை உடனடியாக ஒரே தவணையில் செலுத்துமாறு தங்களைக் கட்டாயப்படுத்தினால் நிறுவனத்தை மூட வேண்டியிருக்கும் என்று கடந்த மாதமே தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இதில் என்ன நடக்கப்போகிறது என்பதை பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக