ஓர் இரவில் உஷை தேவியிடம் ஏற்பட்ட மாற்றம் பற்றி இவர்களின் உரையாடல்களில் இருந்து அறிந்து கொண்டாள் சித்திரலேகை. இவர்களின் இந்த உரையாடல் மூலம் ஏன்? தேவி இந்நிலையில் ஆழ்ந்திருக்கிறார் என்பதை ஊகித்துக் கொண்டாள் சித்திரலேகை(மற்ற பெண்களைக் காட்டிலும் சித்திரலேகை அனைத்தையும் புரிந்து கொள்வதில் கொஞ்சம் வல்லவர் ஆவார்).
பின்பு, தேவியிடம் உரையாட சென்றாள் சித்திரலேகை. உஷையை கண்டதும் தான் எண்ணியது சரியாக இருக்கும் என நம்பிக்கை கொண்டாள். பின்னர், தேவியிடம் தங்கள் மனதில் இருக்கும் நாயகனை பற்றி தெரிவித்தால் நாங்களும் உங்களுடன் மகிழ்ச்சி கொள்வோம் என உரைத்தாள்.
சித்திரலேகையின் உரையாடல்களை சற்றும் எதிர்பார்க்காத உஷைக்கு ஒருவிதமான வியப்பாகவும், அதேசமயம் மனதிற்கு மகிழ்ச்சியாகவும் இருந்தது. தன் மனதில் உள்ள ரகசியங்களை யாரிடமும் நான் உரைக்கவில்லையே... நீர் மட்டும் எவ்விதம் அறிந்து கொண்டாய்? என உஷை, சித்திரலேகையிடம் கேட்கையில் தங்களின் செயல்பாடுகளை பற்றி நான் நன்கு அறிவேன். என் தோழியை பற்றி நான் அறியாமல் வேறு எவரும் அறியமாட்டார். தங்களின் மனதை களவாடிய கள்வன் யார்? என கேட்டாள்.
பிறகு, தன் தோழியான சித்திரலேகையிடம் உஷை, பார்வதி தேவியிடம் இருந்து பெற்ற வரத்தை பற்றி எடுத்துரைத்தார். அதாவது முன்னொரு சமயம் பார்வதி தேவியார் தனக்கு நித்திரையில் உன்னை யார் அடைந்து உன்னை மகிழ்விக்கின்றாரோ அவரையே உன் நாயகனாக அடைந்து வாழ்க்கையின் எல்லா சுகங்களையும் அடைவாய் என்று வரம் அளித்து சென்றதை கூறினார்.
பார்வதி தேவி அளித்த வரத்தின் படியே என் நாயகனும் என் கனவில் வந்து என்னை மகிழ்வித்தார். இருப்பினும் அவர் சிறிது நேரத்திலேயே மறைந்துவிட்டார். மாயக் கலைகள் பல பயின்ற என் தோழியான சித்திரலேகை, உன் மாயத்தால் என் சொப்பனத்தில் வந்து சென்ற என் நாயகன் யார்? என்று உன் மூலமே அறிந்து கொள்ளும் விதமாக விதியானது எழுதப்பட்டுள்ளது.
என் சொப்பனத்தில் வந்த அவர் யார் என்றும்? எக்குலம் என்றும்? நான் அறியேன். ஆனால், அவர் என் மனதை மட்டும் கவர்ந்து சென்று விட்டார். அவரை காணாத ஒவ்வொரு நொடியும் என்னால் உயிர் வாழ இயலவில்லை என்று கூறினார்.
பின்னர், சித்திரலேகை உஷையிடம் தங்களின் கனவில் வந்தவரை எவ்விதம் நான் அறிவேன் என்றும்? அவரை எவ்விதம் கண்டுபிடிப்பேன் என்றும்? உஷையிடம் கூறினாள். அதற்கு உஷையோ!... என் அன்பு மிகுந்த என் தோழியே நீ இவ்விதம் சொல்வதால் என் மனம் கவர்ந்து சென்றவரை நான் எவ்விதம் கண்டறிய இயலும். நீ மட்டும் உதவ இயலவில்லை என்று கூறினால் அவரின் நினைவாகவே அவர் சொப்பனத்தில் தந்த மகிழ்ச்சியை எண்ணியே என் உயிர் நிறைவு பெறும் என்று கூறினாள்.
அரசகுமாரியின் கூற்றிலிருந்து சித்திரலேகை அவள் மனமும், தேகமும் அடையும் இன்னல்களை உணர்ந்தாள். பின்பு, சித்திரலேகை அரசகுமாரியிடம் பலமுறை பல கேள்விகளை கேட்டு சொப்பனத்தில் கண்ட நாயகனின் அங்க அடையாளங்களை தெளிவாக கூறுமாறு கூறினாள்.
அரசகுமாரியும் நித்திரையில் கண்ட தன்னுடைய கதாநாயகனின் அங்க அடையாளங்கள் சிலவற்றை தன் தோழியான சித்திரலேகையிடம் கூறினாள். உஷை கூறிய அடையாளங்களை கொண்டு தன் தேவியின் கனவில் வந்து அவளை மகிழ்வித்து சென்றவர் தனது ராஜ்ஜியத்தில் இருப்பவர் அல்ல என்பதை மட்டும் நன்கு உணர்ந்து கொண்டாள் சித்திரலேகை.
பின்னர் சித்திரலேகை தன் தோழியான அரசகுமாரியிடம் தங்களின் கனவில் வந்து மகிழ்வித்த நாயகனை நான் ஏழு தினங்களுக்குள் கண்டறிந்து உங்களை அவரிடம் சேர்த்து வைக்கிறேன் என்று உறுதி அளித்தார்.
உஷையோ தன் தோழியை மிகுந்த மகிழ்ச்சியுடன் அரவணைத்து தனது மனம் அடைந்த மகிழ்ச்சியை அவளிடம் பகிர்ந்து கொண்டாள். பின்பு தன் மனதில் இருந்த மிகப்பெரிய கவலை நீங்கியவளாய் உன்னுடைய இந்த முயற்சியானது நன்முறையில் வெற்றி அடைய நான் என்றும் வணங்கும் திருமாலையும், பார்வதிதேவியையும் பிரார்த்திக்கிறேன் என்று கூறினாள்.
பின்பு, சித்திரலேகை ரகசியமாக தன் மாய சக்தியால் எல்லா அசுரர்களையும் துணையாக கொண்டு தேவி உரைத்த அங்க அடையாளங்களை அவர்களுக்கு எடுத்துரைத்து இவ்விதம் உள்ளவரை கண்டறிந்து, அவர் எவ்விடத்தில் உள்ளார்? என்பதையும், அவர் எந்த நாட்டில் உள்ளார்? என்பதையும் தன்னிடம் உரைக்குமாறு கூறினார்.
அவர்களுடன் சித்திரலேகையும் சில வீரர்களுடன் துவாரகைக்கு சென்று தேவி உரைத்த அங்க அடையாளம் கொண்ட நபர் உள்ளாரா? என தேடிக் கொண்டிருந்தார். அவ்விதம் தேடுகையில் தன் தேவியின் கனவில் வந்து அவளை மகிழ்வித்து சென்ற நாயகனை, அவள் உரைத்த அங்க அடையாளங்கள் கொண்ட உஷையினுடைய நாயகனை கண்டு மிகுந்த மகிழ்ச்சியடைந்தாள்.
தேவியின் கனவில் கண்ட நாயகனைப் பற்றிய அனைத்து விவரங்களையும் அறிந்து கொண்டாள் சித்திரலேகை. பின்பு, தனது ராஜ்ஜியமான சோனிதபுரிக்குச் சென்று தனது தோழியான உஷையிடம், தாங்கள் கூறிய அங்க அடையாளங்களுடன் கூடிய உங்களின் நாயகரை கண்டறிந்தோம் என்று கூறினாள்.
தனது தோழியின் மூலம் கிடைத்த இச்செய்தியை அறிந்து மிகுந்த மகிழ்ச்சி கொண்டாள். பின்னர், தனது நாயகன் எங்குள்ளார்? யார் அவர்? எந்நாட்டைச் சேர்ந்தவர்? என பலவிதமான கேள்விகளை தொடுத்து, தனது தோழியிடம் தனது நாயகனைப் பற்றிய அனைத்து விவரங்களையும் அறிந்துக்கொள்ள மிகுந்த ஆர்வம் கொண்டாள்.
சிவபுராணம் நாளையும் தொடரும்....
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக