Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வெள்ளி, 28 பிப்ரவரி, 2020

பாண்டவர்கள் - கௌரவர்களின் சூதாட்டம்...!


 பீமன், துரியோதனின் சூழ்ச்சியை நாம் முறியடிக்க வேண்டும். துரியோதனனின் இச்செயல்களை எத்தனை காலம் தான் பொறுத்துக் கொள்வது. அவனிடம் போரிட்டு அவனை வீழ்த்துவோம் என்றான். அர்ஜூனனும், நகுலனும், சகாதேவனும் இதற்கு சம்மதம் தெரிவித்தனர். அப்பொழுது யுதிஷ்டிரன், விதியின் செயலை நம்மால் மீற முடியுமா? நன்மை நடந்தாலும் சரி, தீமை நடந்தாலும் சரி. தந்தையின் கட்டளைப்படி நடப்போம் என்றான். சகோதரர்களும் தங்களின் கோபத்தை குறைத்து இதற்கு சம்மதம் தெரிவித்தனர். அதன் பிறகு பாண்டவர்கள் ஐவரும் திரௌபதியுடன் அஸ்தினாப்புரத்திற்கு சென்றனர். பாண்டவர்களை காண அஸ்தினாப்புரத்தில் மக்கள் சூழ்ந்திருந்தனர்.

 பாண்டவர்கள் அரண்மனையை அடைந்தனர். பாண்டவர்களுக்கான வரவேற்பு மிக பிரம்மாண்டமாக இருந்தது. பாண்டவர்கள் திருதிராஷ்டிரன், பீஷ்மர், துரோணரிடம் ஆசியைப் பெற்றுக் கொண்டனர். பாண்டவர்களின் வருகையைக் கண்டு சகுனி அளவற்ற மகிழ்ச்சி அடைந்தான். குந்தியும், திரௌபதியும் அனைவரிடமும் ஆசியைப் பெற்றனர். காந்தாரி அவர்களை மாளிகைக்கு அழைத்துச் சென்றாள். அதன்பின் அவை கூடியது. சகுனி யுதிஷ்டிரரிடம், தர்மத்தின் வள்ளலே! நீங்கள் உங்கள் குலத்தின் பெருமையை உயர்த்துவிட்டீர்கள். இப்பொழுது மாமன்னனாகவும் முடிசூட்டிவிட்டீர்கள். உங்களின் திறமையை சூதாட்டத்தில் காண்பிக்க தயாராக உள்ளீர்களா? என்றான்.

 யுதிஷ்டிரன், நீங்கள் சதி செய்து எங்களை இங்கு அழைத்து வந்துவிட்டீர்கள். அறத்தை நிலைநாட்டுபவன். நல்வழியில் நடப்பவன். வீரம் உடையவன் சூதாட்டம் ஆடமாட்டார்கள் என்பது உங்களுக்கு நன்றாக தெரிந்திருக்க வேண்டுமே? இதைக் கேட்டு சகுனியின் முகம்  கோபமாக மாறியது. யுதிஷ்டிரன், நீங்கள் எங்களை கொல்ல சதி திட்டம் தீட்டியவர்கள்? நாங்கள் நல்வழியில் வாழ நீங்கள் விரும்பாதவர்கள். அதனால் தான் சூதாட்டத்தின் மூலம் எங்களை அழிக்க நினைக்கின்றீர்கள் என்றான். சகுனியின் மனதில் கோபம் இருந்தாலும் அதனை மறைத்து புன்னகைத்தான். தர்மரே! பண்டை காலத்தில் வாழ்ந்த மன்னர்கள் சூதாடவில்லையா என்ன? நீ பயம் கொள்ளாமல் வந்து எங்களுடன் சூதாட்டத்தில் கலந்துகொள் என்றான்.

 யுதிஷ்டிரன், சான்றோர்கள் சூதாட்டம் நம் வாழ்க்கையை கெடுத்துவிடும் எனக் கூறியுள்ளனர். அதனால் நான் சூதாடுவதை விரும்பவில்லை எனக் கூறினான். சகுனி, யுதிஷ்டிரரே! தாங்கள் தோற்றுவிடுவோமோ என பயம் கொள்கிறீர்கள். அதனால் மன்னர்கள் நிறைந்த இந்த சபையில் நீங்கள் மறுத்து பேசுகிறீர்கள். வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் என்னும் பழமொழியை தாங்கள் கேட்டிருப்பீர்கள். இதில் வல்லவன் மட்டுமே வெல்வான். மற்றவன் தோல்வி அடைவான். உனக்கு மனத்துணிவு இருந்தால் எங்களுடன் வந்து போட்டியில் கலந்துக்கொள். அப்படி இல்லையேல் இங்கிருந்து சென்றுவிடு எனக் கூறினான். சகுனியின் இந்த வார்த்தைகளை கேட்டு யுதிஷ்டிரர் உணர்ச்சிவசப்பட்டார்.

 விதி என்னை இச்செயலுக்கு தூண்டுமானால், அதை வெல்பவர் யார் தான் உண்டு எனக் கூறிவிட்டு போட்டிக்கு சம்மதம் தெரிவித்தான். இப்போட்டிக்காகவே சூதாட்டம் மேடை தனியாக அமைக்கப்பட்டிருந்தது. துரியோதனன், என்னுடைய தரப்பிலிருந்து மாமா அவர்கள் விளையாடுவார்கள் என்றான். இப்போட்டி உனக்கும் எனக்கும் இடையில் நடக்கிறது. இப்பொழுது மாமா அவர்கள் விளையாடுவார் என்று தெரிந்த பின்பு, நான் இப்போட்டியில் இருந்து விலகுவது அநியாயமாகும். உன்னுடைய தரப்பில் இருந்து மாமா அவர்கள் ஆடுவார்கள் என்றால் நான் இதற்கு சம்மதம் தெரிவிக்கிறேன் என்றான். துரியோதனன், யுதிஷ்டிரா! நீ புத்திசாலியாக தான் பேசுகிறாய் என்றான்.

 பீஷ்மர், விதுரர், துரோணர், கிருபாச்சாரியார் முதலானோர் அவரவர் இருக்கையில் அமர்ந்து இருந்தனர். அவர்களுக்கு இப்போட்டி நடப்பதில் விருப்பம் இல்லை என்றாலும், சகுனி அவர்களைப் பார்த்து, இப்போட்டியில் பெரியவர்கள் முன்னிலை வகித்தால் எந்த பிரச்சனையும் வராது அல்லவா? எனக் கூறினான். பாண்டவர்கள் அவரவர் இருக்கையில் அமர்ந்தனர். சூதாட்டம் தொடங்கியது. முதலாவது தங்களிடம் இருந்த பொன் பொருட்களை பந்தயமாக வைத்தனர். சகுனி தாயத்தை உருட்டினான். யுதிஷ்டிரனும் தாயத்தை உருட்டினான். இந்த ஆட்டத்தில் வெற்றி அடைந்தது சகுனி தான். குழப்பமடைந்த யுதிஷ்டிரன், நீங்கள் என்னை ஏமாற்றுகிறீர்கள் எனக் கூறி பெட்டி நிறைய தங்க நாணயங்களைப் பணயமாக வைத்தான்.

ஆனால் இம்முறையும் சகுனியே வெற்றி அடைந்தான். துரியோதனனும் அளவற்ற மகிழ்ச்சி அடைந்தான். அதன் பிறகு யுதிஷ்டிரன் தனது தேர், அஸ்திர சாஸ்திரங்கள், தன்னிடமிருந்த தானங்கள் என அனைத்தையும் ஒவ்வொன்றாக பணயமாக வைத்தான். எல்லா முறையும் துரியோதனனே வெற்றிக் கண்டான். மிகவும் கவலைக் கொண்ட யுதிஷ்டிரன் தன்னுடைய சேனைகள், சேவகர்கள் என அனைவரையும் பந்தயமாக வைத்தான். இப்பொழுதும் சகுனியே வெற்றி அடைந்தான். துரியோதன் வெற்றி கண்டு அளவற்ற மகிழ்ச்சியில் இருந்தான். யுதிஷ்டிரன் என்ன செய்வதென்று தெரியாமல் மிகவும் கவலைக் கொண்டான்.

தொடரும்...!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக