வெள்ளி, 28 பிப்ரவரி, 2020

ஜடாயு சந்திப்பு..!

 டாயு ஓர் உயர்ந்த மலையின் மேல் கம்பீரமாக வீற்றிருந்தார். இராமர் அவரை பார்த்து ஓர் அரக்கன் பறவை உருவத்தில் நமக்கு இடர் செய்ய வந்து இருக்கிறான் என நினைத்துக் கொண்டார். இராமர், இலட்சுமணர் வருவதை கவனித்து கொண்டிருந்தார், ஜடாயு. இவர்கள் தவ வேடத்தில் இருந்தாலும் தவசிகள் இல்லை. இவர்கள் கையில் வில்லேந்தி இருப்பதால் தேவர்களாக இருக்கக்கூடும் என எண்ணிக் கொண்டு இருந்தார். இவர்கள் உடன் வரும் தேவியை பார்த்தால் திருமகள் போல் தோன்றுகிறாள். இவர்களை பார்க்கும் போது எனக்கு என் நண்பன் தசரத சக்ரவர்த்தி ஞாபகம் வருகிறது. இவர்கள் யாராக இருக்கக்கூடும் என எண்ணிக் கொண்டு இருந்தார்.

இராம இலட்சுமணர் அருகில் வந்தவுடன் குழந்தைகளே! நீங்கள் யார்? என அன்புடன் கேட்டார், ஜடாயு. இராமர், ஐயா! நாங்கள் தசரத சக்ரவர்த்தியின் குமாரர்கள் என்று கூறினார். இதைக் கேட்ட ஜடாயுக்கு அளவற்ற மகிழ்ச்சி உண்டானது. தசரதர் என் உடன்பிறவா சகோதரன். அவன் நலமாக இருக்கிறானா? எனக் கேட்டார். இராமர், சத்தியத்தை நிலைநாட்ட என் தந்தை முக்திநிலையை அடைந்து விட்டார் எனக் கூறினார். இதை கேட்ட ஜடாயு அதிர்ச்சியில் மயங்கி விழுந்தார். உடனே இராம இலட்சுமணர் ஜடாயுவை மயக்க நிலையில் இருந்து தெளிய வைத்தனர். ஜடாயு கண்ணீர் மல்க தசரதரை நினைத்து அழுதார். தசரதா! உன் கொடை தானத்திற்கு தோல்வி வந்து விட்டதே. உன் உயிர் பிரிந்த செய்தியை ஒருபோதும் என் மனது ஏற்று கொள்ளவில்லையே. நீயும் நானும் இரு உடல் ஓர் உயிர் போலவே பழகினோம். நீ இல்லா இவ்வுலகில் ஒருபோதும் நானும் இருக்க மாட்டேன்.

 இப்பொழுதே நான் தீயில் பாய்ந்து உயிரை விடுகிறேன். நீங்கள் உங்கள் தந்தைக்கு செய்த ஈமச்சடங்குகளை எனக்கும் செய்வீர்களாக! என்று கேட்டார். இராமர் இலட்சுமணர் இதனை கேட்டு மிகவும் வருந்தினார்கள். எங்கள் தந்தையின் உயிர் தோழனாகிய தாங்களே உயிரை மாய்த்து கொள்வேன் என்றால் எங்களுக்கு வேறு யார் ஆதரவு தர முடியும். இராமர் ஜடாயுவை வணங்கி, பெரியப்பா! நாங்கள் வாழும் பொருட்டு ஒருபோதும் தாங்கள் உயிரை மாய்த்துக் கொள்ளக் கூடாது என்று வேண்டிக் கொண்டார். தந்தை, தாய்க்கு செய்து கொடுத்த வரத்தின்படி வனவாசம் வந்துவிட்ட எங்களை தாங்களும் பிரிந்துவிட்டால் நாங்கள் என்ன தான் செய்வோம். சரி குழந்தைகளே! நான் நீங்கள் அயோத்திக்கு திரும்பும் வரை சாக மாட்டேன் என்றார், ஜடாயு. நீங்கள் இக்கொடிய கானகத்திற்கு வரக் காரணம் என்னவென்று கேட்டார் ஜடாயு. இலட்சுமணர் நடந்த எல்லாவற்றையும் ஜடாயுவிடம் கூறினார். இதைக் கேட்ட ஜடாயு மிகவும் நெகிழ்ந்து போனார். தந்தைக்கு கொடுத்த சத்தியத்தை காப்பதற்காக உன் தம்பி பரதனுக்கு நாட்டை கொடுத்து விட்டு கானகம் வந்த வள்ளலே உன் வாய்மையை நான் பாராட்டுகிறேன் என்றார். சரி அது இருக்கட்டும் தங்களுடன் வந்திருக்கும் இப்பெண்மகள் யார்? எனக் கேட்டார். ஜனக மகாராஜாவின் மகள் அண்ணாவின் மனைவி என்று கூறினார் இலட்சுமணர்.

 ஜடாயு சீதையை பார்த்து, உன் புகழ் ஓங்குக. கணவனே கண்கண்ட தெய்வம் என்று கணவன் வந்திருக்கும் கானகத்துக்கு நீயும் வந்துள்ளாய். கற்புக்கரசியே! உன் புகழ் வாழ்க என வாழ்த்தினார். பிறகு அவர்கள் மூவரும் நடந்து செல்ல ஜடாயு குடையை போல தன் சிறகை விரித்து வழிகாட்டி கொண்டு மேலே பறந்து வந்தார். அவர்கள் பஞ்சவடி வனத்தை அடைந்தனர். புண்ணிய நதியான கோதாவரியில் மூழ்கி மகிழ்ந்தார்கள். இலட்சுமணர் அங்கு ஓர் அழகான குடிலை அமைத்தார். இராமரும், சீதையும் அக்குடிலில் வாழ்ந்தனர்.

தொடரும்.....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Follow and Join with US

தினமும் எங்கள் வாசகர்கள் மற்றும் நண்பர்கள் பல்வேறு செய்திகளை பெறுகின்றனர் நீங்களும் இணைத்து எங்களை வழி நடத்துங்கள்