Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வெள்ளி, 28 பிப்ரவரி, 2020

சிவபுராணம்..! பகுதி 115


சித்திரலேகை உஷையின் அனைத்து கேள்விகளுக்கும் விடையளிக்க தொடங்கினாள். அதாவது தங்களின் கனவில் வந்து தங்களை பலவிதமாக மகிழ்ச்சி பெருங்கடலில் ஆழ்த்திய, உங்கள் மனதிற்கு பிடித்த நாயகன் துவாரகையில் உள்ள கிருஷ்ண பரமாத்மாவின் பேரனான அநிருத்தன் என்பவர் எனக் கூறினாள்.

தன்னுடைய மனம் கவர்ந்த நாயகனைப் பற்றி அறிந்தவுடன் தன் மனதில் எல்லையற்ற பேரானந்தம் கொண்டாள் உஷை. பின், தன் தோழியிடம் தன் நாயகனை எப்பொழுது இங்கு அழைத்து வருவாய் என்றும், இச்செய்தியானது மற்றவர்களுக்கு தெரியும் பட்சத்தில் ஒரு பெரிய விபரீதத்தை உண்டாக்கும் என்றும் அச்சம் கொண்டாள். அதாவது தனது நாயகனை காணவேண்டும் என்ற ஆவல் இருந்தாலும் தன் தந்தையின் மீது கொண்ட பயத்தால் இருதலை கொல்லியாக தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினாள் உஷை.

சித்திரலேகையோ... தேவியிடம் தாங்கள் எதற்கும் அச்சம் கொள்ள வேண்டாம் என்றும், உங்களுக்கு அளித்த வாக்குறுதியின்படி நான் தங்களை உங்களின் மனதிற்கு விரும்பிய நாயகனோடு இணைத்து வைப்பேன் என்றும் உறுதியளித்தாள். இச்செய்தியானது அந்தப்புரத்தை விட்டு எவ்வளவு காலம் வெளியே செல்லாமல் இருக்குமே அத்தனை காலம் உங்களின் மனம் விரும்பிய நாயகனோடு நீங்கள் இங்கே மகிழ்ச்சியாக இருக்க இயலும் என்று கூறினாள்.

சித்திரலேகையின் பேச்சு உஷையின் மனதிற்கு இதமான ஒரு ஆதரவை அளித்தது. பின்னர் மீண்டும் தன் தோழியிடம் என் மனம் கவர்ந்த நாயகனை எப்பொழுது இங்கே அழைத்து வருவாய் என்று கேட்டாள் உஷை. அதற்கு சித்திரலேகையோ... தேவி! அமைதி கொள்ளுங்கள். காலமும், பொழுதும் சாதகமாக அமையும்போது நாம் எண்ணிய எண்ணம் எவ்விதமான இடர்பாடுகளும் இன்றி நிறைவேறும். ஆகவே, தாங்கள் அமைதி கொள்ளுங்கள் என்று தனது தோழியை சமாதானப்படுத்தினாள்.

இருப்பினும் தனது தோழியின் வார்த்தைகளை உதடளவில் ஏற்றுக்கொண்டாலும் மனதளவில் தன் மனம் கவர்ந்த கள்வரான தன்னுடைய நாயகனின் வருகைக்காக ஒவ்வொரு நொடியும் காத்துக் கொண்டிருந்தாள் ராஜகுமாரியான உஷை. ஆதவன் தனது பணிகளை முடித்து தனது இருப்பிடம் நோக்கி செல்ல அதே வழியாக மதியானவர் தன் பணியை தொடர ராஜ்ஜியத்தில் உள்ள அனைவரும் நித்திரை கொள்ளும் காலம் வரை பொறுமையாக இருந்தாள் சித்திரலேகை.

பின்பு, தனது உதவியாளர்கள் மற்றும் ஒற்றர்களின் உதவியுடன் தனது மாய சக்தியால் வான்வெளி மூலம் சோனிதபுரியில் இருந்த துவாரகையில் இளவரசனான அநிருத்தன் வீற்றிருக்கும் அந்தப்புரத்தை அடைந்தார் சித்திரலேகை.

அந்தப்புரத்தில் பல மங்கையர்கள் சூழ கரங்களில் மது கிண்ணங்களுடன் மனதில் தோன்றிய பல எண்ணங்களால் அங்கிருந்து வந்த இன்பமான பொழுதுகளை தவிர்த்து மலர்களால் அலங்கரிக்கப்பட்ட பஞ்சனையுடைய மஞ்சத்தில் வீற்றிருந்தார் அநிருத்தன்.

சித்திரலேகை தனது மாய சக்தியால் அங்கிருந்த மங்கையர்கள் மற்றும் அநிருத்தன் என அனைவரையும் எதையும் உணராதவர்களாக செய்து அநிருத்தனை மட்டும் கட்டிலுடன் தூக்கி தனது சிரத்தின் மேல் வைத்து வான்வெளி வழியாக துவாரகையிலிருந்து சோனிதபுரியை வந்தடைந்தார்.

இருளின் வெளிச்சமின்மையையும், தனது மாய சக்தியினையும் கொண்டு வான்வெளியில் பறப்பதை எவரும் அறியாவண்ணம் மறைந்து, தேவி வீற்றிருக்கும் அந்தப்புரத்தில் பல காவலர்களின் காவல்களை கடந்து, தனது தோழியின் மனம் கவர்ந்த நாயகனை அவள் அருகில் கொண்டு சேர்த்தாள் சித்திரலேகை.

காதலனைக் கண்ட உஷை அடைந்த மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை. பின்பு, தனது சொப்பனத்தில் கண்ட தன் நாயகனை விழித்தெழ செய்யுமாறு கூறினாள். சித்திரலேகையும் அநிருத்தன் மீது செலுத்திய தனது மாய சக்தியை குறைத்து அவரை பழைய நிலைக்கு ஆழ்த்தினார். இருப்பினும் அவர் அந்த மாய சக்தியால் கொண்ட நித்திரையால் சிறிது நேரம் கழித்து விழித்தெழுவார் எனக் கூறி அவ்விடம் விட்டு சித்திரலேகையும் அகன்றார்.

தோழி சென்ற பின்பு தனது கரங்களில் விசிறியைக் கொண்டு மயக்கத்தில் இருந்த தனது நாயகனை கண்டவாறு அவர் விழித்தெழும் கணப்பொழுதை எதிர்நோக்கி இதமான தென்றலை வீசி பலவிதமான எண்ணங்களுடன் அவரை கண்டு கொண்டிருந்தாள் அரசகுமாரியான உஷை.

காலங்கள் கடந்தன... நித்திரையில் ஆழ்ந்திருந்த அநிருத்தன் மயக்கம் தெளிந்து கண் விழித்துப் பார்த்தார். பின்பு, கட்டிலில் இருந்து எழுந்து தான் இருக்கும் இடத்தை சுற்றிப் பார்த்தார். தான் என்றும் இருக்கும் தனது அந்தப்புரம் இது இல்லை என்பதை உணர்ந்தார். பின்பு தனது அருகில் இருப்பவர் யார்? என காண முயலுகையில் அன்று தான் சொப்பனத்தில் கண்ட அதே அழகிய விழிகள் கொண்ட பதுமையை மீண்டும் கண்டதும் மிகுந்த மகிழ்ச்சி கொண்டார்.

துவாரகையில் இருந்த நான் இப்பொழுது எங்கு உள்ளேன்? எப்படி இங்கு வந்தேன்? என்று மிகுந்த வியப்புடனும், அதேசமயம் ஒருவிதமான பதற்றத்துடனும் தனது மனதிற்கு பிடித்தவளான உஷையிடம் கேட்டார்.

நீங்கள் இப்பொழுது பாணாசுரனின் ராஜ்ஜியத்திற்கு உட்பட்ட அவளது மகள் இருக்கும் அந்தப்புறமான சோனிதபுரியில் இருக்கின்றீர்கள் என்றும், எனது பெயர் உஷை என்றும்... அகத்தில் நாணத்துடனும், முகத்தில் வெட்கத்துடனும் தலைகுனிந்தவாறு தன் மனம் கவர்ந்த கள்வனிடம் முதன்முதலாக உரையாடலை தொடங்கினாள் உஷை.

சிவபுராணம் நாளையும் தொடரும்....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக