உஷையின் பேச்சுக்களால் தான் தங்கியிருக்கும் இடத்தை அறிந்த அநிருத்தன், நான் எப்படி இவ்விடம் வந்து அடைந்தேன்? என்று கேட்டார். உஷையோ அநிருத்தன் எவ்விதம் இவ்விடத்தை வந்தடைந்தார் என்பதையும், ஏன்? இவ்விதம் இங்கு கொண்டு வரப்பட்டார் என்பதையும், யார்? இதற்கு உதவி செய்தார்கள் என்பதை பற்றிய விவரங்கள் அனைத்தையும் தெளிவாக எடுத்துரைக்க தொடங்கினாள்.
அதாவது, அன்று இரவு நேரத்தில் உங்களிடம் இருந்த பொழுது என் மனம் அடைந்த மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை. நான் ஒரு புதுவிதமான உணர்வுடன் இருந்த கணப்பொழுதுகளை என்னால் என்றும் மறக்க இயலவில்லை என்றும், என் மனமும் என்னிடம் இல்லாமல் உங்களை பற்றிய சிந்தனைகள் மற்றும் எண்ணங்களுடன் உங்களை தேடி அலைந்து கொண்டிருந்தது என்றும், அன்று முதல் என்னால் எந்தவிதமான செயல்பாடுகளிலும் கவனம் செலுத்த இயலாமலும், எங்கும் உங்களின் அழகிய முகமும் தோன்றி கொண்டிருந்ததால் என்னால் எந்தப் பணியையும் செய்ய இயலாமல் தனிமையில் வாடினேன்.
என் தோழியான சித்திரலேகையின் உதவியுடனும், அவள் அறிந்த மாய சக்திகளை கொண்டும் தாங்கள் இருக்கும் இடத்தை அறிந்து பின்பு சித்திரலேகையின் மூலமாக துவாரகையிலிருந்து இவ்விடம் வந்துள்ளீர்கள் என்று நாணத்துடன் தலைக் குனிந்தவாறு தன் மனதை எடுத்துச்சென்ற தன்னுடைய நாயகனான அநிருத்தனிடம் கூறினாள்.
நிகழ்ந்த அனைத்தையும் உஷை எடுத்துரைக்க தான் இருக்கும் இடத்தை பற்றியும், தான் இவ்விடம் வந்ததைப் பற்றிய முழு விவரங்களையும் நாணம் மிகுந்த உரையாடல்களில் இருந்து அறிந்து மிகுந்த வியப்பும், ஆச்சரியமும் அதே சமயம் தன் மனதில் என்றும் காண இயலவில்லையே என்று ஏங்கி தவித்த தன் நாயகியின் அருகிலிருப்பதையும் எண்ணி மகிழ்ச்சி கொண்டார் அநிருத்தன்.
அன்று இரவு நான் எவ்விதம் இங்கு வந்தேன் என்பதை நானறியேன். ஆனால் உன்னைப் பிரிந்த அந்த நொடி முதல் என்னால் இவ்வுலகில் வாழ இயலவில்லை. உன்னுடன் இருந்த கணப்பொழுதுகள் யாவும் என் மனதில் நீங்கா நினைவுகளாக இருந்து என்னை வாட்டி வதைத்துக் கொண்டிருந்தன. நீ யார்? என்பதையும், நீ எங்கிருந்து வந்தாய்? என்ற விவரங்களையும் அறிந்து கொள்ள பல முயற்சிகள் செய்தும் எதுவும் பயன் அளிக்கவில்லை.
உன்னை காணாது மிகவும் தவித்து வந்தேன். நீ இல்லாமல் என் வாழ்க்கை முழுமை அடையாது என்ற எண்ணம் என் மனதில் மேலோங்க தொடங்கின. உன்னை காண வேண்டும் என்ற எண்ணம் கணப்பொழுதும் அதிகரித்து உன் நினைவாகவே இருந்தேன் என்று கூறினார் அநிருத்தன்.
நம் இருவரின் சந்திப்பும் மற்றும் நம் மனதில் தோன்றிய எண்ணங்கள் யாவும் இறைவனின் சித்தத்தால் தான் நிகழ்கின்றன என்பதாக உணர்கின்றேன். அதன் காரணமாகவே துவாரகையிலிருந்து என்னை சோனிதபுரிக்கு மாய சக்திகளால் உன்னை சந்திக்க நேர்ந்துள்ளது என்று மிகுந்த மகிழ்ச்சியுடன் புன்முறுவல் பூத்த முகத்துடன் உஷையை நோக்கி கூறினார்.
தன் மனம் விரும்பிய நாயகன் தன்னை விரும்புவதையும், அவருடன் நடைபெற்ற இந்த முதல் பேச்சுகள் தயக்கத்தில் இருந்து வந்த உஷைக்கு மிகுந்த மகிழ்ச்சியையும் அளித்தது. மனதில் இருந்த தயக்கம் நீங்கி தன் நாயகனை சிரம் நிமிர்ந்து நாணத்துடன் கண்டு பேரானந்தம் அடைந்தாள்.
பின்பு, அநிருத்தன் தன் மனதை களவாடிய களவாணியை அரவணைத்து தனது அன்பை வெளிப்படுத்தினார். தன் மனதிற்கு விரும்பியவருடன் இருந்த அந்த நொடிப் பொழுது அரவணைப்பால், பல காலங்களாக தன் மனதில் இருந்து வந்த தவிப்பும், ஆதங்கமும் நீங்கி தான் முழுமை அடையப் போகின்றோம் என்பதை உணர்ந்தால் உஷை.
அரசகுமாரியான உஷை தன் காதலனுடன் பலவாறாக கூடி அந்தப்புரத்தில் பலவிதமாக இன்பமாகப் பொழுதைக் கழித்து வந்தாள். காதலர்களான இருவரும் தங்களை பற்றிய விவரங்களை ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொண்டு தங்களது உறவை மேம்படுத்தினர்.
நாட்கள் யாவும் கடந்தோடின. அந்தப்புரத்தில் நடந்து வந்த இவர்களின் காதல் மெல்ல மெல்ல அங்கு காவல் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த காவலாளிகளின் செவிகளுக்கு எட்டியது. மேலும், தேவியின் நடவடிக்கைகளிலும் மாற்றங்கள் நிகழ்ந்துகொண்டே இருந்தன.
அவரிடம் காணப்பட்ட சிறு சிறு மாற்றங்களையும் தெளிவாக மற்றவர்களுக்கு உணர்த்தும் வகையில் தேவியின் நடவடிக்கைகள் யாவும் இருந்து வந்தன. இவைகள் தேவியின் உடனிருந்த தோழிகளுக்கும், மேலும் அங்கு காவல் பணியில் இருந்து வந்த காவலர்களுக்கும் ஒருவிதமான சந்தேகத்தை ஏற்படுத்திக்கொண்டிருந்தன.
பின் காவலாளிகள் தங்களது பணிகளை துரிதப்படுத்தி நிகழும் மாற்றங்களை உணரத் தொடங்கினார்கள். அதாவது அந்தப்புரத்தில் பல வீரர்கள் காவல் காக்கும் பணியில் இருக்கும் பொழுது எவரும் அறியாவண்ணம் ராஜகுமாரியின் அந்தப்புரத்திற்கு ஓர் ஆடவன் வந்து செல்லும் செய்தியை காவலாளிகள் அறிந்து கொண்டனர். பின் அவன் எவ்விதம் இந்த அந்தப்புரத்தில் வந்து செல்கின்றான் என்பதை அறிய முற்படத் தொடங்கினர்.
காவலாளிகளின் முயற்சிகள் யாவும் சரியான பலன்களை அளிக்கவில்லை. அவர்கள் என்ன செய்வது? என்று அறியாமல் இருந்து வந்தனர். பின்பு, தனது தலைவரிடம் இச்செய்தியை எடுத்துரைக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் காவலாளிகள் தனது தலைவர் மற்றும் வேந்தரான பாணாசுரனை காணச் சென்றனர்.
சிவபுராணம் நாளையும் தொடரும்....
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக