நெடுஞ்சாலைகளில்
அமைக்கப்பட்டிருக்கும் சுங்கச்சாவடிகளில் வாகன ஓட்டிகள் எளிதாக கட்டணம் செலுத்துவதற்காக
கொண்டு வரப்பட்டது பாஸ்டேக். இதுதொடர்பான டேக் வாகனத்தின் முன்புறம் ஒட்டப்பட வேண்டும்.
இதன்மூலம் சுங்கச்சாவடிகளில் ஸ்கேன் செய்யப்பட்டு, அதனுடன் இணைக்கப்பட்டுள்ள வங்கிகளில்
இருந்து கட்டணம் வசூலிக்கப்படும்.
இது நீண்ட வரிசையில் வாகனங்கள் காத்திருக்காமல் விரைந்து செல்ல உதவிகரமாக இருக்கும் என்ற அடிப்படையில் ஏற்படுத்தப்பட்டது. பாஸ்டேக்குகள் RFID எனப்படும் ரேடியோ அதிர்வெண் அடையாள தொழில்நுட்பம் மூலம் இயங்குகிறது. இந்நிலையில் வாடிக்கையாளர்கள் பாஸ்டேக்குகளை கட்டணம் செலுத்தி பெறுவதற்கு ஏதுவாக இ-வேலட் சேவையை வங்கிகள் வழங்கி வருகின்றன.
இதற்கான சாப்ட்வேரை வாங்கி அதன்மூலம் தினசரி பணப் பரிமாற்றங்களை வங்கிகள் கவனித்து கொண்டிருக்கின்றன. வங்கிகளின் இ-வேலட் ஆப்பை டவுன்லோடு செய்தவுடன், UPI மூலம் பாஸ்டேக்குகளை வாங்கவோ அல்லது ரிசார்ஜ் செய்யவோ முடியும்.
இதில் UPI என்பது அனைத்துவிதமான வங்கிகளுக்கு ஒரு பொதுவான நுழைவு வாயில் போன்றது. இதனுடன் இணைக்கப்பட்ட வங்கிகளில் இருந்து எளிதில் பணப் பரிமாற்றம் செய்து கொள்ளலாம். இந்நிலையில் அடையாளம் தெரியாத வாடிக்கையாளர்கள் சிலர் அதிகப்படியான பாஸ்டேக் ரிஃபண்ட்களை பெற்றிருப்பதை வங்கிகள் கண்டறிந்தன.
இதற்காக பதிவு செய்யப்பட்ட பல வங்கி கணக்குகள் செயல்படாமலும், ஜீரோ பேலன்சிலும் இருப்பது தெரியவந்தது. இதுதொடர்பாக வங்கி நிர்வாகம் போலீசில் புகார் அளித்ததன் பேரில் ஏமாற்றுதல், மோசடி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளன.
இதுகுறித்து போலீசார் கூறுகையில், இ-வேலட் சிஸ்டத்தில் இருந்த லூப்ஹோல் மூலம் 4,259 ரிஃபண்ட்களை மோசடியாக பெற்றுள்ளனர். இது ஜனவரி 2019 முதல் ஜனவரி 2020க்கு இடைப்பட்ட காலத்தில் நடந்துள்ளது. மொத்தம் ரூ.19.8 கோடி அளவிற்கு வங்கியில் இருந்து பணத்தை பெற்று மோசடி செய்துள்ளதாக கூறினர்.
இந்த வழக்கில் களமிறங்கிய சைபர் பிரிவு போலீசார் சென்னை, பெங்களூரு மற்றும் கர்நாடகாவின் சில பகுதிகளில் இருந்து மோசடி செய்ததை கண்டறிந்தனர். அவர்களில் புருஷோத்தம் ரேவண்ணா(40), கிரண் மஞ்சு(35), ராஜேஷ் ஷிவண்ணா(34), ரசண்ணா(37) ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் மீது தகவல் தொழில்நுட்ப முறைகேடு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. முக்கிய குற்றவாளியை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக