குமரனின் கோபத்தை அதிகப்படுத்த நாரதர், அடுத்த பாணத்தை ஏவினார். இது உமது தாய், தந்தையினரால் உனக்கு இழைக்கப்பட்ட பெரும் அநீதி ஆகும்.
இவ்விதம் உன்னை ஏமாற்றி அநீதி இழைத்தவர்களின் முகத்தை காணக்கூடாது என்று வேத சாஸ்திரம் உரைக்கின்றது என்று கூறி, இனி மேற்கொண்டு முடிவெடுப்பது உனது கரங்களில் தான் உள்ளது என்றார். நாரதர் தற்பொழுது, இறுதி பாணத்தையும் வெற்றிகரமாக ஏவிவிட்டு நாராயண நாராயண என கூறி தம் அடுத்த செயலை செய்ய புறப்பட்டார்.
பிரம்ம தேவரின் புதல்வரான திரிலோக சஞ்சாரியான நாரத முனிவரின் வார்த்தைகள் மேலும், மேலும் குமரனின் கோபத்தை அதிகப்படுத்தின. தாம் ஏமாந்ததை எண்ணி என்ன செய்வது என்று அறியாமல் தனது தாய், தந்தையை காண விரைந்தார்.
குமரன் கடும் சினத்தோடு வேகமாக வருவதை கண்ட பார்வதி தேவி, குமரா ஏன் இவ்வளவு சினத்துடன் இருக்கின்றாய் என்று கேட்டார். குமரன் சினத்துடன் நீங்கள் தமையனுக்கு தான் கனியை கொடுக்க வேண்டும் என்று எண்ணினால் நீங்கள் முன்னரே கொடுத்திருக்கலாமே. அதற்காக என்னை ஏமாற்ற வேண்டியதில்லையே என்று கூறினார்.
பார்வதி தேவியோ குமரா.. இங்கு யாரையும் நாங்கள் ஏமாற்றவில்லையே. கணபதிதான் போட்டியில் வெற்றி கொண்டு இக்கனியை பெற்றான் என்று கூறினார். மேலும், பார்வதி தேவி கணபதி என்று சொல்லும் முன், போதும் தாயே இனி நான் எந்த விளக்கங்களையும் கேட்க விரும்பவில்லை என்று கூறி கைலாய மலையை விட்டு மிகவும் சினத்துடன் ஆறுமுகன் புறப்பட்டார். அவ்வேளையில் குமரனின் சினத்தை குறைக்க அனைவரும் முயன்றனர். இருப்பினும் எவ்விதமான பலன்களும் கிடைக்கவில்லை.
கணபதியும் முருகனை சமாதானப்படுத்த, தான் பெற்ற ஞானக்கனியை கொடுத்தார். இருப்பினும் அந்த கனியை பெறாமல் இக்கனியானது உன்னுடையது என்று கூறி அவ்விடத்தை விட்டு சென்றார். கணபதியும் மற்ற தேவர்களும் முயன்றும் குமரனின் சினத்தை குறைக்க முடியவில்லை.
குமரனுக்கு தான் ஏமாற்றப்பட்டேன் என்ற எண்ணம் அதிகரிக்க அதிகரிக்க குமரனின் வருத்தமும், சினமும் மேலும் அதிகரித்தன. கோபம் கொண்ட ஆறுமுகன் இனி எதற்கு இந்த ஆடம்பர உடைகள், ஆபரணங்கள் என அனைத்தையும் களைத்தெறிந்து வீசினார்.
மேலும், கரங்களில் தண்டாயுதத்தை ஏந்தி கோவணத்துடன் புறப்பட்டார். அவ்வேளையில் பார்வதி தேவியும், சிவபெருமானும் குமரனைத் தடுத்து நிறுத்தினர்.
திருவிளையாடல் புரியும் சிவபெருமானோ தனது மைந்தனை கண்டு நில் குமரா? என்றார். உடனே தன் தந்தையின் வார்த்தைக்கு கட்டுப்பட்டு குமரன் அவ்விடத்திலேயே நின்றார்.
பின் சிவபெருமான் குமரனிடம் பொறுமையாக உன் அன்னை கூறுவதை கேட்பாயாக என்று கூறினார். பார்வதி தேவியோ வீண் கோபம் வேண்டாம் குமரா. உன் தந்தை உரைத்தப்படியே நீயும் இந்த உலகை வலம் வரச் சென்றாய்.
ஆனால், கணபதியோ இந்த உலகை தன்னுடைய அறிவின் மூலம் வலம் வந்து உன்னை வெற்றிக்கொண்டான் என்றார்.
அதாவது, தாய் தந்தையரை பூஜித்து அவர்களை வலம் வந்தால் இந்த உலகை சுற்றி வந்த பலன் கிடைக்கும் என வேதங்கள் கூறுகின்றன. அதன்படி, கணபதியும் எங்களை பூஜித்து வலம் வந்து கனியை பெற்றுக் கொண்டான் என்றார்.
பார்வதி தேவி பலமுறை உரைத்தும், சிவபெருமான் தடுத்தி நிறுத்தியும் சினம் தனியாத குமரன் இம்முறை தன் தந்தையின் வார்த்தையைக் கேட்டும் நிற்காமல் கைலாய மலையை விட்டு புறப்பட்டு குன்று மலைக்கு சென்று தங்கினார்.
குமரன் சினத்துடன் கைலாய மலையை விட்டு தனித்த குன்றுக்கு சென்றது மிகவும் கவலையளிக்க பார்வதி தேவியும் தனது புத்திரனை காண குமரன் தங்கி இருக்கும் குன்றுக்கு சென்றார். பார்வதி தேவி பலவாறு குமரனை சமாதானப்படுத்தியும் சமாதானம் கொள்ளாமல் வேறு இடம் செல்ல முயன்றார்.
சிவபுராணம் நாளையும் தொடரும்....
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக