திங்கள், 10 பிப்ரவரி, 2020

கர்ணன் மற்றும் துரோணர்...!


ங்கை நதியில் விடப்பட்ட குழந்தை அதிரதனால் கண்டெடுக்கப்பட்டான். அதிரதன், அரசர் திரிதிராஷ்டிரனின் தேரோட்டி ஆவார். அதிரதனும் அவரது மனைவி ராதாவும் அக்குழந்தைக்கு கர்ணன் என பெயர் சூட்டி தங்களின் சொந்த மகனாகவே வளர்த்தனர். அனைவரும் கர்ணனை ராதேயன் என்றும் அழைத்தனர். கர்ணன் தன் பெற்றோர்கள் மீது அளவுக்கதிகமாக அன்பு, மரியாதை மற்றும் பாசத்தை வைத்திருந்தான். கர்ணன் அவர்களின் மகனாக தனது கடமைகளை விருப்பத்துடன் செய்து வந்தான். கர்ணன், அனைவரிடமும் பாசமாகவும், அன்பாகவும் நடந்துக் கொள்வான். கர்ணனுக்கு, பாண்டவர்களிடமும், கௌரவர்களிடமும் நட்பு ஏற்பட்டது.

கர்ணனுக்கு சிறுவயதில் இருந்தே, வில் வித்தையை முழுமையாக கற்று கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் இருந்தது. அதனால் கர்ணன் தனக்கு ஏற்றவாறு ஒரு வில்லை செய்து கற்றுக் கொண்டு வந்தான். அதிரதனும், அவனின் மனைவி ராதாவும், சூத்திரர்கள் வில்லை பயன்படுத்தக் கூடாது. சத்தியர்களுக்கு மட்டுமே அந்த உரிமை உள்ளது எனக் கூறி எவ்வளவோ தடுக்க முயன்றனர். கர்ணன், தந்தையே! சத்தியர்கள் மட்டும் தான் அனைத்து கலைகளையும் கற்றுக் கொள்ள வேண்டும் என உலக நியதி உள்ளதா? சூத்திரர்கள் கற்றுக் கொள்ள கூடாதா? எனக் கேட்டான். இவ்வாறு கேட்ட தன் மகனுக்கு எப்படி பதில் செல்வது என தெரியாமல் திகைத்து நின்றான் அதிரதன். கர்ணன், சூத்திரர்களுக்கும் சமுதாயத்தில் சம உரிமை உண்டு என்று போராட ஆரம்பித்தான். ஆனால் கர்ணன் வில்வித்தை கற்று கொள்வதில் ஆர்வமாக இருந்தான்.

துரோணர், அஸ்தினாபுரத்தின் இளவரசர்களுக்கு வில்வித்தைகளை கற்றுக் கொடுக்க சம்மதித்தார். அதன் பின் இளவரசர்கள் அனைவரும் கலைகளையும், வித்தைகளையும் கற்க சென்றனர். துரோணர் எனக்கு மாணவர்கள் 106 பேர் என்றார். பீஷ்மர், துரோணரே! இளவரசர்கள் மொத்தம் 105 பேர் தானே எனக் கேட்டார். துரோணர், எனது மகன் அசுவத்தாமனும் இருக்கிறான் என்றார். துரோணர் கலைகளை கற்று கொடுக்கும் முன், மாணவர்கள் அனைவரிடமும், உங்களின் கல்வி முடிந்தவுடன் எனக்கு குரு தட்சணையாக நீங்கள் பாஞ்சால தேசத்தை தர வேண்டும் என்றார். துரோணர் இவ்வாறு கூறியதும் மாணவர்கள் சிறிது மௌனமாக இருந்தனர். அப்பொழுது அர்ஜூனன், குருவே! உங்களுக்கு பாஞ்சால தேசத்தை தருகிறேன் எனக் கூறினான்.

இவ்வாறு அர்ஜூனன் அனைவர் முன்பு கூறியதால், துரோணர் அர்ஜூனனை பார்த்து ஈர்க்கப்பட்டான். துரோணர், அனைவருக்கும் கலைகளை கற்று கொடுக்க ஆரம்பித்தார். இதில் அர்ஜுன் தன்னை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்டு கற்றான். இதைப் பார்த்த துரோணர், அர்ஜூனன் மேல் தனி கவனம் செலுத்தினார். துரோணர், அர்ஜூனனுக்கு அதிக கவனம் செலுத்துவதை பார்த்த துரியோதனனுக்கு பாண்டவர்கள் மேல் கோபம் இன்னும் அதிகமானது. ஒரு நாள் அசுவத்தாமன் தன் தந்தை துரோணரிடம் தந்தையே! தாங்கள் என்னை காட்டிலும் அர்ஜூனன் மேல் அதிக கவனம் கொல்வது ஏன்? எனக் கேட்டான். துரோணர், மகனே! இதற்கான காரணத்தை நீ விரைவில் தெரிந்துக் கொள்வாய் எனக் கூறிவிட்டு கங்கை நதிக்கரைக்குச் சென்றார்.

நதியில் கை, கால்களை அலம்பி கொண்டிருந்த துரோணரின் காலை முதலை கவ்விக் கொண்டது. துரோணர் வலியால் அலறினார். துரோணரின் அலறல் சத்ததைக் கேட்டு மாணவர்கள் ஓடி வந்து பார்த்தனர். குருவின் இந்த நிலைமையைக் கண்டு மாணவர்கள் என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்து நின்றனர். அசுவத்தாமனுன் தந்தையை எவ்வாறு காப்பாற்றுவது என்பதை தெரியாமல் நின்று பார்த்துக் கொண்டிருந்தான். அப்பொழுது அர்ஜூனன், முதலையை நோக்கி ஒரு அம்பை எய்தினான். முதலை வலி தாங்க முடியாமல், துரோணரின் காலை விட்டுச் சென்றுவிட்டது. அர்ஜூனன் இச்செயலை துரோணர் மிகவும் பாராட்டினார். அதன் பிறகு அசுவத்தாமனை அழைத்து, மகனே! அர்ஜூனன் மேல் அதிக கவனம் செலுத்துவது எதற்காக என்று கேட்டாயா? அதற்கான பதில் இப்பொழுது புரிகிறதா என்றார்.

மாணவர்கள் கலைகள் அனைத்தையும் சிரத்தையுடன் கற்றுக் கொண்டு வந்தனர். மாணவர்களின் திறனை சோதிக்க விரும்பிய துரோணர், அவர்களுக்கு ஒரு பரீட்சை வைத்தார். யுதிஸ்டிரனிடம் ஒரு வில்லைக் கொடுத்து, தொலைவில் உள்ள மரத்தை காண்பித்து அதில் என்ன தெரிகிறது எனக் கேட்டார். யுதிஷ்டிரன், குருவே! எனக்கு ஒரு பறவை தெரிகிறது என்றான். துரோணர் மறுபடியும் கேட்டார். யுதிஷ்டிரன் மறுபடியும் பறவையே தெரிகிறது என்றான். துரோணர் மறுப்படி மறுப்படி கேட்க, யுதிஷ்டிரன் இதே பதிலை கூறினான். இதனால் எரிச்சல் அடைந்த துரோணர் வில்லை வேறோரு மாணவனிடம் கொடுத்தார். அவனும் மரத்தில் பறவை மட்டும் தெரிவதாக கூறினான்.

துரியோதனன், முதற்கொண்டு அனைவரும் இவ்வாறாக கூறினர். கடைசியில், வில்லை அர்ஜூனனிடம் கொடுத்தார். அர்ஜுனன், எனக்கு அம்மரத்தில் உள்ள பறவையின் கண் தெரிகிறது என்றான். துரோணர், அதை நோக்கி உனது பாணத்தை தொடுக்கவும் என்றார். அர்ஜூனனும் அவ்வாறே பாணத்தை ஏவினான். துரோணர், அர்ஜூனனின் திறமையை மிகவும் பாராட்டினார். துரோணர், அர்ஜூனா! நான் உனக்கு வில் வித்தையின் அனைத்து நுணுக்கங்களையும் கற்றுத் தருவேன். உன்னைக் காட்டிலும் சிறந்த வீரர் இவ்வுலகில் எவரும் இருக்க மாட்டார்கள் எனக் கூறினார். இதைக் கேட்டு அர்ஜூனன் அளவற்ற மகிழ்ச்சி அடைந்தான்.

தொடரும்...!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Follow and Join with US

தினமும் எங்கள் வாசகர்கள் மற்றும் நண்பர்கள் பல்வேறு செய்திகளை பெறுகின்றனர் நீங்களும் இணைத்து எங்களை வழி நடத்துங்கள்